Last Updated : 26 Jan, 2018 10:31 AM

 

Published : 26 Jan 2018 10:31 AM
Last Updated : 26 Jan 2018 10:31 AM

அயல் சினிமா: பிரம்மாண்டப் படவுலகின் யதார்த்த இழைகள்

 

லகின் பிரம்மாண்டமான கனவுத் தொழிற்சாலைகளில் ஒன்று ‘பாலிவுட்’. இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ 1913-ம் ஆண்டு வெளியானது. இந்தியத் திரையுலகின் தந்தையாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே (துன்டிராஜ் கோவிந்த் பால்கே) இந்த மௌனப் படத்தை இயக்கித் தயாரித்திருந்தார். அந்தக் காலத் திரைப்படங்கள் இந்தியர்களுக்குப் பெரிதும் பரிச்சயமான புராண கதைகளைத் தழுவியே பெரும்பாலும் எடுக்கப்பட்டன.

இந்தித் திரைப்பட உலகின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ 1931-ம் ஆண்டு அர்தேஷிர் எம். ஈரானியின் இயக்கத்தில் வெளிவந்தது. ஒலித் தொழில்நுட்ப வசதிகளின் வருகையால், இந்தித் திரைப்படத் துறையில் 1930-களில், ஓர் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. பாடல்களும் நடனங்களும் மைய நீரோட்ட இந்தித் திரைப்படங்களின் தவிர்க்க முடியாத அங்கங்களாக மாறின.

1940-கள், இந்தித் திரையுலகம் நாடகத்தனத்துக்கு மாறியிருந்தது. பிரிட்டிஷ் அரசு இந்திய விடுதலைப் போரட்டத்தை ஆதரிக்கும் படங்களைத் தணிக்கை செய்ய ஆரம்பித்தது. அத்துடன், இந்தித் திரைப்படத் துறையின் கள்ளச் சந்தையும் உருவானது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினையால், சிறந்த கலைஞர்களான நூர் ஜஹான், ஸ்வர்ணலதா, நஸீர், எழுத்தாளர் சாதத் ஹசன் மண்டோ, இசையமைப்பாளர் குலாம் ஹைதர் போன்றவர்களுடன் இணைந்து லாகூரையும் கிழக்கு வங்கத்தையும் இந்தித் திரையுலகம் இழக்க வேண்டியிருந்தது.

விடுதலைக்குப் பிறகான இந்தியா, இந்தித் திரையுலகுக்குப் பொற்காலமாக அமைந்திருந்தது. பல புதுமையான போக்குகள் இந்தித் திரையுலகில் அறிமுகமாகின. இரண்டாம் உலகப் போரின்போது கள்ளச் சந்தையால் லாபமடைந்த சந்தைக்காரர்கள், நடிகர்கள், இயக்குநர்களுக்குப் பணம் கொடுத்து ‘ஸ்டுடியோ’ அமைப்பைத் தகர்த்தார்கள். இதற்குப் பிறகுதான் இந்தி திரைத் துறையில் சுயாதீனத் தயாரிப்பாளர்கள் உருவானார்கள். இயக்குநர்கள் பிமல் ராய், குரு தத், மூன்று பெரிய நட்சத்திரங்களான ராஜ் கபூர், திலிப் குமார், தேவ் ஆனந்த் போன்ற தனித்துவமான கலைஞர்களும் படைப்பாளிகளும் இந்தி சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினர்.

பிறந்தது பாலிவுட்

1970-களின் தொடக்கத்தில்தான் ‘பம்பாய்’, ‘ஹாலிவுட்’ என்ற இரண்டு வார்த்தைகளையும் இணைத்து ‘பாலிவுட்’ என்ற பதம் உருவாக்கப்பட்டது. இன்று இந்தித் திரை உலகம் முழுவதும் ‘பாலிவுட்’ என்ற பெயரால்தான் அறியப்படுகிறது. இந்தப் பத்தாண்டுகளில்தான், அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய திரைப்படத் தயாரிப்பு நாடாக இந்தியா மாறியது.

பெரும்பணத்தின் காலம்

அதன்பின்னர், புத்தாயிரம் ஆண்டு பாலிவுட்டுக்குப் பல புதிய அளவுகோல்களை உருவாக்கியது. பாலிவுட் சந்தை, பிரம்மாண்ட சர்வதேசச் சந்தையாக உருவெடுத்தது. அதுவரை படத் தயாரிப்பு நிறுவனங்கள் நினைத்துப் பார்க்காத பெரும்பண முதலீட்டில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களின் கொண்டாட்டங்கள், போராட்டங்கள், வெறுப்புகள், கனவுகள் போன்றவற்றை 21-ம் நூற்றாண்டு பாலிவுட் திரைப்படங்கள் திரைக்குக் கொண்டுவந்தன.

வசூல் வேட்டை

புத்தாயிரத்தின் ரசிகர்களைக் கவர்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. புதுமை, பிரம்மாண்டம், துணிச்சல், யதார்த்தம் என ஏதாவது ஓர் அம்சத்தைத் தனித்துவத்துடன் பிரதிபலிக்கும் திரைப்படங்களுக்கே ரசிகர்கள் வரவேற்பு அளிக்க ஆரம்பித்தனர். 2008-ம் ஆண்டு, வெளியான ஆமிர் கானின் ‘கஜினி’ 100 கோடி ரூபாய் வசூலுடன் பாலிவுட்டில் ஒரு புதிய வசூல் போக்கை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களுக்கான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வளர்ச்சி சர்வதேசத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களை பாலிவுட்டுக்கு அழைத்துவந்தது. ‘வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்’, ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ போன்ற பல நிறுவனங்கள் பாலிவுட்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தன.அத்துடன், புத்தாயிரத்தில் சரித்திர காலத் திரைப்படங்கள், வழக்கமான பொழுதுபோக்கு மசாலாத் திரைப்படங்கள் போன்றவற்றின் ஆதிக்கமும் இருக்கவே செய்தன.

