Published : 24 Jul 2015 12:03 PM
Last Updated : 24 Jul 2015 12:03 PM

சினிமா ரசனை 8: நமக்குத் தெரியாத தொலைக்காட்சித் தொடர்கள்!

திரைப்படங்கள் உலகெங்கும் தற்போது எவ்வளவு ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றனவோ, கிட்டத்தட்ட அதே ஆர்வத்துடன் பார்க்கப்படுவன - தொலைக்காட்சித் தொடர்கள். ‘தொலைக்காட்சி' என்றதும் இந்திய/தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ‘துலாபார'த் தொடர்களைப் பற்றிச் சொல்லவில்லை. திரைப்படங்களின் தரத்தை மிஞ்சும் வகையில் எடுக்கப்படும் உலகளாவிய சீரீஸ்கள்தான் இன்றைய விஷயம்.

இந்தியாவில் கேபிள் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப் பட்ட காலகட்டத்தில் அப்போதைய ஸ்டார் ப்ளஸ் சேனலில் (இப்போதைய ஸ்டார் வேர்ல்ட்) ‘போல்ட் & த ப்யூட்டிஃபுல்' என்ற தொடர் மிகப் பிரபலமாக இருந்தது. அதே காலகட்டத்தில் வெளியான ‘ரெமிங்டன் ஸ்டீல்', ‘ஸ்டார் ட்ரெக்', ‘எக்ஸ் ஃபைல்ஸ்', ‘ஸீனா - வாரியர் ப்ரின்ஸஸ்', ‘லாஸ்ட் வேர்ல்ட்' போன்ற தொடர்கள் பிரபலமாகத் தொடங்கின. இந்தியாவில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமான இத்தொடர்களுக்கெல்லாம் முன்னால், முப்பதுகளிலிருந்தே அமெரிக்காவில் இதுபோன்ற தொடர்கள் பிரபலம்.

ஸ்டார் டிவிக்கு முன்னாலேயே, தூர்தர்ஷனில் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, ‘யெஸ் மினிஸ்டர்’, ‘டேஞ்சர் பே’, ‘ஸ்ட்ரீட் ஹாக்’ போன்ற தொடர்களும் ஒளிபரப்பாயின. இப்படி இந்தியாவில் ஆரம்பித்த அமெரிக்கத் தொலைக்காட்சி சீரீஸ்கள், மெல்ல மெல்லத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கத் தொடங்கின. இதே காலகட்டத்தில் வெளியான ‘பே வாட்ச்' தொடர் பமீலா ஆண்டர்ஸனை இந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாகச் சில காலம் வைத்திருந்தது.

ஆக் ஷன் தொடர்கள் மட்டுமே இல்லாமல், நகைச்சுவை, திகில், மர்மம், துப்பறியும் தொடர்கள், அனிமேஷன் என்று பல்வேறு வகையிலான தொடர்கள் ஸ்டார் டிவியின் மூலம் படையெடுத்து வரத் தொடங்கின. இதன் பின் ஏ.எக்ஸ்.என் (AXN) போன்ற தொலைக்காட்சிகளும் அறிமுகமாக, தரமான சீரியல் ரசிகர்களின் காட்டில் விடாது மழை பெய்யத் தொடங்கியது.

இந்தியாவில் இப்படி ஒளிபரப்பப்படும் அமெரிக்கத் தொடர்களை எடுத்துக்கொண்டால், இப்போதைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட ‘பாகுபலி’யின் பிரபல்யத்துக்கு நிகராக, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரைச் சொல்ல முடியும். ஜார்ஜ் மார்ட்டின் எழுதிக்கொண்டிருக்கும் ‘எ ஸாங் ஆஃப் ஃபையர் & ஐஸ்' (A Song of Fire & Ice) என்ற மிகப் பெரிய புத்தகத் தொடரிலிருந்து எடுக்கப்பட்ட இந்த சீரீஸ், 2011-ல் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் பத்து ஒரு மணி நேர அத்தியாயங்களாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. தற்போது இதன் ஐந்தாவது சீஸன் முடிவடைந்துள்ளது.

தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு அத்தியாயம் முடிந்ததும் இணையமெங்கும் நடக்கப்போகும் கதையைப் பற்றிய விவாதங்கள் பொறி பறந்தன. வெறித்தனமான ரசிகர்கள் இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அத்தனை உன்னிப்பாகக் கவனித்தனர்.

வெஸ்டரோஸ் மற்றும் எஸ்ஸோஸ் என்ற இரண்டு கண்டங்களில் நடக்கக்கூடிய கதை இது. 2011-ல் கதை தொடங்கியபோது, பத்து ஆண்டுகள் கோடைக்காலத்தின் உக்கிரம் முடிந்து பனிக்காலம் தொடங்கப்போகும் சூழல்.

