அகக்கண்ணில் தெரிந்தவர் முகக்கண்ணில் தெரிந்தால்... | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 19

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
2 min read

மனிதனுக்குப் பிடித்த மகிழ்ச்சிகளில் ஒன்று, தன் அகக்கண்ணில் கண்டதைப் முகக்கண்ணில் காண்பது. ஒன்பது பாசுரங்களில் திருமாலை வைகுண்டநாயகனாக, உலகளந்த பெருமாளாக, ராமேஸ்வரனாக, நரசிம்மமூர்த்தியாக, திருவேங்கடமுடையானாக, ஆலிலைக் கண்ணனாக திருப்பாணாழ்வார் அனுபவித்து மகிழ்ந்திருந்தாலும் அவையனைத்தும் அவர் ஞானக்கண்ணில் கண்ட காட்சிகள்.

நிறைவுப் பாசுரமான பத்தாம் பாசுரத்தை எழுதுவதற்கு முன்புதான் அவர் ஸ்ரீரங்கம் கோயில் பெரிய பெருமாள் சன்னிதிக்குள் புகுந்து பெருமாளை நேருக்கு நேராகச் சந்திக்கிறார். லோக சாரங்கனின் தோள்களில் இருந்தவர் லோகநாயகனின் தாள்களில் போய் அமர்கிறார். குறும்புக்கார கண்ணனாக அவர் முன் தன்னை வெளிப்படுத்துகிறார் ரங்கநாதன். ஆழ்வாரிடமிருந்து ஓர் அழகான பாடல் பிறக்கிறது.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

கொண்டல் என்பது இங்கே மழை தருகின்ற கருநிற மேகம். இது பெருமாளின் நிறத்துக்கு மட்டும் உவமையாகாமல் அவரது தரத்துக்கும் சேர்த்தும் உவமையாகிறது. இதனால் தான்,

மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்
அழியா அழகுடையான்.

எனப் பாடலின் இறுதியில் ‘மழைமுகிலை’ என்று எழுதிய பிறகுதான் மொழியின் எல்லை வரை சென்று ஏதோ நம்மால் முடிந்த உவமையை ராமபிரானுக்குச் சொல்லிவிட்டோம் என்று கம்பருக்குக் கொஞ்சம் நிறைவு வருகிறது.

கருமை நிறம், குளிர்ச்சி, இடையறாமல் இயங்குதல், பெருங்கருணை என அரங்கனின் நான்கு முக்கிய குணங்களும் ‘கொண்டல் வண்ணன்’ என்னும் சொல்லாட்சியில் அடங்கி விடுகிறது. முதல் மூன்று குணங்களைக் காட்டிலும் நான்காவதான பெருங்கருணை தான் திருப்பாணாழ்வாரை ஈர்த்து உருகச் செய்தது. எந்த நிலமாயினும் மேகம் பொழியும். எந்தக் குலமாயினும் பெருமாள் அருள் பாலிப்பார். பரமேட்டியாகிய நாராயணனின் இந்தப் பெருந்தன்மைக்கு நன்றிக்கடனாகத் தான் இந்தப் பாசுரத்தை ‘கொண்டல் வண்ணன்’ என்று திருப்பாணாழ்வார் தொடங்குகிறார்.

ஒரு மழைமேகத்தை நம்மால் எளிதில் கண்டுகொள்ள முடியும். அதன் உள்ளும் புறமும் எந்த ரகசியமுமில்லை. அதே போலத்தான் பெருமாளின் திருமேனியைக் காணும் பொழுது அவனுள் இருக்கும் பரமாத்ம ஸ்வரூபத்தை நம்மால் உணர முடியும். ஆனால், மனிதனின் உடலைப் பார்க்கும்போது அவனுள் இருக்கும் சீவாத்ம ஸ்வரூபத்தின் உண்மைத்தன்மையை நம்மால் உணர முடியாது. மனிதன் பொய்யன். மாலன் மெய்யன்.

இதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை அவர்கள், ‘பன்னீர் செம்பு போலே உள்ளே உள்ளவை அனைத்தும் வெளியே தெரியும்படி பெருமாள் இருக்கிறார்’ என்று ‘கொண்டல் வண்ணன்’னுக்கு விளக்கம் தருகிறார்.

அடுத்து வரக்கூடிய ‘கோவலனாய்’ என்ற சொல்லும் மாலவனின் பேரருளை நமக்குள் விகசிக்கச் செய்கிறது. அவன் நினைத்திருந்தால் பாற்கடலின் மீதுள்ள பாம்பணையின் மீது எந்தக் கவலையுமின்றி எப்போதும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பூமியிலுள்ள மனிதர்களின் துயரை நினைத்து அவன் பர வாசுதேவ நிலையிலிருந்து இற(ர)ங்கி வருகிறான். இடர்க்குலத்தில் உழலும் உயிர்களைக் காப்பதற்காக சிரமம் பாராது இடைக்குலத்தில் கண்ணனாக அவதாரம் எடுக்கிறான்.

கோ எனில் பசு. ஆன்மிக அகராதியில் பசு என்பது சீவாத்மா. கோவலன் என்றால் உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் மேய்ப்பதில் வல்லவன். மேய்த்தல் என்ற சொல்லில் பேணுதல், வழிநடத்துதல், பாதுகாத்தல், அன்பு செலுத்துதல் உள்ளிட்ட பல அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.

கால் கொண்ட கறுப்பு மேகமாய், குழலூதி உயிர்களைக் காத்தருளும் கோபாலகிருஷ்ணனாய், வெண்ணெய் உண்ட பெருவாயனாய் அரங்கேசனைக் கண்ணுறும் திருப்பாணாழ்வாருக்கு ரங்கநாதனப் பெருமான் திகட்டாத அமுதமாகத் தெரிகிறான். அதை அருந்த அருந்த பசியும் தாகமும் அவருக்குக் கூடிக்கொண்டே போகின்றன.

தன்னைத் தித்திக்க தித்திக்க துய்த்துக் கொண்டிருந்த திருப்பாணாழ்வாரை ‘இனி நீ பூமியில் இருந்தது போதும். வா என்னுடன் வைகுண்டத்துக்கு’ என்று திருமால் அழைத்துக் கொண்டார்.

திருமாலை ஒருமுறை நேரில் கண்ட திருப்பாணாழ்வார் அதற்குப் பிறகு வேறு எதையும் காணவில்லை.

முந்தைய அத்தியாயம்: ஊழி நாராயணனும் ஆழி நாராயணனும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 18

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in