Published : 05 Sep 2019 09:43 am

Updated : 05 Sep 2019 09:43 am

 

Published : 05 Sep 2019 09:43 AM
Last Updated : 05 Sep 2019 09:43 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 93: இருந்தேன் இருந்தேன் இடையறாது இருந்தேன்

uyir-valarkkum-thirumandhiram

கரு.ஆறுமுகத்தமிழன்

சிற்றம்பலத்துக்கு மற்றொரு பெயர் பெரும்பற்றப் புலியூர். ‘இராசாதிராச வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப் புலியூர்’ என்று பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி. அதென்ன தனியூர்? குடிமக்களின் ஊராகவோ, ஆள்வோரின் ஆட்சித் தலைமை ஊராகவோ, பிராமணர்களுக்கு வரிநீக்கி விடப்பட்ட பிரம்மதேயமாகவோ இல்லாமல், சிற்றம்பலம் உடையானாகிய கூத்தனுக்கே உரிய தனித்த ஊராக இருப்பதால் அது தனி ஊர். பிற்காலச் சோழர்களின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏதோ ஒரு பிரிவின்கீழ், இறைவனின் தனி ஆட்சிக்கான சிறப்புச் சலுகை பெற்ற ஊர்.

புலியாக ஆசைப்பட்ட முனிவர்

அதென்ன பெரும்பற்றப்புலியூர்? சிவனாரைத் தனித்து வழிபடும் நோக்கத்தோடு தில்லை வனத்துக்கு வந்த முனிவர் ஒருவர், வண்டுகளின் எச்சில்படாத புதுப் பூக்களைக் கொண்டு சிவனாரைப் பூஜிக்க எண்ணினார். விடிந்தபின் பூப்பறித்தால் வண்டுகள் வந்து உட்கார்ந்து தேன் உறிஞ்சிப் பூக்களை எச்சிலாக்கிவிடுகின்றன. சாயும்காலமே பறித்துவிடலாம் என்றால் பூக்கள் மொட்டாக இருக்கின்றன. நள்ளிரவில் பறிக்கலாம் என்றால் இருளில் கண் தெரியவில்லை என்பதோடு, மரங்களில் ஏறிப் பூக்களைப் பறிக்கமுயலும்போது பனிப் படர்வினால் மரங்கள் வழுக்குகின்றன.

எனவே முனிவர் இறைவனை வேண்டினார்: ‘எனக்குப் புலியைப்போல இரவிலும் பார்க்கும் கண்களையும், பற்றி ஏறுவதற்குத் தோதாக நகமுடைய புலிக்கால்களையும் தந்தருளக்கூடாதா?’ இறைவன் அருளினார். அன்று முதல் முனிவருக்குப் புலிக்கண்களும் புலிக்கால்களும் வந்துவிட்டன. அவரது பெயரும் புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) என்று ஆனது. புலிக்கால் முனிவர் பூப்பறிப்பதற்காகப் பற்றிக்கொண்டு மரமேறிய தலமே பெரும்பற்றப் புலியூர் என்று தலபுராணங்கள் சொல்கின்றன.

இறை உணர்தலில் இவ்வளவு தூய்மை உணர்வு இருப்பதைக் குறித்துச் சித்தர் சிவவாக்கியருக்குக் கடுமையான கண்டனம் உண்டு:
மாறுபட்ட மணிதுலக்கி, வண்டின்எச்சில் கொண்டுபோய்,
ஊறுபட்ட கல்லின்மீது ஊற்றுகின்ற மூடரே...
(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர், 32)
பூஜையின்போது ஒலிக்கிற மணி, பல்வேறு மாழைகளின் (உலோகங்களின்) கலவை; மணியிடம் இனத்தூய்மை இல்லை. பூசனையில் தூவும் பூவோ எச்சில்; ஆறறிவு உயிர்களின் எச்சில்கூட அல்ல, நான்கறிவு உயிர்களான வண்டுகளின் எச்சில் (பார்த்தல், சுவைத்தல், தொட்டு அறிதல், முகர்தல் ஆகிய நான்கு; கேட்டல் கிடையாது); பூக்களிலும் தூய்மை இல்லை. பூஜித்துக் கும்பிடுகின்ற கல் உடைத்தும் கொத்தியும் செதுக்கியும் குறைவுபடுத்திச் செய்யப்பட்டது; முழுமையற்றது. தூய்மை தூய்மை என்று பேசுகிறவர்கள் இவற்றைக்கொண்டு கும்பிடுவது மூடத்தனமில்லையா என்று கேலி பேசுகிறார் சிவவாக்கியர்.

