Published : 30 Apr 2017 08:33 AM
Last Updated : 30 Apr 2017 08:33 AM

திரை விமர்சனம்: பாகுபலி 2

கதையின் போக்கு, திரைக்கதை, கதாபாத்திரங்கள், கற்பனையை நம்பத்தகுந்த காட்சிகளாக உருவாக்கிய விதம் போன்ற அம்சங்களால் கவனம் ஈர்த்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அபரிமிதமாக இருந்தது. முதல் பாகத்தில் எழுந்த கேள்வி களுக்கு இரண்டாம் பாகம் எப்படிப்பட்ட பதில்களைத் தரப்போகிறது என்பதும் எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணம். இந்த இரண்டு அம்சங்களிலும் ‘பாகுபலி 2’ எப்படி?

மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் ராஜ மாதா சிவகாமி தேவியின் (ரம்யா கிருஷ்ணன்) மதிநுட்பம் மிகுந்த நிர்வாகத்தால் தலை நிமிர்ந்து நிற்கிறது அந்த நாடு. மகேந்திர பாகுபலியை (பிரபாஸ்) அரசனாக அறிவித்து அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார். அதற்கு முன் தேசம் முழுவதும் பயணம் செல்லும் பாகுபலி, குந்தள நாட்டின் இளவரசி தேவசேனாவைக் (அனுஷ்கா) கண்டு காதல் கொள்கிறார். பாகுபலியின் சகோதரன் பல்லாளத்தேவன் (ராணா டக்குபதி) இதை அறிகிறான். தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அரியாசனம் பாகுபலிக்குப் போவதை எண்ணி வன்மம் கொள்ளும் அவன், அரியணையுடன் தேவசேனாவையும் அடைய சூழ்ச்சிவலை பின்னுகிறான். தந்தை பிங்களத்தேவனின் (நாசர்) சகுனித்தனங்கள் வழிநடத்துகின்றன. அந்த சூழ்ச்சியின் விளைவுகள்தான் ‘பாகுபலி 2’-வின் கதை.

இரண்டாம் பாகம் என்றால், முதல் பாகத்தில் எழுந்த எல்லாக் கேள்வி களுக்கும் நம்பும்படியான விடைகள் இருக்க வேண்டும். அதை அழுத்தம் திருத்தமாக நிறைவு செய்துவிடுகிறது ‘பாகுபலி-2.’ கட்டப்பா மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தின் பரம்பரை அடிமைத் தளபதி என்றபோதும் அவரைத் தாய் மாமனாக ஏற்றுக்கொண்ட இளவரசன் பாகுபலியை அவர் ஏன் கொன்றார் என்ற கேள்விக்குத் தரப்பட்டிருக்கும் விடையே இதற்குச் சிறந்த உதாரணம். இதற்கு விடைசொன்ன விதத்தின் மூலம் கட்டப்பா கதாபாத்திரத்தை மட்டுமல்ல; சிவகாமி, பாகுபலி, தேவசேனா கதாபாத்திரங்களுக்கு இடையிலான பிணைப்பையும், அவர்களின் குணவியல்புகளையும், அவற்றின் மாறுபாடுகளையும் உணர்த்துகிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி. எந்தக் கதாபாத்திரமும் சோடைபோகாத வண்ணம் உரு வாக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.

திரைக்கதையில் அழுத்தமும் இறுக்கமும் நெகிழ்வும் கடைசி வரை பிணைந்திருக்கின்றன. பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் காட்சி அனுபவத்தை மட்டுமே நம்பிவிடவில்லை. கதைக் கும் திரைக்கதைக்கும் அழுத்தம் கொடுத்து, அதற்குத் துணைபுரிவதற் காகவே பிரம்மாண்டம் சேர்க்கப் பட்டுள்ளது.

கற்பனையும் அழகியலும் சந்திக்கும் பிரம்மாண்டமான காட்சி யமைப்பு இந்தப் படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. அரண்மனை வெளி, உள் தோற்றம், அலங்காரம், கதாபாத்திரங்களின் வீரம் வெளிப் படும் காட்சிகள், ரம்மியமான காதல் காட்சிகள், நிலக் காட்சிகள், ஆயுதங் கள், போர்க்களக் காட்சிகள் என எல்லாமே கவனமாகச் செதுக்கப் பட்டிருப்பதில் வெளிப்பட்டு நிற்கிறது இயக்குநரின் அசாதாரணக் கற்பனை. அதற்குக் காட்சி வடிவம் தரத்தொழில் நுட்பத்தையும் பொருத்தமான நடிகர்களையும் பயன்படுத்தி, அவர்களைக் கையாண்ட விதத்தில் ஹாலிவுட் இயக்குநர்களுக்கு இணையாக ஒருபடி மேலானதுமாக ராஜமவுலியின் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது.