புதுமையான திரைமொழி

புத்தாயிரத்தில் பாலிவுட் புதுமையான திரைமொழியில் ரசிகர்களிடம் பேச ஆரம்பித்தது. பெரிய முதலீட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாக இருக்கவில்லை. அதனால், சில தயாரிப்பு நிறுவனங்கள் சிறந்த திரைக்கதை அம்சங்களுடன் நட்சத்திர அந்தஸ்து குறைவாக இருக்கும் நடிகர்களை வைத்து சிறிய முதலீட்டுப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தன. கரண் ஜோஹர், அனுராக் கஷ்யப், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ (2013) இதற்குச் சிறந்த உதாரணம். ரூ. 9 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 100 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட்டானது. இதே பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட யஷ் ராஜ் ஸ்டுடியோஸின் ‘தம் லகா கே ஹைஸா’ (2015) திரைப்படமும் ஹிட்டானது.

இந்த வரிசையில், அனுராக் கஷ்யப்பின் ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்புர்’ (2012), ஷூஜித் ஸர்காரின் ‘விக்கி டோனார்’ (2012), கனு பெஹலின் ‘திதளி’ (2014), நீரஜ் கேவனின் ‘மசான்’ (2015) போன்றவை கதை, திரைக்கதையை முன்னிலைப்படுத்திய பாலிவுட்டின் போக்கில் முற்போக்கான தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள்.

எல்லைகளை விரிவாக்கிய நாயகன்

பாலிவுட்டின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் நாயகனாகவும் துணிச்சலான தயாரிப்பாளராகவும் சமூகச் சிந்தனை நிறைந்த இயக்குநராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார் ஆமிர் கான். 2001 முதல் இவரது நடிப்பிலும் தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவான திரைப்படங்கள், சமூக பிரச்சினைகளைப் பொழுபோக்கு, வணிக அம்சங்களுடன் இணைத்துப் பேசுபவையாக அமைந்திருக்கின்றன. ஆமிர் கான் கையாளும் இந்தப் போக்கு, அவரது திரைப்படங்கள் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூலிலும் புதிய சாதனைகளைப் படைப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

பெண் மையத் திரைப்படங்கள்

புத்தாயிரத்தில் பாலிவுட் கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் புதிதாகக் கட்டமைக்கப்பட ஆரம்பித்துள்ளன. நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ (2011) பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இது பாலிவுட்டில் கதாநாயகிகளுக்கான பிரத்யேகமான திரைக்கதைகளை எழுதும் சூழலை உருவாக்கியது.

இந்தக் காலத்தில் வித்யா பாலன் நடிப்பிலும் சுஜாய் கோஷ் இயக்கத்திலும் வெளியான ‘கஹானி’ (2012), கௌரி ஷிண்டே இயக்கத்தில் வெளியான ஸ்ரீதேவியின் ‘இங்லிஷ் விங்லிஷ்' (2012), விகாஸ் பஹல் இயக்கி கங்கனா ராணாவத் நடிப்பில் வெளியான ‘குயின்’ (2014), ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘ஹைவே’ (2014), அனுஷ்கா ஷர்மா தயாரித்து நடித்திருந்த ‘என்எச் 10’ (2015), தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் நடிப்பில் ஷூஜித் சர்க்கார் இயக்கத்தில் வெளியான ‘பிக்கு’ (2015), தப்ஸி, அமிதாப் நடிப்பில் அனிருத்த ராய் சவுத்ரி இயக்கியிருந்த ‘பிங்க்’ (2016) போன்ற திரைப்படங்கள் இந்தப் போக்கின் தாக்கத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன.

நூற்றாண்டைக் கடந்த இந்தியத் திரைத் துறையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் பாலிவுட், கால ஓட்டத்தில் இந்திய மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் எப்படி மாறிவந்திருக்கிறது என்பதையும் பதிவுசெய்து வந்திருக்கிறது. புத்தாயிரத்தில் பாலிவுட்டில் நடந்திருக்கும் மாற்றங்கள், இந்திப் படங்களைச் சமூகத்துடன் இணைந்து பயணப்பட வைத்திருக்கின்றன. குறிப்பாக, பெண்களின் வாழ்க்கையைச் சுதந்திரமாகவும் யதார்த்தமாகவும் துணிச்சலாகவும் பாலிவுட் பிரதிபலித்திருக்கிறது.

சாதி, பாலினம், பாலியல் எனச் சமூக அரசியல் பிரச்சினைகளை பாலிவுட் படங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன. மற்ற மொழிகளில் மேற்கொள்ளப்படாத பல பரிசோதனை முயற்சிகளைப் புத்தாயிரத்தில் பாலிவுட் முன்னெடுத்திருக்கிறது. இதற்கு அந்தத் துறைக்கு உள்ள வலுவான முதலீட்டுப் பின்னணி காரணம். அதேநேரம் வலதுசாரிச் சிந்தனையின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் வட இந்தியாவில் பாலிவுட் முன்னெடுக்கும் புதிய வகைப் படங்களுக்கான தேவையும் இப்போது அதிகமாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x