விமர்சிக்கும் சிவ வாக்கியர்

இத்தகைய கேலிகளுக்கு ஆளாகிவிடக் கூடாது என்றுதானோ என்னவோ மேற்படி முனிவர் கடவுளிடம் புலிக்கண்ணும் புலிக்காலும் தருமாறு வேண்டிப் பெற்று, இரவோடு இரவாக மரம் ஏறி, வண்டின் எச்சில் படாத புத்தம் பூக்களைப் பறித்துப் பூசை செய்திருக்கிறார். ஆனாலும் சிவவாக்கியர் விட்டாரில்லை:
ஓதுகின்ற வேதம்எச்சில்; உள்ளமந்தி ரங்கள்எச்சில்;
போதகங்கள் ஆனதுஎச்சில்; பூதலங்கள் ஏழும்எச்சில்;
மாதுஇருந்த விந்துஎச்சில்; மதியும்எச்சில்; ஒலியும்எச்சில்;
ஏதில்எச்சில் இல்லது? இல்லை, இல்லை,இல்லை, இல்லையே!
(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர், 40)

பூஜிக்கப் பயன்படுத்தும் பூவில் தூய்மை பேண நினைக்கிறவர்களே! ஓதுகின்ற வேதத்தில், மந்திரத்தில் தூய்மை பார்க்க முடியுமா? பலரும் வாயிலே போட்டுக் குதப்பிக் குதப்பிச் சொல்கிற வேதமும் மந்திரங்களும் எச்சில் இல்லையா? பிறர் சொல்லக் கேட்டு நமக்குள் தங்கிவிட்ட அறிவு எச்சில் இல்லையா? இந்தப் பேரண்டமே ஏதோ ஒரு காலத்துக் கதிர்வெடிப்பில் துண்டாக்கித் துப்பப்பட்ட எச்சில் இல்லையா? பிள்ளையாய்ப் பிறப்பதற்கென்று பெண்ணுக்குள் ஆண் துப்பும் விந்து எச்சில் இல்லையா? வானத்துக் குறைநிலா நம் தொல்கதைகளின்படிப் பாம்பு கடித்த எச்சில் இல்லையா? நாக்குப் பறை அடித்து எழுப்பப்படுகின்ற ஒலிகள் ஒவ்வொன்றும் எச்சில் இல்லையா? எச்சிலே படாத முழுத் தூய்மை என்று ஒன்று இருக்கிறதா? இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

என்றால் புலிக்கால் முனிவரின் கதை? அது கதை. விடுக. அதற்கு வேறு பொருத்தம் பார்க்கலாம். புலியூர் என்பது ஊரின் பெயர். மற்ற பற்றுகளை எல்லாம் விட்டுவிட்டுப் புலியூரில் இருக்கிற இறைவனைப் பற்றுவது பெரும்பற்று. எல்லோரும் பெரும்பற்றாகப் பற்றத்தக்க ஊர் பெரும்பற்றப்புலியூர் ஆகிய சிற்றம்பலம் என்பது ஒன்று (க.வெள்ளைவாரணர், தில்லைப் பெருங்கோயில் வரலாறு). புலிப் பற்று பெரும்பற்று; பற்றியதை விடாப் பற்று.