பிரபாஸ், அனுஷ்கா இணையிடம் காணப்படும் இயல்பான இணக் கத்தைப் போலவே கட்டப்பா, பிரபாஸ் இடையிலான இணக்கமும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. பாகுபலி உயிரைவிடும் காட்சியில் தன்னைக் கொன்ற கட்டப்பா மீது அன்பை வெளிப்படுத்தும் அந்தத் தருணமே இந்த இணையின் பிணைப்பில் உச்சக் கட்டமாக திகழ்கிறது.

காதல் காட்சிகள் சற்றே அலுப் பூட்டத் தொடங்கும் நேரத்தில் எதிர் பாராத ஒரு திருப்பத்தின் மூலம் படம் சுதாரித்துக்கொள்கிறது. இரண் டாம் பாதியில் அடுக்கடுக்காகச் சம்பவங்கள் இருந்தாலும், கடைசிக் கட்டச் சண்டையில் யுத்த தந்திரம் சார்ந்த மதியூகம் பெரிதாக வெளிப் படவில்லை. ராணாவும் பாகுபலியும் மோதும் சண்டை நன்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தாலும் அதை அவ்வளவு நீளமாகக் காட்டியிருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது.

அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன் சந் திப்பு, பட்டமேற்பு விழாவில் மக்கள் விருப்பம் வெளிப்படும் விதம், பாகு பலி கொல்லப்படும் இடம் ஆகிய காட்சி கள் மனதில் நிமிர்ந்து நிற்கின்றன.

நேர்மறைக் கதாபாத்திரங்களில் பிரபாஸ், அனுஷ்கா, கட்டப்பா கதா பாத்திரங்கள் சிறப்பாக அமைந்தது போலவே, சரிவைச் சந்திக்கும் ராஜமாதா கதாபாத்திரத்தில் கம்பீரம் குறையாமல் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி பாத்திரம் ஒளிர, பல்லாளன் கதாபாத்திரமும் வலிமையாக இருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வலிமையை நன்கு உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் ராணாவின் தோற்றமும் நடிப்பும் நாயகனின் பாத்திரத்துக்கு இணை யாக அமைந்துள்ளது.

நாயக பிம்பத்தை முன்னிறுத்தும் படமாக இருந்தாலும் ரம்யா கிருஷ் ணனுக்கும் அனுஷ்காவுக்கும் கொடுக் கப்பட்டுள்ள முக்கியத்துவமும் அவர்களுக்கான வசனங்களும் கவனிக்கத்தக்க விதத்தில் இருக் கின்றன. மகிழ்மதியில் தனக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களை அனுஷ்கா எதிர்கொள்ளும் விதம் அந்தப் பாத்திரத்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. நவீனத் தொழில்நுட்பம் சாத்தியமாக்கித் தந்திருக்கும் காட்சிச் சிறப்பு, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பல மடங்கு கூடியிருக்கிறது. குந்தள நாடு எதிர்கொள்ளும் திடீர் படையெடுப்பை நிர்மூலமாக்கும் காட்சி, தேவசேனாவை மகிழ்மதிக்கு அழைத்துவரும் பாடல் காட்சி. இறுதிப் போர்க்களக் காட்சி எனத் திரைக் கற்பனையின் ஆகிவந்த எல்லையை நொறுக்கும் காட்சியமைப்புகளைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.

கலை இயக்குநர் சாபு சிரில், அவருக்கு வலதுகரமாக நின்றி ருக்கும் வி.எஃப் எக்ஸ் மேற்பார்வை யாளர் கமலக்கண்ணன், ஒலி வடிவ மைப்பும், கற்பனையான கால கட்டத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கும் இசையமைப்பாளர் கீரவாணி, அகண்ட கோணங்களை அதிகமும் தேர்ந்தெடுத்து பிரம் மாண்டப்படுத்தியிருக்கும் ஒளிப் பதிவாளர் செந்தில்குமார், மிகக் கச்சிதமான வெட்டுகளை அளித்திருக் கும் படத் தொகுப்பாளர் கோத்தகிரி வெங்கடேஷ்வர ராவ் ஆகிய அனை வரும் சேர்ந்து படம் தரும் அனுபவத் தைக் கூட்டுகிறார்கள். கீரவாணி யின் பின்னணி இசையில் காட்சிகள் கம்பீரம் பெறுகிறது. உரையாடல்களை எழுதியிருக்கும் மதன் கார்க்கியும் படத்தின் தாக்கத்தைக் கணிசமாகக் கூட்டுகிறார். தேவசேனா - ராஜமாதா உரையாடல்கள், தேவசேனாவிடம் பாகுபலி வாதாடுவது ஆகிய இடங் களில் வசனங்கள் கச்சிதம்.

கற்பனை வளமும் கடும் உழைப் பும் தொழில்நுட்பமும் சேர்ந்து சாத்தியப்படுத்தியிருக்கும் காட்சி அனுபவம் இந்தப் படத்துக்குப் பெருமை சேர்க்கிறது. இந்தக் காட்சி அனுபவம் வலுவான கதை, நேர்த்தி யான திரைக்கதை, சிறந்த நடிப்பு ஆகியவற்றுடன் கிடைப் பதால் சிறந்த திரை அனுபவம் சாத்தியமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x