

சிந்துகுமாரன்
கௌசிகன் என்னும் அரசராக இருந்த விசுவாமித்திரர், பிரம்மரிஷி வசிஷ்டர் மீது பொறாமை கொண்டார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு தானும் ரிஷியாக வேண்டும் என்று கடுந்தவம் மேற்கொண்டார். முதலில் ராஜரிஷிப் பட்டம் பெற்றார். அதில் திருப்தி அடையாமல் பிரம்மரிஷிப் பட்டம் பெறவேண்டும் என்று முயற்சி மேற்கொண்டார். அதுவும் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்ட அங்கீகாரம் பெறுவதைத் தன் நோக்கமாகக் கொண்டார்.
இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்த வேளையில், இஷ்வாகு வம்சத்தில் பிறந்த திரிசங்கு என்ற மன்னன், பூதவுடலோடு சொர்க்கம் அடையவேண்டும் என்ற விபரீத ஆசை கொண்டான். தன் குலகுருவான வசிஷ்டரிடம் சென்று தன்னை சொர்க்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டான். வசிஷ்டர் அதற்கு மறுத்துவிட்டார். திரிசங்கு விசுவாமித்திரரிடம் சென்றான். வசிஷ்டர் மறுத்ததைச் சொன்னான். போட்டி மனப்பான்மையில் ஆழ்ந்திருந்த விசுவாமித்திரர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். வசிஷ்டரால் முடியாததைத் தான் செய்து காட்டுவதாக உறுதி மேற்கொண்டார்.
தன் தவ வலிமையால் திரிசங்குவைப் பூலோகத்திலிருந்து தேவலோகத்துக்கு மேலே எழும்பச் செய்தார். பூதவுடலோடு ஒரு மானிடன் தேவலோகத்துக்கு வருவதைக் கண்ட இந்திரன், வச்சிராயுதத்தை வீசித் திரிசங்குவைக் கீழே பூலோகத்துக்குத் தள்ளினான். கீழே விழுந்துகொண்டிருந்த திரிசங்குவை விசுவாமித்திரர் அந்தரத்தில் நிறுத்தி, அவனைச் சுற்றி ஒரு புதிய சொர்க்கத்தைப் படைக்கத் தொடங்கினார்.
இதைக் கண்ட இந்திரனும் தேவர்களும் அச்சம் கொண்டு விசுவாமித்திரரிடம் வந்து புதிய சொர்க்கம் படைத்த வரை இருக்கட்டும், மேலே தொடராமல் அந்தக் கட்டத்திலேயே நிறுத்தும்படிக் கேட்டுக்கொண்டார்கள். விசுவாமித்திரர் நிறுத்திக்கொண்டார். ஆனால் நீண்டகாலமாகச் சேர்த்திருந்த தவ வலிமையை இழந்துவிட்டார் அவர். மறுபடி தவத்தைத் தொடங்கவேண்டி வந்துவிட்டது. இயற்கை நியதியை மீறி, தனிமனத்தின் நோக்கங்களுக்காகப் பிரக்ஞைத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவது நஷ்டத்திலேயே போய் முடியும்.
மனம் கட்டமைக்கும் உலகம்
பூலோகம், தேவலோகம், இந்திரலோகம், சிவலோகம், வைகுண்டம், யமலோகம், சொர்க்கம், நரகம், என்றெல்லாம் புராணங்களில் குறிப்பிடுகிறார்கள். கடவுளின் அருள் பெற ஒருவர் தவம் செய்யும்போது இந்திரனே அஞ்சும்படி தேவலோகமே ஆட்டம் கொள்கிறது என்று படிக்கிறோம். அந்தத் தவசீலரின் தவத்தைக் கலைப்பதற்காக மேனகை, திலோத்தமை, ஊர்வசி, ரம்பை போன்ற அப்ஸரஸ்களை இந்திரன் அனுப்பிவைக்கிறான். இதற்கெல்லாம் என்ன பொருள்?
தவம் என்னும் சொல், ‘தபஸ்’ என்னும் வடமொழிச் சொல்லின் மருவிய வழக்கு. ‘தபஸ்’ என்றால் வெப்பம் என்று பொருள். தவம் என்பது கவனத்தைப் புலனனுபவத்திலிருந்து விலக்கித் தன்மேலேயே குவித்து, தன்னுணர்வின் தோற்றுவாய்க்குக் கவனத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் செயல்பாடு. கவனம் ஆதிசக்தியின் வெளிப்பாடு. மிகவும் வீரியம் கொண்டது. பொதுவாகப் புலனுணர்வில் சிதறிப் போய்க்கொண்டிருக்கும் கவனத்தை விரயமாகாமல் ஒன்று சேர்க்கும்போது உள்ளே வெப்பம் உண்டாகிறது.
லோகங்கள் (உலகங்கள்) அனைத்தும் அகவெளி அனுபவங்களாதலால், உள்ளே எழும் தவத்தின் வெப்பம் அவற்றின் கட்டமைப்பைக் குலைக்க வல்லது. ஆதார சக்தியின் எழுச்சியில் அவை ஆட்டம்கொள்ளத் தொடங்குகின்றன. அவற்றை ஆளும் இயற்கைச் சக்திகள் அந்த உலகங்களின் கட்டமைப்பைப் பாதுகாக்க உடனடியாகச் செயல்படவேண்டியுள்ளது. இந்த விஷயத்தைத்தான் தவசீலர்கள் தவமியற்றும்போது இந்திரலோகம் ஆட்டம் காண்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. தவத்தைக் கலைக்க அப்ஸரஸ்களை இந்திரன் அனுப்புகிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உள்வயமாகக் குவிந்திருக்கும் கவனம், பெண்ணாசையால் ஈர்க்கப்பட்டு புலனிச்சையின் பாதையில் புறவயமாகச் செல்லத் தொடங்கிவிடுகிறது.
