Last Updated : 10 Oct, 2014 12:07 PM

 

Published : 10 Oct 2014 12:07 PM
Last Updated : 10 Oct 2014 12:07 PM

தொழில்நுட்பம்: மசாலா அரைத்த எலும்புக்கூடு!

தெலுங்கில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1978-ல் வெளியானது விட்டலாச்சார்யா இயக்கிய ஜெகன் மோகினி. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியில் அதன் விஷுவல் எஃபெக்ட் உத்திகளுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. தொழில்நுட்பம் வளராத எண்பதுகளின் தொடக்கத்தில் பாலிவுட்டில்கூட யாரும் யோசித்துப் பார்க்க முடியாத பல உத்திகளைப் பயன்படுத்தினார் விட்டலாச்சார்யா.

விட்டலாச்சார்யாவின் படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றதால், என்.டி.ஆர் அளவுக்குத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் ஜெகன்மோகினி படத்தின் நாயகனான நரசிம்ஹ ராஜூ.

விட்டலாச்சார்யாவின் பல படங்களில் மோகினியின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் இளவரசனாகவும், மன்னனாகவும் நடித்திருப்பார். ஜெகன் மோகினிப் பேயின் அழகில் மயங்கி, அதைத் திருமணம் செய்துகொள்வதும், அதனோடு வாழ்வதும், பிறகு மனைவி வந்து அம்மனிடம் வேண்டி, பாம்பு, குரங்கு, யானை, ஆடு உதவியுடன் மோகினியை விரட்டி கணவனை மீட்பதுமாக செம ரகளையாக இருக்கும்.

ஜெகன்மோகினி என்றில்லை, விட்டலாச்சார்யா இயக்கிய மாயா ஜாலப் படங்களில் பேய் உருவத்தில் நடிப்பவர்கள் அணியும் விதமாகத் தலைமுதல் கால்வரை ஒரே உடையாக இருக்கும்படி வெள்ளை நிறத்தில் ஒரு உடையைத் தயார் செய்தார். இந்தப் பேய் உடைக்கு மண்டையோடு போன்ற முகமுடியும், செம்பட்டை நிறத்தில் நீண்ட தலைமுடியும் என்று பேய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைக்கும் தோற்றம் அது.

அந்தப் பேய் உருவம் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துக்கொண்டே பயந்து ரசித்த காலம் அது. விட்டலாச்சார்யாவின் வெள்ளைப் பேய்கள் தங்கள் கால்களை எரியும் அடுப்பில் வைத்து விறகாக்கிப் பலகாரம் சுடுவதும், பிறகு அவை ஆடாகவும், கோழியாகவும், பெண்ணாகவும் சட்டென்று மாறுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத விஷுவல் எஃபெக்டுகள். அழகிய பெண்ணாக இருக்கும் உருவம் அடுத்த நொடி வெள்ளைப் பேயாக மாறும் ஆச்சரியம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.

இதைவிட அதிகம் ரசிக்கப் பட்டது எலும்புக் கூடுகளின் அட்டகாசம்! குழம்புக்கு அம்மிக்கல்லில் மசாலா அரைக்கும் எலும்புக் கூடு, திருமண மண்டபத்தில்

தவிலும் நாதஸ்வரமும் வாசிக்கும் எலும்புக்கூடுகள் என்று மிரட்டிய விட்டலாச்சார்யா, எலும்புக்கூடுகளை இயக்கத் திறமையான பொம்மலாட்டக் கலைஞர்களைக் கொண்டு, நூல் கட்டி அவற்றை அசைத்துப் படமாக்கியுள்ளார். இதற்காகப் படப்பிடிப்புத் தளத்தின் பின்னணியில் பூசப்பட்டிருக்கும் நிறம் எலும்புக்கூடுகளை இயக்கும் நூலுக்கும் பூசப்பட்டது.

பாத்திரம் வைக்கப்பட்டு எரியும் அடுப்பைத் தனியாகவும், பிறகு பேய் வேடம் போட்டவரை எரியாத அடுப்பில் கால்களை வைக்கச் சொல்லி தனியாகவும் படம்பிடித்து இரண்டையும் ஆப்டிகல் முறையில் பிலிம் லேப்பில் இணைத்துவிடுவார்கள்.

ஒரு ஷாட்டை ‘மாஸ்க்’ செய்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை படம்பிடிக்க கேமராவிலேயே வசதியிருக்கிறது. இரு வெவ்வேறு படச்சுருள்களை இணைத்துத் தேவையான விளைவை, ஒரு புதிய படச்சுருளில் மறு ஒளிப்பதிவு செய்வது விட்டலாச்சார்யா அதிகம் பயன்படுத்திக்கொண்ட ஆப்டிகல் எஃபெக்ட் முறை.

படத்தின் மேல் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களை டைட்டில் கார்டாகப் போடுவதிலிருந்து, காட்சி மாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும், அதாவது ஒரு காட்சி மெல்ல மெல்ல மறைந்து மற்றொரு காட்சி தோன்றும் டிஸ்சால்வ் (Dissolve), ஒரு காட்சி

முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதை உணர்த்தும் உத்தியான (Fade Out.- Fade In ), கனவின் அரூப நிலையைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தவும், ஆவிகள் நடமாடுவது போலவோ, வானில் மேகத்தில் ஆவிகள் தவழ்ந்துசெல்வதுபோலவோ காட்டவும் உதவும் சூப்பர் இம்போஸ் (super impose) வரையில் ஒரு படக்காட்சியின் மேல் இன்னொன்று தெரிவதுபோலச் செய்வது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்தான். இன்று எல்லாம் சாத்தியமாகிவிட்ட சினிமாவில் அசரவைத்த முதல் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எதுவென்று அடுத்த வாரம் பார்க்கலாமா?

படங்கள் உதவி: ஞானம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x