Published : 26 Sep 2019 10:43 AM
Last Updated : 26 Sep 2019 10:43 AM

தெய்வத்தின் குரல்: பத்மபாதர், வியாசர், ஆதிசங்கரர்

ஒரு நாள் பத்மபாதர் கங்கையின் அக்கரையிலும் ஆசார்யாள் இக்கரையிலுமாக இருந்தார்கள். ஆசார்யாள் ஈர வஸ்திரத்துடனிருந்தார். பத்மபாதரிடம் காய்ந்த சுத்த வஸ்திரமிருந்தது. சிஷ்யருடைய பக்தியை லோகத்திற்கு, மற்ற சிஷ்யர்களுக்கு பிரகடனம் பண்ணவேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். “வஸ்திரத்தை இங்கே கொண்டு வா!” என்று எதிர்க் கரையிலிருந்தவரிடம் சொன்னார்.

குரு ஆக்ஞை என்றால் தட்டாமல் உடனே பண்ணிவிட வேண்டும் என்ற ஸ்மரணைதான் பத்மபாதருக்கு! அதில், நடுவே கங்கை இருக்கிற உணர்வே போய்விட்டது! ஆளை முழுங்குகிற மாதிரி ஆழமாக நதி ஓடுவது தெரியாமல் சம பூமியில் நடப்பதுபோல அவர் ஆசார்யாள் இருந்த பக்கமாக பிரவாகத்தின் மேலேயே நடக்க ஆரம்பித்தார்!

அப்போது என்ன ஆயிற்றென்றால், அவர் எங்கேயெல்லாம் அடிவைக்க இருந்தாரோ அங்கேயெல்லாம் கங்கா தேவி ஒரு தாமரையைப் புஷ்பித்துப் பாதத்தைத் தாங்கினாள். அதன் மேலாகவே அவர் எதிர்க்கரைக்கு வந்து குருநாதரிடம் வஸ்திரத்தைக் கொடுத்தார். பத்மங்களால் தாங்கப்பட்ட பாதத்தை உடையவரானதால் ‘பத்ம பாதர்’ என்று பேர் வந்தது.

மற்ற சிஷ்யர்களெல்லாம், “என்னமாக கங்கையைத் தாண்டி விட்டாய்!” என்று ஆச்சர்யப்பட்டார்களாம். அவரானால், “இது என்ன ஆச்சரியம்? எந்த குருநாதரை ஸ்மரித்தால் ஸம்ஸார ஸாகரமே முழங்காலளவு ஆகிவிடுகிறதோ, அவரே ஆஜ்ஞை பண்ணும்போது இந்த கங்கை என்ன பிரமாதம்?” என்றாராம்.
பத்மபாதர் விஷ்ணு அம்சம். நரசிம்ம சாக்ஷாத்காரம் பெற்றவர். அதனால், விஷ்ணுவின் அம்சாவதாரமான வியாசரை ஆசார்யாள் அடையாளம் கண்டு கொள்வதற்கு முந்தியே இவர் கண்டுவிட்டாரென்று ஒரு சம்பவம் உண்டு. அதுவும் காசியில் நடந்ததுதான்.

காசியில் நடந்தது

லோகத்தில் உள்ளவர்களுக் கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்திரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ண வேண்டுமென்று ஸூத்திரகர்த்தாவான வியாசர் நினைத்தார். ஆசார்யாள்தான் வியாசரின் எண்ணம் என்னவோ அதையே பரிபூர்ணமாகப் புரிந்துகொண்டு தம்முடைய பாஷ்யத்தை எழுதியிருந்தார். அதனால் ப்ரீதியடைந்த வியாஸாசார்யாள், ‘இன்னும்கூட இவரை நன்றாகப் பரீக்ஷித்து முடிவில் இவர் செய்த பாஷ்யம்தான் நமக்கு ப்ரீதியானது என்று லோகம் புரிந்துகொள்ளச் செய்யணும்’ என்று நினைத்தார்.

