

தான் படைத்த எந்தப் பாடலையும் தராசுத் தட்டில் ஏற்றியோ இறக்கியோ வைக்காதவர் இளையராஜா. ரசிகர்களும் அவரது படைப்புகளைக் குறைத்து மதிப்பிட்டதில்லை. அப்படிப்பட்டவரிடம் உங்களின் சிறந்த பாடல் என்று கேட்டுவிட முடியுமா என்ன? ஆனால் கேட்டுவிட்டார்கள்! 90களில் மாணவர் பத்திரிகையாளர்கள் தயாரித்த விகடன் சிறப்பிதழ் ஒன்றில் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், “உங்கள் மாஸ்டர்பீஸ்கள் என்னென்ன?” என்கிற கேள்விக்கு, “கார்த்தி, பவாதாரிணி, யுவன்” என்று தனக்கே உரிய குறும்புடன் பதிலளித்திருந்தார் ராஜா.
எந்நேரமும் இசை என்றே ராஜா வாழ்ந்துவந்த நிலையில், பிள்ளைகள், தாய் ஜீவாவின் அரவணைப்பில் வளர்ந்தனர் என்றே சொல்லலாம். ஆனால், ராஜா எனும் மாபெரும் ஆளுமையின் வாரிசுகள் என்பதால் புகழ் வெளிச்சம் இம்மூவர் மீதும் விழத் தவற வில்லை.
யுவன் தவிர்க்க முடியாத இசையமைப் பாளராகிவிட்டார். கார்த்திக் ராஜாவும் குறிப்பிடத்தக்கப் படைப்புகளைத் தந்திருக்கிறார். பவதாரிணி, ‘ராசய்யா’ படத்தின், ‘மஸ்தானா… மஸ்தானா’ பாடலில் அறிமுகமான போது அந்த இளம் குரல் அப்படி வசீகரித்தது. மழலையின் அந்திமமும் பதின்மத்தின் குழைவும் கலந்த கலவையாக காற்றை ஈரமாக்கியது.
தேவா இசையில், ‘துடிக்கின்ற காதல்’ பாடலிலும் அதே வசீகரம். தேசிய விருது வென்ற, ‘மயில் போல’ பாடல் எளிமையானாலும் அழகானது. தங்கர் பச்சானின் ‘அழகி’ படத்தில் கார்த்திக்குடன் இணைந்து அவர் பாடிய ‘ஒளியிலே’ பாடல் காட்சிகளின் உணர்வைக் கிளர்த்தியது.
‘உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசமில்லையா - அது
நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா ”
என்கிற வரிகளை பவதாரிணியின் குரல் ஒலித்தபோது பதின்மத்தைக் கடந்து கொண்டிருந்தவர்களுக்கும் அதைக் கடந்து வந்தவர்களுக்கும் நினைவுகளை மீட்டிக்கொடுத்தது. மூவரில் ராஜாவின் செல்லக் குழந்தையான பவதாரிணி, இதுபோன்ற பாடல்களின் வழியாக ரசிகர்களின் செல்லக் குரலாகவும் மாறிப்போனார்.
அதிகம் பாடவில்லை என்றாலும், பவதாரிணியின் பெரும்பாலான பாடல்கள் தனித்த ரசிகர் வட்டத்தைக் கொண்டவை. அந்த இளங்குயிலின் வாழ்க்கை இப்படி முடிவுறும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. தாய், தந்தை, மகன், மகள் என எத்தனை உறவுகளுக்கு, பிரிவுகளுக்கு, இழப்புகளுக்கு உயிரைப் பிசையும் இசையைத் தந்த இசைத் தந்தை அவர்! இந்தப் பேரிழப்பை எப்படித் தாங்கிக் கடந்து வரப்போகிறார் என்று அவருடைய ரசிகர்களும் அபிமானிகளும் உலகம் முழுவதும் பதறிப்போனார்கள். மகளை இழந்த தருணத்தில் அவரது இந்த எக்ஸ் தளப் பதிவைப் பார்த்தவர்கள் உடைந்து அழுதிருப்பார்கள். பவதாரிணி தனது குரலின் வழியாக வாழ்ந்துகொண்டிருப்பார் என்கிற ஆறுதல் அனைவரையும் சென்று சேரட்டும்.
- chandramohan.v@hindutamil.co.in