

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவியாழ்வார் ஓர் அமைதியான புரட்சியாளர். மற்ற ஆழ்வார்கள் நாராயணனே கதி என்று பாட , மதுரகவியாழ்வாரோ நம்மாழ்வாரே கதி என்று அவர் மேல் பன்னிரண்டு பாசுரங்களைப் பாடினார்.
நம்மாழ்வார் அவரது ஞானகுரு. ஓர் ஒளிப்பிழம்பாக வானில் தோன்றி, தன்னை வடநாட்டிலிருந்து தென்னாட்டில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு (குருகூர் ) அழைத்து வந்து சீடனாக ஏற்றருளிய நம்மாழ்வாருக்கு அவர் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் பட்டிருந்தார். நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பிறகும் அவரது குருபக்தி குன்றவில்லை.
நம்மாழ்வார் புகழைப் பாடி பரப்புவது, நம்மாழ்வார் பெயரிலான திருவிழாக்களை ஏற்பாடு செய்வது எனத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்தத் திருவிழாக்கள் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தன் தாகம் தீர்க்கும் மேகம் எந்தத் திசையிலிருந்து வருகிறது என்று நிலம் பார்ப்பதில்லை. தன்னை விட வயதில் சிறியவராயினும் நம்மாழ்வாரிடமிருந்து ஞானம் பெற மதுரகவியாழ்வார் தயங்கவில்லை. அவரது அறிவார்ந்த குருபக்தி முதல் பாசுரத்திலேயே மிதமிஞ்சி நிற்கிறது.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
‘நேரடியாகப் புகழ்ந்தால் நம்மாழ்வார் ஏற்கமாட்டார். ஆனால், உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என எல்லாமே எனக்குக் கண்ணன் என்றிருந்தவர் நம்மாழ்வார். அதனால், கண்ணனைத் தொட்டு துதி பாடினால் நம்மாழ்வாருக்குக் கண்ணனின் நினைவு வந்துவிடும். நம்மைக் கண்டுகொள்ளமாட்டார்’ என்பதனால் கண்ணனைப் பாடி தனது குருவின் புகழை மதுரகழியாழ்வார் தொடங்கினார் என ஆசாரியர்கள் ஒரு சுவையான விளக்கத்தை அளித்துள்ளனர்.
என் அப்பனாகிய கண்ணனைக் காட்டிலும் சிறந்தவர் நம்மாழ்வார் என்பது இந்தப் பாசுரத்தின் கருத்து. ஆனால், அந்த எளிய கருத்தின் ஊடே பெரும் தத்துவங்களை நுட்பமாகக் காட்டி விட்டுப் போகிறார் மதுரகவியாழ்வார்.
அன்று உரலோடு கண்ணனைக் கட்டிப்போட முயன்றாள் யசோதை. இன்று நாம் நம் உள்ளத்தோடு கண்ணனைக் கட்டிப்போட முயல்கிறோம். யசோதை பயன்படுத்தியது பல முடிச்சுகள் கொண்ட கூர்மையான, உறுதியான சிறிய கயிறு. நம் உள்ளமும் குற்றங்கள், குறைகள் என பல முடிச்சுகள் கொண்டது. ஆணவத்தால் ஆனது. எனவே கூர்மையானது. தீண்டப்படுகையில் காயப்படுத்துவது.
பலமுறை முயன்றும் யசோதையால் கண்ணனைக் கட்டிப்போட முடியவில்லை. எதற்கும் கட்டுப்படாதவன் அவள் சினத்தைக் கண்டு சிரித்துக்கொண்டே தன் உடலைச் சிறிதாக்கி தான் கட்டிப்போடப்பட அனுமதிக்கிறான். இதனால் ‘கட்டுண்ணப் பண்ணிய’ என்பது மிகவும் அடர்ந்த ஒரு சொல்லாக விளங்குகிறது.
நமது சிற்றறிவால் கண்ணனைக் கட்ட முயன்றாலும் நம் போதாமையைப் பொருட்படுத்தாமல் அவன் நமக்குக் கட்டுப்படுகிறான். நம் திறமையால் தான் இது சாத்தியமாயிற்று என நாம் பெருமை கொள்கிறோம். நம் நலத்துக்காக அதை உண்மை என்று நம்ப வைக்கிறான் அல்லவா? ஆதலால் அவன் பெருமாயன்.
அடியார்க்கொரு துயரென்றால் உடனே இரங்கும் கண்ணனின் எளிவந்த தன்மையை எண்ணும் போதே மதுரகவி ஆழ்வாருக்கு உள்ளமெல்லாம் தித்திக்கிறது.
அந்தத் தித்திப்பு மதுரகவியாழ்வாரை இன்னும் இன்னும் மேலே உயர்த்துகிறது.
அந்த உயர்ச்சி அவரை என்னென்ன செய்ய வைக்கிறது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.