வியாச ரூபத்திலேயே போனால் ரொம்பவும் விநயகுணம் படைத்த ஆசார்யாள் வாயைத் திறக்க மாட்டார். யாரோ ஒரு வயோதிக பிராமணர் மாதிரி ரூபமெடுத்துக் கொண்டு வந்தார்.
“ஸூத்ர பாஷ்யம் பண்ணி இருக்கிறீராமே, இதற்கென்ன அர்த்தம், அதற்கென்ன அர்த்தம்?” – என்று ஆசார்யாளைக் கேட்டுக்கொண்டே போனார். ஆசார்யாளும் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டு போனார். இவர் என்ன அர்த்தம் சொன்னாலும் அவர் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டே, “அதெல்லாம் இல்லை இப்படித்தான் அர்த்தம்” என்று எதையாவது சொல்லி ஆக்ஷேபித்தார். அவர் சொல்வது பொருந்தாது என்று ஆசார்யாள் விஸ்தாரம் பண்ணி வாயை அடைப்பார். ஒரு விஷயமாக வாயை அடைத்தாலும் அவர் இன்னொன்றைப் பிடித்துக்கொள்வார்.

மேதைகளின் வாதம்

இரண்டு மகாமேதைகள் இப்படி பலத்த வாதம் பண்ணுவதைப் பார்த்து சிஷ்யர்கள், பண்டிதர்களெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.
இப்படி சிவ – விஷ்ணுக்களே வாத விளையாட்டுப் பண்ணுவதென்றால் அது எப்போது முடியுமோ, எப்படி முடியுமோ? நாமோ அடிமை, கிங்கரர். சங்கர பகவானும் நாராயண பகவானுமே விவாதம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கும்போது கிங்கரனான நாம் என்ன செய்வது?

“சங்கர: சங்கர: ஸாகக்ஷாத் வ்யாஸோ நாராயண: ஸ்வயம்
தயோர்-விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர: கிங்கரோம்யஹம் ”

‘கிங்கர: கிங்கரோம்யஹம்’ என்று வார்த்தையைத் திருப்பியிருப்பதில் ‘கிங்கரோம்யஹம்’ என்பதை ‘கிம் கரோமி அஹம்?’ என்று பிரித்துக் கொள்ளவேண்டும். ‘நான் என்ன செய்வேன்?’ என்று அர்த்தம்.
இப்படி சுலோகமாகச் சொல்லி இரண்டு பேரையும் பத்மபாதர் நமஸ்கரித்தார்.
‘அப்படியா? ஸூத்ரகாரரான வியாஸாசார்யாளேயா வந்திருப்பது? ‘என்று ஆசார்யாளுக்கு ஒரே பக்தியும், சந்தோஷமும், அடக்கமும் வந்துவிட்டது. “வாஸ்தவமாக இந்த பாஷ்யம் தங்கள் இதயத்தை அனுசரிப்பதாக இருந்தால் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி ஸ்வஸ்வரூபம் எடுத்துக்கணும்” என்று பிரார்த்தித்துக்கொண்டார்.

கிழப் பிராமணர் உடனே வியாச ரூபத்தில் தரிசனம் கொடுத்தார், ஆசார்யாளுக்கு நிரம்ப அனுகிரகம் செய்து, “லோகத்தில் நேர்மையாகவும் கொண்டி வழியிலும் யாரார் என்னவெல்லாம் ஆக்ஷேபித்துக் சொல்லமுடியுமோ அதற்கு மேலே நாமே சொல்லி, அத்தனைக்கும் உன் பாஷ்யம் பதில் சொல்கிறது என்று காட்டவே இப்படி வந்தேன். இந்தப் பாஷ்யத்திற்கு என் பூர்ண அங்கீகாரம் உண்டு” என்றார்.
ஆசார்யாள் தாம் எழுதினதையெல்லாம் அவருடைய பாதத்தில் வைத்தார்.

இவர் ‘சங்கர: ஸாக்ஷாத்’, அவர் ‘நாராயண ஸ்வயம்’ என்றாலுங்கூட அவதாரத்திலே மனுஷர் மாதிரி அடங்கியிருக்கவேண்டும் என்று காட்டுவதற்காக வியாசர் பிரம்மாவைக் கொண்டே ஆசார்யாளுக்கு இன்னும் பதினாறு வருஷம் ஆயுளை நீடிக்க நினைத்தார். ப்ரம்மாவும் அப்படியே அங்கே தோன்றினார்.
த்ரிமூர்த்திகளும் சேர்ந்து விட்டார்கள்!

முதலில் சிவனின் வரத்தால் ஆசார்யாள் எட்டு என்று ஆயுஸ் பெற்றுப் பதினாறாக்கிக் கொண்டார். இப்போது விஷ்ணு, ப்ரம்மா இருவரும் இன்னொரு பதினாறு கொடுத்தார்கள்.
அப்புறம் ப்ரம்மாவும் வியாசரும் அந்தர்தானமானார்கள்.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x