

அறிவியல் புனைவுக் கதைதான் எதிர்காலத்தில் நடக்குமா? அரசியல் கதை எதிர்காலத்தில் நடக்காதா?!
2042ஆம் ஆண்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வசிக்கும் 'தாய்நாடு' மாநிலத்தில் (தணிக்கைக்குப் பயந்து இயக்குநர் வைத்திருக்கும் இந்தப் பெயர் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைக்கிறது) கதை நடக்கிறது. எதிர்காலத்தில் நடக்கும் ஒரு 'பியூச்சரிஸ்டிக்' அரசியல் த்ரில்லர் கதையாகக் காட்டப்பட்டாலும், நாம் இன்று அன்றாடம் செய்திகளில் பார்க்கும் நிஜ அரசியல் முகங்களையும், அதிகார மோதல்களையும் கண்முன்னே நிறுத்த முயன்றுள்ளார் அறிமுக இயக்குநர் ராகுல் அசோக். அவரின் முதல் முயற்சி எப்படி அமைந்தது என்று பார்ப்போம்.
பள்ளிப்பருவத்திலிருந்து யாராலும் கவனிக்கப்படாதவர் கதையின் நாயகி வேணி (அபர்ணதி). தன் மீது கருணையும் அக்கறையும் கொள்ளாத சமூகத்தின் மீதிருந்த ஆற்றாமையில் வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடவேண்டும் என்று கடுமையாக உழைத்துப் படித்து ஐஏஎஸ் ஆகி மாவட்ட கலெக்டர் ஆகிறார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல்வாதிகளைச் சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் வேணி, அதிகாரத்தில் இருக்கும் இல்லாத அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையையும் சம்பாதிக்கிறார்.
அதன் விளைவாக ஆட்சிப்பணியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இந்நிலையில் தாய் நாடு மாநிலத்துக்குத் தேர்தல் வர, அங்கே தன் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என விரும்பும் பெண் பிரதமர் (மங்கள்), அபர்ணதியின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த வேலையை அவரிடம் கொடுக்கிறார். தாய் நாட்டில் அவரை எதிர்த்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் இப்போது அவர் பேச்சைக் கேட்க நேர்கிறது.
அதே சமயம் மத்தியிலிருந்து ஆட்சியை ஆட்டுவிக்கும் பலே அரசியல்வாதியும் உள்துறை அமைச்சருமான மாதவ் (ஜான் விஜய்) பிரதமர் பதவிக்கே குறி வைத்துக் காய் நகர்த்த, இப்போதைய தாய் நாடு தேர்தல் முக்கியத்துவம் பெற, மாதவின் எதிர்ப்பின் முன்னால் வேணியால் வெல்ல முடிந்ததா என்பது கதை. சமூகத்தால் கவனிக்கப்படாத ஒரு சிறுமி, தன் மீதான அலட்சியத்தையே உரமாக்கிக் கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உயர்வது வரை வேணியின் (அபர்ணதி) கதாபாத்திரம் எழுதப்பட்டவிதம் நன்று. நாயகியாக நடித்துள்ள அபர்ணதி இப்படத்தில் நடிக்கவில்லை, வேணியாகவே வாழ்ந்திருக்கிறார்.
அன்பு கிடைக்காத இடத்தில் அதிகாரம் கிடைத்தால், அது எவ்வளவு மூர்க்கமாக மாறும் என்பதற்கு அபர்ணதியின் கண்கள் சாட்சி. ஆட்சியராக அரசியல்வாதிகளைச் சட்டை செய்யாமல் தட்டித்தூக்கும் போதும், பின்னர் பிரதமர் மங்களின் நம்பிக்கைக்குரிய ‘மூளை’யாக மாறி ஒட்டுமொத்தத் தேர்தலையும் ஆட்டிப்படைக்கும் போதும், அவரது ஆளுமைத் திறன் படத்தை ஒரு கிளாசிக் த்ரில்லர் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது.
பிரதமர் பதவி மீது கண் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் மாதவ் (ஜான் விஜய்) மற்றும் ஒரு மாநிலத்தின் தேர்தலைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கும் வேணிக்குமான அரசியல் ஆடுகளமாக மாறும் காட்சிகளில் நடிகர்களின் நடிப்பும் சம்பவங்களும் இருக்கையில் உட்கார வைக்கின்றன.
அமைச்சர் பாலாஜியாக வரும் சரவண சுப்பையா,, காளி வெங்கட், முதலமைச்சராக இளவரசு, முன்னாள் முதல்வர், இந்நாள் ஆளுநராக தாய்நாடு வரும் ஒய்.ஜி.மகேந்திரன் என பிரபலமான குணச்சித்திர நடிகர்களின் நடிப்பு கதைக் களத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியிருக்கிறது.
அபர்ணதி மற்றும் ஜான் விஜய்யை அதீதப் புத்திசாலியாகக் காட்ட வேண்டும் என்பதற்காக முதல்வர் இளவரசு, எதிர்க்கட்சித் தலைவர் லிவிங்ஸ்டன், பெண் பிரதமர் போன்றவர்களை முட்டாள்களாகச் சித்தரித்திருப்பது இயக்குநரின் கவனக்குறைவு. கதை 2042இல் நடப்பதாக இருந்தாலும், இயக்குநர் ராகுல் அசோக் கையாளும் அரசியல் நிகழ்வுகள் இப்போதே நடந்து கொண்டிருப்பவைதான்.
அதனால் ‘எதிர்காலம்’ என்கிற அந்த லேபிள் படத்திற்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், திரைக்கதையின் முடிவில் சச்சுவின் கதாபாத்திரம் வழியாக இயக்குநர் வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட், சுவாரசியம். ஓர் இடைவேளைக்குப் பிறகு காணும் வாய்ப்பைத் தந்திருக்கிறார் திறமையான ஒளிப்பதிவாளரான எம்.எஸ்.பிரபு.
கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை, அரசியல் சூழ்ச்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, காட்சிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறது. வெஞ்சென்ஸ் - வெறும் பழிவாங்கல் கதையல்ல, அது ஒரு பெண்ணின் அதிகாரப் பசி மற்றும் தன்னை மதிக்காத சமூகத்தின் மீதான ஆழ்மனக் கோபத்தின் வீச்சு. எத்தனை மாதவ்கள் வந்தாலும் வேணி போன்ற லட்சிய வேங்கைகளை வேட்டையாடி ஒழித்துவிடமுடியாது.
அவர்கள் களையெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். விஷச் செடிகள் தப்பமுடியாது என்பதைச் சித்தரித்தவிதம் நன்று. குறிப்பாக, அபர்ணதியின் அதிரடியான நடிப்புக்காகவும், கார்த்திக் ராஜாவின் இசைக்காகவும் எம்.எஸ்.பிரவுவின் ஒளிப்பதிவுக்காகவும் இந்தப் படத்தைத் தாராளமாக ரசிக்கலாம்.