

துள்ளல் மிகுந்த நடிப்பு, துடிப்பான இசை, உற்சாகமான நடன அசைவுகள் என இளமையின் கொண்டாட்டமாக அமைந்தவை ஷம்மி கபூரின் படங்கள். அறுபதுகளின் திரையை ஆட்டிப்படைத்ததில், ‘இந்தியாவின் எல்விஸ் பிரெஸ்லி’யாக ரசிகர்கள் அவரை அங்கீகரித்தனர்.
ஷம்மி கபூர் திரையுலகில் கால்வைத்தபோது, அவருடைய அண்ணன் ராஜ்கபூர், திலீப்குமார், தேவ் ஆனந்த் என மூன்று பெரிய நடிகர்கள் பாலிவுட்டை ஆக்கிரமித்திருந்தனர். அந்த மூன்று பெரிய மலைகளை உடைத்துக்கொண்டு ரசிகர்களைக் கவரும் அவரின் தொடக்க முயற்சிகள் தோற்றன. ஐம்பதுகளின் மத்தியில் அறிமுகமாகி சுமார் டஜன் திரைப்படங்களுக்கும் மேலாக தோல்வியை மட்டுமே ருசித்தார் ஷம்மி கபூர். அவரது தனித்துவ உற்சாக இயல்பு, வரிசையான தோல்விகளைக் கடந்து நடைபோடத் துணை நின்றது. எப்போதும் நண்பர் குழாம் சூழ வலம்வருவார்.
அனைவரும் சேர்ந்து நாடகம் போடுவார்கள்; வேட்டைக்குப் போவார்கள்; இசைப்பார்கள்; சினிமா பார்ப்பார்கள். அந்தத் தருணத்தை மட்டுமே கொண்டாடும் சுதந்திரப் பறவையாக அவர் இருந்தார். அப்படித்தான் பிருத்விராஜ் நாடக நிறுவனத்திலிருந்து சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார் ஷம்மி கபூர். நாயகனாக மட்டுமன்றி, குணச்சித்திரம், எதிர் நாயகன் எனப் பலவற்றிலும் தோன்றினார். ஒன்றிரண்டு சுமாராகவே ஓடினாலும் அதற்கான பெயரை உடன் நடித்த எவரேனும் தட்டிப்போனார்கள். ஷம்மி கபூர் கவனிப்பாரற்றுக் கிடந்தார்.
நிஜத்தின் பிரதிபலிப்பு
எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஷம்மி கபூர், தனது தோல்விப் படங்களைத் தொகுத்துப் பார்த்த பின்பு, சொந்த இயல்புகளை அடுத்தடுத்த படங்களில் சேர்க்க முயன்றார். அதிகம் பிரபலமாகாத ஆஷா பரேக்குடன் ஜோடி சேர்ந்த ‘தில் தேகே தேகோ (1959)’ முதல் வெற்றியை ஷம்மி கபூருக்குத் தந்தது. தொடர்ந்து சாய்ரா பானுவுடன் இணைந்த ‘ஜங்க்ளி’(1961) பெரும் வெற்றியடைந்தது. தனது உண்மையான கொண்டாட்ட இயல்பைத் திரையிலும் பிரதிபலித்தால், ரசிகர்களை ஈர்க்க முடியும் என்பதை ஷம்மி கபூர் இந்தத் தொடக்க வெற்றிகள் மூலம் உணர்ந்தார்.
‘யாஹூ...’ என்ற உற்சாகக் குரலை வைத்தே சிறுவன் ஷம்மி கபூரின் திசையை கபூர் குடும்பத்தினர் உறுதிசெய்வார்கள். ‘ஜங்க்ளி’ திரைப்படத்தில் இமயமலைச் சாரலில் படமான ‘சாஹே கோயி முஜே...’ பாடலின் தொடக்கமாய் ‘யாஹூ...’ என்று ஷம்மி கபூர் கத்துவதைப் படக்குழுவினர் பயத்துடனே பார்த்தார்கள். ஆனால், அப்பாடலில் ஷம்மி கபூரிடம் கொப்பளித்த உற்சாகம், மூலைமுடுக்கெல்லாம் ‘யாஹூ...
’வை எதிரொலிக்க வைத்தது. இளசுகள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் அப்படி சத்தமிடுவது இளமையின் அன்றைய பாவனையானது. மேற்கத்திய இசையில் ‘ராக் அண்ட் ரோல்’ ராஜாவாகப் புகழடைந்திருந்த எல்விஸ் பாணியில், ஷம்மி தனது பிம்பத்தைக் கட்டமைத்ததும் இந்தப் படத்தில் இயல்பாக ஈடேறியது. இசையும் துள்ளாட்டமும் ஷம்மி கபூரின் இயல்புடன் ஒன்றியிருந்ததால் சிரமமின்றி ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்க்கத் தொடங்கினார்.
காஷ்மீர் முதல் நயாகரா வரை
ஷம்மி கபூரின் படங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு ரசிகர்களை இழுத்துச் சென்றன. ஊர்சுற்றியான ஷம்மியின் ஆர்வத்துக்கு, ‘ஜங்க்ளி’ படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுபோத் முகர்ஜி உடன்பட்டார். காஷ்மீரில் வெளிப்புறப் படப்பிடிப்பு என்றதும் அதை அர்த்தத்துடன் கௌரவிக்க கோடக் நிறுவனத்துடன் பேசி ஈஸ்ட்மன் கலருக்கு ஏற்பாடு செய்தார் ஒளிப்பதிவாளர் என்.வி.ஸ்ரீனிவாஸ். பனிமலைச் சாரல் பின்னணியில் படமான ‘ஜங்க்ளி’ வெற்றியடைந்ததும், ஈஸ்ட்மன் கலருக்கு எல்லோரும் மாறத் தொடங்கினர். தொடர்ந்து நாட்டின் எழில் கொஞ்சும் இயற்கைப் பிரதேசங்கள், ஷம்மி கபூர் திரைப்படங்களின் தனித்த அடையாளமாயின.
