

ஹாலாஸ்யன்
பாம்பு, தேள் என்ற உடனே அவற்றின் நஞ்சுக் கடிதான் நம் நினைவுக்கு வரும். உயிரினங்களுக்கு இரையை வேட்டையாடுவது, தற்காப்புக்கு என்று பொதுவாக இரண்டு செயல்பாடுகளுக்கு நஞ்சு பயன்படுகிறது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியில் நஞ்சு பலவித மாறுதல்களுக்கு உள்ளாகி, ஒவ்வோர் உயிரினத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் தகவமைக்கப்பட்டுள்ளது.
நஞ்சு என்பது ஒரே ஒரு வேதிப்பொருள் அல்ல; உயிரியல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பல பொருட்கள் அடங்கியது, குறிப்பாக புரதங்களின் கலவை. அதிலிருக்கும் ஒவ்வொரு சேர்மத்துக்கும் அதன் ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் பங்கு உண்டு.
ரத்த அழுத்த மருந்து
ஒட்டுமொத்தமாக நஞ்சு உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அதிலுள்ள சில பொருட்களுக்கு அபாரமான மருத்துவப் பண்புகள் உண்டு. பிற உயிர்களிடத்தில் குறிப்பிட்ட ஓர் நஞ்சு ஏற்படுத்தும் வினையை ஆராய முயன்றபோது, நஞ்சில் இருக்கும் பொருட்களின் தனிப்பட்ட செயல்முறை, அவற்றின் மருத்துவப் பயன் ஆகியவை கண்டறியப்பட்டன.
எடுத்துக்காட்டாக, Pit Viper எனப்படும் விரியன் வகைப் பாம்பு ஒன்றின் நஞ்சில் இருக்கும் பொருளுக்கு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உண்டு. அதன் நஞ்சிலிருந்து அந்தப் பொருளைப் பிரித்து ஆராய்ந்து, செயற்கையாகத் தயாரித்து ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
புற்று நோய் கண்டறிதல்
Death stalker என்ற தேள் வகை கொடிய நஞ்சைக் கொண்டது. அதன் நஞ்சில் இருக்கும் சில பொருட்கள், மனித உடலின் புற்றுச் செல்களோடு பிணைந்துகொள்கின்றன; அந்த நஞ்சுக்கு உள்ள ஒரு சிறப்புப் பண்பு, குறிப்பிட்ட நிறத்தில் அவற்றை ஒளிரச் செய்வதுதான். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அறுவை சிகிச்சையின்போது அந்தப் பொருளைச் செலுத்தி, புற்றுச் செல்களோடு அவற்றைப் பிணைந்துகொள்ளச்செய்து, பின்னர் ஒளிரும் செல்களை மட்டும் நீக்குகிறார்கள். இதன்மூலம் ஆரோக்கியமான செல்கள் நீக்கப்படுவதோ புற்றுச் செல்கள் விடுபட்டுப் போவதோ தவிர்க்கப்படுகிறது.
நரம்பு மண்டலத்தைத் தாக்கும் நஞ்சு வகைகள் பலவற்றில், நாள்பட்ட வலியைப் போக்கக்கூடிய வலிநிவாரணிகள் உண்டு. கூம்பு நத்தைகள் என்ற கடல்வாழ் நத்தைகள் மிக வீரியமான நஞ்சைக் கொண்டவை; கொனோடாக்ஸின் (Conotoxins) என்று அழைக்கப்படும் பொருட்கள் அவற்றில் உண்டு. அவை வலியைக் கடத்தும் நரம்புகளை முடக்கி, வலி சமிக்ஞைகள் மூளைக்குச் சென்றடைவதைத் தடுக்கின்றன. வலிநிவாரணிகள் தயாரிப்பில் சில நாடுகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
yes.eye.we.yea@gmail.com