ஆகவேயும் பெரும்பற்றப்புலியூர் என்பது இரண்டு.
கார்ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத்து இருந்தவனும் காணா வண்ணம்
சீர்ஒளிய தழல்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழ்ஒளியைச் சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏர்ஒளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுஉலகும் கடந்துஅண்டத்து அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே
(அப்பர் தேவாரம், VI:1:10)

கருத்த உடலும் சிவந்த விழியுமாய் இருக்கும் திருமால், தாமரைக்காரனாகிய பிரமன் இருவராலும் கண்டறிய முடியாத சீரொளித் தழல் பிழம்பு; எப்போது யார் கொளுத்திய ஒளி என்று யாரும் அறியாத தொல்பெரும் திகழ்ஒளி; அறியாமை இருட்டை விரட்டும் அறிவொளி; நிலம், விண், அண்டம் எல்லாவற்றையும் கடந்து பரவியிருக்கும் பேரொளி; பெரும்பற்றப்புலியூரில் வந்து இறங்கியிருக்கும் சிவச் செவ்வொளி; அதைப் பேசாத நாள் எல்லாம் பிறக்காத நாள்தான் என்று பெரும்பற்றப் புலியூரான்மேல் பெரும்பற்றுக் கொண்டு பாடுகிறார் அப்பர்.

எப்படித் திருமூலர் பயன்படுத்திய சிதம்பரம் என்னும் பெயர் மற்றவர்கள் பயன்பாட்டில் இல்லையோ, அப்படியே மற்றவர்கள் பயன்படுத்திய பெரும்பற்றப் புலியூர் என்னும் பெயர் திருமூலர் பயன்பாட்டில் இல்லை. இது, புற நிலையில் இருப்பவற்றையெல்லாம் அக நிலைக்கு மாற்றத் துணிந்தவர் திருமூலர் என்பதால் ஆகலாம்.
மேரு நடுநாடி மிக்குஇடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கைக் குறிஉறும்;
சாரும் திலைவனத் தண்மா மலயத்துஊடு
ஏறும் சுழுனை இவைசிவ பூமியே.
(திருமந்திரம் 2747)

இமய மலை, இலங்கை, இவற்றுக்கு இடையில் தில்லை, பொதியமலை ஆகியவை அடங்கிய நிலத்தைச் சிவநிலம் என்கிறார்கள். வைத்துக்கொள்ளலாம். மேரு என்பது நடுநாடி; அதற்குத் தெற்கே உள்ள இலங்கை இடைநாடி; வடக்கே உள்ள நிலப்பகுதி பிங்கலை; தில்லைவனம் இதயநிலை; பொதியமலை உந்திச் சுழி என்கிறார் திருமூலர். இப்போது புறத்தே இருக்கும் சிவநிலம் உங்களுக்குள் வந்துவிடவில்லையா?
செப்பும் சிவஆகமம் என்னும்அப் பெயர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்புஇல் எழுகோடி யுகம்இருந் தேனே
(திருமந்திரம் 74)

-என்று பாடுகையில் கூத்தாடும் மன்றத்தைத் திருமூலர் எவ்வளவு தூரம் அகவயப்படுத்தியிருக்கிறார் என்பது புலனாகும். என்னைச் சிவம் ஆக்க முனையும் சிவஆகமம் என்கிற செவ்வியல் அறிவைப் பெற்றேன்; அறிவைப் பெற்றபோது எனக்கே எனக்கான செம்மையுள்ள தலைவனைப் பெற்றேன்; தலைவனைப் பெற்றபோது எனக்கே எனக்கான மன்றத்தில், எனக்கே எனக்கான என் தலைவன், எனக்கே எனக்காக ஆடிய தனிக் கூத்தைக் கண்டேன்; அது நிலத்தில் அடி வைத்து ஆடாத ஆகாயக் கூத்து. அதைக் கண்டபின் நான் இருந்தேன், இருந்தேன், இடையறாது இருந்தேன்.

மற்றவர்க்கெல்லாம் பெரும்பற்றப் புலியூர் என்பது ‘இராசாதிராச வளநாட்டுத் தனி ஊர்’ என்றால், திருமூலர் கருத்தில் அது ‘அவரவர் வளநாட்டுத் தனி ஊர்’. தன்னாட்சி ஆர்வலர் திருமூலர் வாழ்க.

(தனியாட்சி தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com


உயிர் வளர்க்கும் திருமந்திரம்சிற்றம்பலம்புலிமுனிவர்சிவ வாக்கியர்இமய மலைஇலங்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author