

நம் பெற்றோருக்கும் அப்பெற்றோரைப் பெற்ற இறைவனுக்கும் நடுவே நிற்பவர் குருநாதர். நடுநாயகமாக நிற்பதால் பெற்றோரின் நற்குணங்களையும் இறைவனின் சற்குணங்களையும் ஒருங்கே பெற்றவர்.
தன்னை நம்பி வரும் சீடனைத் தனதாக்குபவர். தன் ஞானத்தால் ஒருநாள் தன்னைப்போல் ஆக்குபவர். ‘நான்’ என்பதைத் தொலைத்தவர். எங்கெல்லாம் 'நான்' இருக்கிறதோ அவற்றைத் தொலைப்பவர். எல்லா சாத்திரங்களையும் பழுதறக் கற்றவர். அதே சமயத்தில் சாத்திரம் கடந்த பரஞான அனுபவத்தையும் பெற்றவர்.
பேரறிவும் பெருங்கருணையும் அவரின் இரு கண்கள். தன்னைப் போல் தன் சீடனும் சுடர வேண்டும் என்பதில் தான் அவரின் ஆனந்தம் இருக்கிறது. அது நடக்கும் வரை அவர் ஓயமாட்டார். சீடன் தன்னை வெறுத்தாலும் மறுத்தாலும் கூட பொருட்படுத்தமாட்டார். நெல் போன்ற சீடனைத் தன் இதய வயலில் விதைத்து, கருணை என்னும் நீருற்றி, அனுபவம் என்னும் உரம் ஏற்றி, ஆணவம் என்னும் களையகற்றிச் செம்பயிராக்குவதில் குருவுக்கு நிகர் குருவே.
தன்னை ஆட்கொண்ட நம்மாழ்வாரின் மகிமையை அறிந்து கொள்ள மதுரகவியாழ்வார் நெடுநேரம் எடுத்துக்கொள்ளவில்லை. நம்மாழ்வார் ஏதும் கற்றுக் கொடுக்காத போதும் அவரிடமிருந்து ஏதாவதொன்றைக் கற்றுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் இருந்தார். நம்மாழ்வாரின் திருவடிகளன்றி அவருக்கு வேறு இருப்பிடம் இருக்கவில்லை.
மனத்தை ஒருமுகப்படுத்திப் பணிய வைக்கக் கூட அவருக்கு அவசியம் ஏற்படவில்லை. அவர் நா தன்னியல்பாக குருவின் நாமத்தையே மந்திரமென ஓதியது. அதைச் சொல்லும் போதெல்லாம் அவர் நாவில் அமுதூறித் தித்தித்தது. இங்கே அமுதம் என்பது அகமகிழ்ச்சியின் குறியீடு மட்டுமன்று. ஓர் ஆன்மிக அனுபவமும் கூட.
சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பரப்பிய வள்ளல் பெருமான் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என மூன்று விதமான தேகங்கள் உண்டு என்கிறார். கழிவுகளும் நோய்களும் கொண்ட நம் தேகம் அசுத்த தேகம். ஆனால், ஒரு தேர்ந்த குருவிடம் யோகப் பயிற்சிகள் பெற்று சில உணவுகளை மட்டும் சாப்பிட்டால் அசுத்த தேகம் சுத்த தேகமாக மாறும் என்றும் அவர் கூறுகிறார்.
என்னென்ன காய்கள், கனிகள், கிழங்குகள், தானியங்கள், கீரை வகைகள் சாப்பிட்டால் இந்த நிலையை அடையலாம் என ஒரு பெரிய பட்டியலே தருகிறார். சுத்த தேக நிலையை அடைந்தால் கழிவுகளும் சேராமல் நோய்களும் வாராமல் உள்நாக்கில் அமுதூறும் என்பது அவரின் முடிபு. அருளமுதே என அவர் இறைவனை விளிப்பதும் அதனால் தான். உயிரிரக்கமே மோட்சத்துக்கான திறவுகோல் என்ற அவரது கருத்தையும் இங்கே சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
குருவருளாலும் இறைவனின் திருவருளாலும் மதுரகவியாழ்வார் யோக ஞானம் பெற்று நாக்கில் அமுதம் ஊறும் வரத்தைப் பெற்றிருக்கலாம். எங்கோ தொலைவில் இருந்த தன்னை அருகில் அழைத்து ஆட்கொண்ட நம்மாழ்வாரின் கருணை மதுரகவியாழ்வாரை உருக்கியிருக்கலாம். அந்த உருக்கம் படிப்படியாக அவரது உடலில் ரசவாத மாற்றங்களை உண்டாக்கியிருக்கலாம். அதனால் தான்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்றறியேன் குருகூர் நம்பி
என்று மதுரகவியாழ்வார் பாடுகிறார்.
நம்பி என்றால் முழுமையானவன் என்று ஒரு பொருள். கடவுள் என்றும் ஒரு பொருள். மதுரகவியாழ்வாருக்கு இவ்விரண்டுமாய் இருந்தவர் நம்மாழ்வார். இவ்விரண்டுமாய் இருந்ததால் அவருக்கு எல்லாமுமாய் இருந்தவரும் நம்மாழ்வார் தான்.
முந்தைய அத்தியாயம்: எனக்கு நம்மாழ்வாரே கதி | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 20