அதன் உச்சமாய் ‘அன் ஈவ்னிங் இன் பாரிஸ்’(1967) படத்துக்காக பரதேசம் போனார்கள். பாரிஸ், சுவிட்சர்லாந்து, பெய்ரூட் என மூன்று நாடுகளில் படமாக்கினார்கள். நயாகரா அருவியின் அருகில் கிளைமாக்ஸ் விரட்டல் காட்சிகளைப் படமாக்கி இணைத்ததை இந்திய ரசிகர்கள் வாய்பிளந்து ரசித்தனர்.
இளம்வயது எல்விஸ் போலவே ஷம்மி கபூருக்கும் கேசம் முன் நெற்றியில் விழுந்து புரளும். அவற்றை மேலும் சிலுப்பிக்கொண்டு துள்ளிக் குதித்து நடனமாடுவார். தனக்கான நடனங்களைப் பெரும்பாலும் தானே வடிவமைப்பார். ராஜ்கபூர்-திலீப்குமார்-தேவ் ஆனந்த் உட்பட அப்போதைய நடிகர் எவரும் தொடாத இந்தக் காலியிடத்தை ஷம்மி கபூர் நிரப்பினார். அந்தத் துள்ளாட்டத்துக்கு அவரது பல படங்களில் பணியாற்றிய ஷங்கர்-ஜெய்கிஷன் இணை, இசையால் சிறப்புச் சேர்த்தனர்.
குணச்சித்திரத்திலும் மிளிர்ந்தார்
ஆடலும் பாடலும் இசையும் கண்கவர் வெளிப்புறக் காட்சியுமாக இளமை ததும்பும் ஷம்மி கபூர் படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். முன்னணி நடிகையருடன் தோன்றி தோல்விப் பாடம் கற்ற ஷம்மி கபூர், அதன் பின்னர், ஆஷா பரேக், சாய்ரா பானு, ஷர்மிளா தாகூர் எனப் புதிய ஜோடிகளுடன் வெற்றிகரமான படங்களைத் தந்தார். ‘புரஃபசர்’, ‘சைனா டவுன்’, ‘பிரம்மசாரி’ தொடங்கி ‘அந்தாஸ்’ (1971) வரை அவரது வெற்றிப் பயணம் பழுதின்றிச் சென்றது. அதன் பின்னர் உடல் பருமனால் பழைய துள்ளாட்டத்தைத் தொலைத்தார்.
ரசிகர்களின் ஏமாற்றத்தையும் யதார்த்தத்தையும் ஏற்றுக்கொண்டவராகச் சற்று இடைவெளிவிட்டு, குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம் வரத் தொடங்கினார். தமிழின் ‘அமரன்’ (1992) வரை பலமொழிகளிலும் நடித்த அவர், தொலைக்காட்சி தொடர்களிலும்கூட நடித்தார். அதற்குக் காரணமென ‘என்னால் எப்போதும் தனிமையில் இருக்க முடியாது’ என்பார். தனிமையை வெறுத்ததுடன் தன்னை இளமையாக உணர்வதை எழுபது வயதான பின்னரும் வெளிக்காட்டினார்.
பின்னர் இணையத் தொடர்பில் ஐக்கியமாகி, கபூர் குடும்பங்களுக்கான பிரத்யேக வலைத்தளம், ட்விட்டர் என ரசிகர்களுடன் நேசம் பரிமாறினார். ‘இணையப் பயன் பாட்டாளர்களுக்கான இந்திய சமூகம்’ என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். அண்ணன் ராஜ்கபூரின் பேரன் ரன்பீர் கபூருக்காக ‘ராக்ஸ்டார்’ (2011) படத்தில் தனது திரை வாழ்வை நிறைவுசெய்தார். இறுதிக் காலம் நெருங்குவதை அறிந்தவராக, இளமையில் தான் பறந்து நடித்த வெளிநாட்டுத் தலங்களைத் தள்ளாத வயதிலும் நேரில் ரசித்து மகிழ்ந்த பின்னரே இயற்கையின் அழைப்பை 2011-ல் ஏற்றுக்கொண்டார்.
பாடகரும் நடிகருமான கிஷோர்குமார் கதாநாயகனாக நடித்த ‘மேம் சாகிப்’ (1955) படத்தில் அவருக்கு எதிரான வேடத்தில் அப்போது வளர்ந்து வந்த ஷம்மி கபூர் தோன்றினார். பிற்பாடு தன்னை மிஞ்சி திரையில் வளர்ந்ததால் ஷம்மி கபூருக்குப் பின்னணி பாட கிஷோர் குமார் தயங்கினார் என்பார்கள். அதுவும் ஷம்மி கபூருக்கு வரப்பிரசாதமானது. ஷம்மியின் துள்ளாட்டப் பாடல்கள் அனைத்திலும் முகமது ரபி தனது குரலால் உயிரூட்டி இருப்பார். முகமது ரபி மறைந்து, ஷம்மி கபூர் குணச்சித்திர வேடமேற்ற பின்னரே அவருக்கு கிஷோர் குமார் குரல் வாய்த்தது.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
படங்கள்: ‘தி இந்து’
ஆவணக் காப்பகம்