

இரண்டாயிரம் ஆண்டு மனிதகுல வரலாற்றில், உலகின் பெரும்பாலான பண்பாடுகள் ஆண் மையச் சமூகங்களாகவே (Patriarchal) இருந்துவருகின்றன. வேட்டையாடுதல் ஆணின் அதிகாரத் தொடக்கம் எனலாம். நிலத்தின் சொத்துரிமை அடுத்தகட்ட அதிகாரமானது. பின்னர், மதமும் ஆணிடமே மண்டியிட்டது. அடுத்தது போர். பெண்ணை வீட்டில் பூட்டி வைத்துவிட்டுப் போரை முன்னின்று நடத்தியதால் ஆணின் மேலாதிக்கம் வலுவாக உறுதிசெய்யப்பட்டது.
இந்த அதிகாரத் தொடர்ச்சியின் பரவல் கலைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும்? ஆணை முன்னிறுத்தி எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள், நாடகம் உள்ளிட்ட நிகழ்த்துக் கலை வடிவங்களின் தொடர்ச்சியாகவே, ‘கதா நாயக’னை மையப்படுத்தும் கலைக் கோட்பாடு திரைவெளியையும் ஆக்கிர மித்தது. பொ.ஆ.மு. (கி.மு.) 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில், ‘கவிதையியல்’ (Poetics) என்கிற நூலை எழுதினார். அதில் ‘டிராஜிக் ஹீரோ’ (Tragic Hero) என்கிற கருத்தை முதன் முதலில் முன்வைத்தார்.