Published : 30 Aug 2019 12:22 PM
Last Updated : 30 Aug 2019 12:22 PM

டிஜிட்டல் மேடை: அசத்தல் பகடி அரங்கம்

எஸ்.எஸ்.லெனின்

வலைத்தொடர்கள், பிரத்யேகத் திரைப்படங்கள், ஆவணப் படங்கள் வரிசையில், ‘ஸ்டாண்ட்-அப்-காமெடி’க்கும் இணைய மேடையில் தனியிடம் உண்டு. பரவலான சர்வதேச மேடைப் பகடியாளர்கள் மத்தியில் இந்திய சாதனையாளர்களுக்கும் அமேசான் பிரைம் வீடியோ அங்கீகாரம் தந்து வருகிறது.

பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இவர்கள் கிச்சுக்கிச்சு மூட்டுவார்கள் என்றபோதும், அவர்களில் சிலரின் தமிழகப் பின்னணி ஆச்சரியமூட்டுகிறது. அப்படி, கடந்த வாரம் அமேசான் அரங்கேற்றிய ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ என்ற தலைப்பில் இசையும் நகைச்சுவையும் கலந்தடித்த அலெக்ஸாண்டர் பாபுவின் பல்சுவை காமெடியை ரசிக்க முடிந்தது.

ராமநாதபுரம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்து சென்னையில் பொறியியல், அமெரிக்காவில் மேற்படிப்பு, ஐடி நிறுவனத்தில் அடிமை ஊழியம், யோகா ஆசிரியராக நிபுணத்துவம் என்று அலைபாய்ந்த அலெக்ஸின் முன்கதை சித்தரிப்புடன் ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ தொடங்குகிறது. தொடர்ந்து சுமார் இரண்டேகால் மணி நேரத்துக்கு நீளும் ஸ்டாண்ட் அப் காமெடியில், தமிழ் சினிமாவின் இசை, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரையும் ரசிக்கத்தக்க விதத்தில் பகடிப் பொருளாக்குகிறார் அலெக்ஸ். பேச்சுடன் அவரே பாடவும் செய்கிறார்.

அப்படியே இசைக் கருவிகளை இசைப்பதுடன், இடையிடையே பிரபலங்களின் குரல்களில் ‘மிமிக்ரி’யும் செய்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான் வரையிலான திரையிசைப் பாடல்களில் இழையோடும் பல்வேறு பாடகர் குரல்களின் தனித்துவத்தை நமக்குப் பரிச்சயமான பாடல்களின் வழியே நகைச்சுவையுடன் கூராய்வு செய்கிறார். மறக்கடிக்கப்பட்ட மலேசியா வாசுதேவனின் கந்தர்வக் குரல், சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரல், கமல்ஹாசன் குரலில் மிதக்கும் மென்சோகம், வரிகளுக்கு இடையே சங்கதி தூவும் எஸ்.பி.பி-யின் சிரிப்புக் குரல், காமரசம் சொட்டும் பாடலிலும் பக்தி ரசம் சேர்க்கும் யேசுதாஸ் குரல்...

எனப் பல உதாரணப் பாடல்களை உடைத்துப் போட்டுப் பார்வையாளர்களைச் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார் அலெக்ஸ். ‘போங்கோ’ டிரம்ஸ் மூலமே எம்.எஸ்.விஸ்வநாதனின் ஹிட் பாடல்கள் பலவற்றை அலெக்ஸ் அடக்கிக் காட்டும்போது பார்வையாளர்களின் கரகோஷம் எகிறுகிறது. இந்துஸ்தானி, கர்னாடக இசைகளில் அலெக்ஸுக்கு இருக்கும் பயிற்சி, இரண்டும் மணி நேரத்துக்குப் பார்வையாளர்களை இப்படிக் கட்டிப்போட உதவுகிறது. பகடியோ, விதந்தோதலோ பொதுவெளியில் புதிய கோணத்தில் பாடல்கள் அலசப்படும்போது, அவற்றை உடனடியாகக் கேட்டு ரசிக்கத் தூண்டுவதாக அந்தச் சிலாகிப்பு அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் அலெக்ஸ் வெற்றி பெறுகிறார். இசை, பாடல், நகைச்சுவை எனப் பார்வையாளர்கள் ஒன்றியிருக்கும் தருணத்தில், அவர்களை ஈர்க்கும்படியான வாழ்வுக்குத் தேவையான கருத்து ஒன்றையும் தனது பேச்சில் தொட்டுச் செல்வது அலெக்ஸின் பாணியாக இருக்கிறது. இது நிகழ்ச்சிக்கு பார்வையாளர் ஒதுக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக்குகிறது. முக்கியமாக இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் உதாரணங்களை உறுத்தலின்றி ஆங்காங்கே நாசூக்காகப் பரிமாறுவதும், பலவற்றில் தன்னை உதாரணமாக முன்னிறுத்துவதும் வரவேற்புக்குரியவை.
கைக்கெட்டும் இசை வாத்தியங்களின் உதவியுடன் தனிநபராய் அலெக்ஸ் பரிமாறும் திரையிசை ஜூகல்பந்தி ரசிக்கவைக்கிறது.

தொகுப்பின் தொடக்கத்திலும் நிறைவிலுமாக ஒலிக்கும் ‘இந்த பஸ்ஸு போனால் என்ன..?’ என்ற எளிய வரிகளாலான பாடலும், இசையும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. நிகழ்ச்சியில் பகடிக்கு ஆளாகும் பிரபலங்களும் அவற்றைக் கேட்க நேர்ந்தால் ரசிக்கும் வகையிலான நாகரிக நகைச்சுவையே அலெக்ஸ் நிகழ்ச்சியின் தனிச் சிறப்பாக வருகிறது. ஆனாலும், ‘கோரஸ்’ பாடுபவர்களின் நிலைமையை நிகழ்ச்சி நெடுக பரிகாசம் செய்துவிட்டு, நிறைவாக ஏ.ஆர்.ரஹ்மான் வழியே அவர்களுக்கு மரியாதை செய்ய முயல்வது கரும்புள்ளியாகிறது.

சில நேரம், பள்ளி - கல்லூரிப் பருவங்களில் மேசையில் தாளமிட்டு நண்பர்களை வசியப்படுத்தும் இசைத் தோழனை அலெக்ஸ் நினைவூட்டுகிறார்; இருபதாண்டுகளுக்கு முன்னர் மூலைக்குமூலை எதிரொலித்த திண்டுக்கல் லியோனியின் பாட்டுமன்ற பகடிகளின் நவீன வடிவமாக இவரது நிகழ்ச்சி உள்ளது. தொலைக்காட்சிகளின் ஜோடிக்கப்பட்ட ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அரங்கு நிறைந்த ரசிகர்களை இரண்டு மணி நேரம் சளைக்காது ஆளும் அலெக்ஸாண்டர் பாபு போன்றவர்களின் தனித்திறமையை வரவேற்கலாம்.

முன்னோட்டத்தைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x