தெய்வத்தின் குரல்: அஞ்ஞானியின் இரவு ஞானிக்குப் பகல்

தெய்வத்தின் குரல்: அஞ்ஞானியின் இரவு ஞானிக்குப் பகல்
Updated on
2 min read

நியாய சாஸ்திரம் செய்த கௌதம மஹரிஷிக்கு ‘அக்ஷபாதர்’ என்று ஒரு பேர். அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பாராதலால் வெளி உலகமே அவர் கண்ணுக்கு தெரியாதாம். எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணை வைத்து விட்டாராம்! பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பேர் வந்தது என்று கதை .

வைசேஷிகத்துக்கு “ஒளலூக்ய தர்சனம்” என்றும் ஒரு பெயர் உள்ளது. ‘உலூகம்’ என்றால் ஆந்தை. ஆந்தை சம்பந்தப்பட்டது ஒளலூக்யம். கணாதருக்கே ‘உலூகம்’ என்று பேர் வந்ததாகச் சொல்கிறார்கள்! கௌதமர் யோசனையிலேயே இருந்ததால் கண் தெரியாமல் கிணற்றில் விழுந்தார் என்றால், கணாதர் பகலெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்துவிட்டு இரவுக்குப் பின்தான் பிக்ஷைக்குப் புறப்படுவாராம். பகலில் கண்ணுக்கு அகப்படாமல் ராத்திரியிலேயே இவர் சஞ்சாரம் செய்ததால், ‘ஆந்தை’ என்று nick- name பெற்றதாகச் சொல்கிறார்கள். அஞ்ஞானியின் ராத்திரி ஞானிக்குப் பகலாயிருக்கிறது என்று கீதையில் பகவான் சொல்லும்போது எல்லா ஞானிகளையும் ஆந்தையாகத்தான் சொல்லிவிட்டார்!

நியாய-வைசேஷிக சாஸ்திரங்களும் சிவபெருமான் சம்பந்தமுடையனவே. வைசேஷிக சாஸ்திரங்களில் மஹேச்வரனையே பரமாத்மாவாக சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறது. ஜகத்துக்கு ஈஸ்வரன் “நிமித்த” காரணம் என்று கொள்வதில் சைவ மதங்கள் நியாய சாஸ்திரத்தையே பின்பற்றுகின்றன எனலாம்.

இரண்டு காரணங்கள்

நிமித்த காரணம், உபாதான காரணம் என்று இரண்டு உண்டு. ஒரு பானை இருந்தால் அது உண்டாவதற்கு மண் என்று ஒரு வஸ்து இருக்க வேண்டும். மண்தான் பானைக்கு உபாதான காரணம். ஆனால் மண் எப்படிப் பானையாக ஆகும்? தானே அது ஒன்றாகச் சேர்ந்து பானையாகுமா? குயவன்தான் மண்ணைப் பானையாகப் பண்ண வேண்டியிருக்கிறது. மண்ணினால் ஒரு பானை உண்டாக வேண்டுமானால் அதற்குக் குயவன் என்ற காரணமும் வேண்டியிருக்கிறது. குயவன்தான் நிமித்தக் காரணம்.

அணுக்களை உபாதான காரணமாகக் கொண்டு ஈஸ்வரன் என்கிற நிமித்தக் காரணம் ஜகத்தைப் பண்ணியிருக்கிறது என்பது நியாய- வைசேஷிகக் கொள்கை.

மண்ணைப் பானையாக்குவதற்குக் குயவன் அவசியம் வேண்டும். அவன் இல்லாவிட்டால் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து குயவன் உண்டாக்குகிறான் என்று சொல்வார்கள். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத்-கார்ய-வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. இப்படித்தான் ஈஸ்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான் என்கிறார்கள். இது நியாயக் கொள்கை.

சாங்கியர்களுக்குக் கடவுளே கிடையாது என்று முன்னேயே சொல்லியிருக்கிறேன். அவர்கள் பிரகிருதி என்ற இயற்கையே ஜகத்தாகப் பரிணமித்தது என்பார்கள். சடமான பிரகிருதி இத்தனை ஒழுங்காக இயங்குவதற்கு புருஷனின் சாந்நித்தியமே காரணம் என்பார்கள். சாந்நித்தியம்தான் காரணம், புருஷனே நேராக ஈடுபட்டு சிருஷ்டியைச் செய்யவில்லை என்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் தானாக பயிர் முளைக்கிறது, ஜலம் வற்றுகிறது, துணி காய்கிறது.

விவர்த்த வாதம்

நம் ஆசாரியாள், “ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை சிருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்மக் குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது – பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர் தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா ஜகத்து பரிணமித்தபின் இல்லாமல் போய் விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை.

தான் தானாக சுத்த ஞான சொரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்! ஒருத்தன் ஒரு வேஷம் போட்டுக் கொள்கிறான் என்றால் அப்பொழுது அவன் அவனாக இல்லாமல் போய் விடுகிறானா என்ன? அப்படித்தான் இத்தனையும் வேஷம், கண்கட்டு வித்தை! இத்தனையாலும் பாதிக்கப்படாமல் ஸத்வஸ்து ஏகமாக அப்படியே இருந்துகொண்டேயிருக்கிறது” என்று ஒரே அடியாக அடித்துவிட்டார். இதற்கு “விவர்த்த வாதம்” என்று பெயர்.

ஆசார்யாள் சொன்ன இந்த உண்மைக்குப் போவதற்கு நியாயத்தின் யுக்திவிசாரணை படி போட்டுக் கொடுக்கிறது.

யுக்தியால் பதார்த்தங்களைத் தெரிந்து கொண்டு, அதிலிருந்து வைராக்யம் பெற்று, சுகதுக்கங்கள் இல்லாத வெறுமையான அபவர்க்கம் என்ற ஸ்தானத்துக்குப் போவதோடு நியாய-வைசேஷிகம் நிறுத்திவிடுகிறது. த்வைதத்தில் இதற்குமேல் போக முடியாது. அத்வைதமாக ஒரே ஸத்தைப் பிடித்து அதுவே நாம் என்கிற போதுதான் நிறைந்த நிறைவான மோக்ஷம் கிடைக்கிறது. ஆனாலும் இப்போதிருக்கிற லோக வாழ்வோடு திருப்திப்படாமல் இதற்கு மேலே ஒரு அபவர்க்கத்துக்குப் போக நியாயம் தூண்டி விடுகிறது என்பதே விசேஷந்தான்.

இந்த சாஸ்திரத்தின் இன்னொரு பெருமை, அது எத்தனை தினுசான யுக்தி உண்டோ அத்தனையையும் கொண்டு வாதம் பண்ணி, பௌத்தர்கள், சாங்கியர்கள், சார்வாகர்கள் (எனப்படும் லோகாயதர்கள்) ஆகியோருடைய கொள்கைகளை ஆக்ஷேபித்து ஈச்வரன் என்ற கர்த்தா உண்டு என்று நிலை நாட்டியிருப்பதாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in