வெஸ்டரோஸ் அரசின் இரும்பு சிம்மாசனத்தைக் கைப்பற்றப் பல்வேறு சக்திகள் போராடுகின்றனர். இச்சூழலில், பிராந்தியத்துக்கு வெளியே உள்ள பனிப்பிரதேசத்திலிருந்து கொடிய சக்திகள் நாட்டை நோக்கிப் படையெடுக்க, இத்தனை பிரச்சினைகளும் எப்படி சமாளிக்கப்படுகின்றன என்ற சுவாரஸ்யமான கதை. கதைக்கேற்ற பல கதாபாத்திரங்கள், பிராந்தியங்கள், நகரங்கள், பின்னணிகள் என்று ஒரு மிகப் பிரம்மாண்டமான பின்னணி.

2011-ல் கேம் ஆஃப் த்ரோன்ஸின் முதல் சீஸன் மிகவும் விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. இந்தக் கதையின் பின்னணி அறிமுகப்படுத்தப்பட்டு, கதையின் பிரதானக் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராகக் கதைக்குள் நுழையும்போதுதான், எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் பிரிக்கப்படாமல், ஒரே கதாபாத்திரம் இரு வகையிலும் நடந்துகொள்ளும் சூழல்கள் கதை முழுதும் உண்டு என்பது புரிந்தது.

நாவலாசிரியர் ஜார்ஜ் மார்ட்டின், டோல்கீன் எழுதிய ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்' புத்தகத்தினால் கவரப்பட்டே இந்தக் கதைகளை எழுதியதாகவும், ஆனால் அந்த நாவலைப் போல் நல்லவர் - கெட்டவர் என்று இல்லாமல், அரசியல் என்று வந்தாலே அனைவருமே குள்ளநரித்தனமாக நடந்துகொள்வதை ஒட்டியே இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைப் படைத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்.

2012ல் ஒளிபரப்பான இரண்டாவது சீசனுமே வேகமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது. ஆனால், அதன் பின் வந்த மூன்று சீசன்களில் எதிர்பார்த்த அளவு வேகமான கதை இல்லை. அதைப் போலவே, ஒவ்வொரு சீசனிலும் முக்கியமான சில கதாபாத்திரங்களைக் கொல்வது ஜார்ஜ் மார்ட்டினின் பொழுதுபோக்கு. இப்போதுகூட, ட்விட்டர் மூலம், ‘அடுத்த சீசனில் இன்னின்ன ஆட்களைக் கொல்வேன்' என்றெல்லாம் அதிரடி அறிக்கைகள் விட்டு, ரசிகர்களைக் கலங்கடித்துக்கொண்டிருக்கிறார்.

உலகம் முழுக்க ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஏற்படுத்திய தாக்கத்தைப்போல் இனியொரு தொலைக்காட்சித் தொடர் தாக்கம் ஏற்படுத்துவது கடினம் என்பதுதான் ரசிகர்களின் முடிவு.

ஃபயர்ஃப்ளை, ஷெர்லாக், ப்ரேக்கிங் பேட், ட்ரூ டிடெக்டிவ், லாஸ்ட், ஹௌஸ் ஆஃப் கார்ட்ஸ், டேர்டெவில், ஃப்ரெண்ட்ஸ், 24, டெக்ஸ்டர் என்று ஆயிரக்கணக்கில் இருக்கும் தரமான சீரீஸ்களுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இவையெல்லாம் அமெரிக்க சீரீஸ்கள். இவை தவிர்த்து, பிரிட்டன், கொரியா போன்ற நாடுகளிலும் இப்படிப்பட்ட நல்ல சீரீஸ்கள் இருக்கின்றன. மேலே இருக்கும் ஷெர்லாக், பிபிசி தயாரிப்புதான்.

பொதுவாகத் தொலைக்காட்சித் தொடர் என்றாலே பிறர்மனை நோக்குதல், கடத்தல், குடும்பக் கஷ்டங்கள், பிழியப்பிழிய அழுவது என்ற வார்ப்புருவைத் தாண்டாமல் இன்னும் இவற்றையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியத் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மாற்றாக உலகெங்கும் எப்படிப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன என்பதைச் சற்றே கவனித்தாலே போதும். ‘தொலைக்காட்சித் தொடர்' என்பது திரைப்படங்களை மிஞ்சும் பிரம்மாண்டத்தோடு எடுக்கப்படத் தொடங்கிப் பல்லாண்டுகள் ஆகின்றன. இவற்றைப் போன்ற தொடர்கள், தரமான திரைப்பட ரசிகர்களை எப்போதும் சந்தோஷத்திலேயே வைத்திருக்கின்றன.

திரைப்படங்களில் மட்டுமே நமக்குத் தேவையான சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கிடைக்கும் என்று எண்ணுபவரா நீங்கள்? திரைப்படங்களை விஞ்சும் பிரம்மாண்டம் தொலைக்காட்சிக்குள் வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. எல்லாமே ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x