

ஏழ்மையும் வறட்சியும் இருத்தலியல் சிக்கல்களும் நிறைந்த மூன்றாம் உலக நாடுகளின் கிராமங்களுக்கு எப்போதும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவை அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்படும் வரை அமைதியாக இருக்கும். ஏதோ ஒரு காரணத்திற்காகத் தற்செயலாக அவை 'பிரபலமாகும்' போதுதான் அந்த மக்களின் வெள்ளந்தித் தனமும், பிழைப்புக்கான போராட்டமும் உலகுக்குத் தெரியவரும்.
அந்த வரிசையில் நம்மால் மறக்க முடியாத, ஆமீர் கான் தயாரித்த ‘பீப்ளி லைவ்’ (இந்தி) மற்றும் ‘தி போப்ஸ் டாய்லெட்’ (ஸ்பானிஷ் - உருகுவே) ஆகிய படங்களின் வரிசையில், மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் இறுதிப் படைப்பான ‘கெணத்தக் காணோம்’ ஈடுகொடுக்கிறதா என்று பார்க்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கோடாங்கிப்பட்டி கிராமம், தன் தாகம் தீர்க்க ஒரு கிணறு வெட்டத் தொடங்குகிறது. ஆனால், பத்தடி ஆழத்திலேயே தண்ணீருக்குப் பதிலாக ஒரு 'டைனோசர் எலும்புக்கூடு' கிடைக்கிறது. அவ்வளவுதான் அத்தோடு கிராமத்தின் அமைதி கலைந்து, தொல்லியல் துறை, காவல்துறை, ஆளும் கட்சி என அதிகார வர்க்கம் அங்கே ஊடுருவுகிறது.
'பீப்ளி லைவ்' படத்தில் ஒரு விவசாயியின் தற்கொலை முடிவை ஊடகங்கள் வியாபாரமாக்கியது போல, 'தி போப்ஸ் டாய்லெட்' படத்தில் போப்பின் வருகையை வைத்து ஓர் எளிய மனிதன் தன் வறுமையை விரட்டக் கழிவறை கட்டியது போல, இங்கும் கோடாங்கிப்பட்டி மக்கள் தங்கள் நிலத்திற்கு அரசாங்கம் பெரும் விலை கொடுக்கும், தங்கள் தாகம் தணிக்கப்படும் எனக் கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ வேறு!
சுரேஷ் சங்கையாவின் முதல் இரண்டு படைப்புகளான ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களில் நாம் ரசித்த அந்த அசல் மண்ணின் மணம் இதிலும் உண்டு. ஊர்க்கோயில் பூசாரியாக வரும் கதையின் நாயகன் மணி வாசகத்தின் (யோகி பாபு) கைகூடாத காதல் திருமணத்தை, ஊரின் தண்ணீர் பிரச்சினையுடன் இணைத்தவிதம் நன்றாகவே எடுபட்டிருக்கிறது.
ஆனால், கிணற்றில் கிடைத்த எலும்புக்குப் பிறகு கதை தடால் என்று அதிகார வர்க்கத்தின் அத்துமீறலாக படம் மாறுவது பல படங்களின் பார்த்த விஷயமாக இருப்பதால், கோடாங்கிப்பட்டி கிராம மக்களின் வறட்சி மற்றும் திடீர் நெருக்கடியுடன் உடனடி ‘கணெக்ட்’ கிடைக்காமல் நாமும் தொண்டை வறண்டு தவிக்க வேண்டியிருக்கிறது.
படம் சொல்ல வரும் அரசியல் ஆழமானது; ஆனால் அதைச் சொன்ன விதம் தேய்வழக்காக நம் பொறுமையைச் சோதிக்கிறது. இருப்பினும், அரசு செய்யத் தவறுவதை ஒரு சாமானியன் தன் தந்திரத்தால் எப்படிச் சாதிக்கிறான் என்கிற கிளைமாக்ஸ், ஓர் எளிய மனிதனின் ‘சர்வைவல்’ வெற்றியாகப் பதிவாகிறது.
மணிவாசகமாக வரும் யோகி பாபு, தனது வழக்கமான காமெடி 'ஒன்லைனர்களை' ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர் நலன் விரும்பியாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதேபோல் கவிஞர் விக்கிரமாதித்தியன், நாயகி லவ்லின் மற்றும் அந்தக் கிராமத்து மனிதர்கள் அனைவரையும் 'நடிக்க' வைக்காமல் 'வாழ' வைத்திருப்பது சுரேஷ் சங்கையாவின் தனிச்சிறப்பு.
வி.தியாகராஜனின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த வறண்ட கிராமத்தின் வெக்கையையும், மண் வீடுகளின் வெடிப்புகளையும் அவர் காட்டியிருக்கும் விதம், நம்மை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை இன்னும் கொஞ்சம் உயிர்ப்புடன் இருந்திருக்கலாம்.
'கெணத்தக் காணோம்' - உலக சினிமாவின் அந்த உன்னதப் படங்களின் உயரத்தைத் தொடாவிட்டாலும், எளிய மக்களின் வாழ்வியலை ராவான நகைச்சுவையுடன் பதிவு செய்திருப்பதில் வெற்றி பெறுகிறது. அதிகார வர்க்கத்தை எளிய மக்கள் தங்கள் 'வெள்ளந்தித் தனத்தால்' எப்படி டீல் செய்கிறார்கள் என்பதைக் காண ஒருமுறை தண்ணீர் வராத ‘கெண’த்துக்கு விசிட் அடிக்கலாம்.