கவனம் சிதறிப் போய்த் தவம் கலைகிறது. புலன்கள் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்களை வைத்து மனம் கட்டமைக்கும் அனுபவத்தைத்தான் நாம் ‘உலகம்’ என்று சொல்கிறோம். அந்த அனுபவம், அகவெளியில்தான் நிகழ்கிறது. பூலோகம், பிரம்மலோகம், சிவலோகம், வைகுண்டம், இந்திரலோகம், தேவலோகம் எல்லாம் அக அனுபவங்களே. அக அனுபவம் என்றால் பொய் என்று பொருளல்ல. அனுபவம் என்பது தன்னளவில் உண்மையோ பொய்யோ இல்லை. அனுபவம் ஒரு நிகழ்வு. அனுபவம் மனத்தால் கட்டமைக்கப்படுவது; காலவெளிக் கட்டமைப்பு. உலகத்தைப் போலவே.
ஆனால், அனுபவத்துக்கு மெய்ம்மை அடிப்படை இல்லை. தொடங்கி, இருந்து, மறையும் தன்மை கொண்டது அனுபவம். அதனால் அது ஆதியந்தமில்லாத மெய்ம்மையில் வேர்கொண்டது இல்லை. உலகமும் தொடக்கம்-இருப்பு-முடிவு என்னும் வரையறைக்குட்பட்டதே. அறிவுணர்வு மெய்ம்மையின் வெளிப்பாடு. அறிவுணர்வின் தோற்றுவாயைக் கண்டு சேர்வதுதான் தவத்தின் நோக்கம். இந்த நோக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், புலனுணர்வின் வெளிச்சத்தில் தெரியவரும் பொருட்களை மனம் பற்றிக்கொள்கிறது. இதைத்தான் தாயுமானவர்,
உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி இணக்குறும் என் ஏழ்மைதான் என்னே பராபரமே
என்கிறார்.
மனக்கட்டமைப்பு இல்லாமல் அனுபவம் இல்லை. மேலே குறிப்பிட்ட அனைத்து லோகங்களும் அகக்கட்டமைப்புகளே, உலகம் உட்பட. இவையெல்லாம் குறியீடுகள். இவை பல உணர்நிலைத்தளங்களைக் குறிக்கின்றன.
இந்திரன் முதலானோர் இந்த நிலைகளில் இயங்கும் பல்வேறு சக்திகள். இந்த உலகங்களைப் புரிந்துகொள்வதைவிட, இவை எங்கே இருக்கின்றன என்று புரிந்துகொள்வது இன்னும் முக்கியமானது. புலனுணர்வின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான் புறவுலகம் என்று நாம் அழைக்கும் பௌதிக உலகம்.
உலகம் ஓர் இடம் இல்லை. அது ஒரு அனுபவம். காலமும் வெளியும் அந்த அனுபவத்தின் அம்சங்கள். உலகம் என்னும் அனுபவம் எந்த ஆண்டிலும், எந்த மாதத்திலும், எந்தத் தேதியிலும் நடக்கவில்லை. நூற்றாண்டுகளும் மாதங்களும் கிழமைகளும் அந்த அனுபவச் சட்டகத்தினுள்ளே நிகழ்கின்றன.
தனிமனத்தில் நிகழவில்லை
உலகம் என்னும் அனுபவம் தனிமனத்தில் நிகழவில்லை. தனிமனங்கள் வேர்கொண்டிருக்கும் கூட்டு மனத்தில் அது நிர்மாணிக்கப்படுகிறது. எல்லா அனுபவங்களும் - உலகங்களும் - கூட்டுப்பிரக்ஞையில்தான் வேர்கொண்டு நிற்கின்றன. அதனால்தான், தனிமனத்தின் பார்வையில், அந்த உலகத்துக்குச் சுய இருப்பு இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. அனுபவம் எல்லையற்ற உணர்வு வெளியில் நிகழ்கிறது. காலம் - இடம் இரண்டும் அனுபவக் கட்டமைப்பின் அம்சங்கள். அவை தன்னளவிலான அனுபவங்கள் இல்லை.
அனுபவம், உணர்வு வெளிக்குள்ளேயே தொடங்கி அங்கேயே அடங்கிவிடும் தன்மையுள்ளவையாதலால், உணர்வெளிக்குக் கால-வெளி எல்லைகள் இல்லை. தொடக்கமும் முடிவுமற்று, எல்லையேதுமற்று நீள்வது அது.
‘எல்லாம் என்னிலிருந்து தோன்றி எழுகின்றன. என்னிலேயே மீண்டும் கரைந்து போகின்றன,’ என்கிறான் கிருஷ்ணன், பகவத் கீதையில். கிருஷ்ணன் என்பது தொடக்கமும் முடிவும் எல்லையும் அற்ற பரவெளியின் குறியீடு.
(எல்லைகள் நெகிழும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு:
sindhukumaran2019@gmail.com