Published : 01 Mar 2023 06:04 AM
Last Updated : 01 Mar 2023 06:04 AM

விவசாயம் செய்யும் எறும்புகள்!

சில மாத்திரைகளை உணவுக்கு முன்பும் சில மாத்திரைகளை உணவுக்குப் பின்பும் சாப்பிடச் சொல்வது ஏன், டிங்கு?

- கி. ஆர்த்தி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சில மாத்திரைகள் உணவுடனோ பானங்களுடனோ சேரும்போது, அவை மருந்து வேலை செய்வதைத் தாமதப்படுத்தும். இதனால் நமக்கு நோய் குணமாகும் வேகமும் குறையும். அதனால் சில மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

சில மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உடலுக்கு ஒவ்வாமை, புண் (அல்சர்) போன்றவற்றை ஏற்படுத்தலாம். உணவுடன் சாப்பிடும்போது மாத்திரைகளின் தன்மை சற்று குறைந்து, வயிற்றைப் பாதிக்காது. அதனால்தான் சாப்பிட்ட பிறகு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.

பொதுவாகச் சாப்பிடுவதற்கு முன்பு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைக் குறைந்தது அரை மணி நேரத்துக்கு முன்பாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை அரை மணி முதல் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு எடுத்துக்கொண்டால் நல்ல பலன் இருக்கும். இது எல்லா மாத்திரைகளுக்கும் பொருந்தாது. அதனால் மருத்துவரிடம் தெளிவாகக் கேட்டுவிடுவது நல்லது, ஆர்த்தி.

ஏன் ஒருவரை வாழ்த்துகிறோம்? அந்த வாழ்த்து வெற்றியைத் தேடித் தருமா, டிங்கு?

- வி. சித்தார்த், 11-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

பிறருடைய ‘நல்ல’ எண்ணங்கள் நல்ல விதத்தில் நம்மை வழிநடத்தும், வெற்றியைத் தேடித் தரும் என்று பலரும் நம்புகிறார்கள். அதனால்தான் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்த வாழ்த்தால் வெற்றி கிடைக்கிறதா, இல்லையா என்பதைவிட, வாழ்த்துப் பெறுபவர்களைத் தன்னம்பிக்கை கொள்ள வைக்கிறது. அந்தத் தன்னம்பிக்கை இன்னும் சிறப்பாக அந்தப் பணியைச் செய்ய வைக்கிறது, சித்தார்த்.

இலைகளை வெட்டிச் சாப்பிடுவதால்தான் அந்த எறும்புக்கு இலைவெட்டி எறும்பு என்று பெயரா, டிங்கு?

- என். சத்யா, 4-ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளி, சாணார்பாளையம், நாமக்கல்.

இலைகளை வெட்டுவதால் அந்த எறும்பை ‘இலை வெட்டி எறும்பு’ என்று அழைக்கிறார்கள். இலைகளை வெட்டிய உடன் அப்படியே பச்சையாக இவை சாப்பிடுவதில்லை. புற்றுக்குள் ஓரிடத்தில் இலைகளைச் சேமிக்கின்றன. அந்த இலைகளின் மீது வேதித் திரவத்தைச் சுரக்கின்றன.

சில நாள்களில் இலைகள் மட்கி, அதில் பூஞ்சை உருவாகும். அந்தப் பூஞ்சைகளைத்தான் இலைவெட்டி எறும்புகள் சாப்பிடுகின்றன, சத்யா. அதனால்தான் இந்த எறும்புகளை, ‘விவசாயிகள்’ என்று சொல்கிறார்கள். அதாவது விவசாயம் செய்வதில் இவை மனிதர்களுக்கு முன்னோடிகள்!

தேர்வு நெருங்குகிறது. ஆனால், படிப்பது எல்லாம் மறந்துவிடுகிறது. நான் என்ன செய்வது, டிங்கு?

- சி. நந்தினி, 8-ம் வகுப்பு, ஸ்ரீவிக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.

மனப்பாடம் செய்வதைவிடப் புரிந்துகொண்டு படித்தால் மறக்காது. அதே போல படித்ததை உடனடியாக எழுதிப் பார்த்துவிட்டாலும் மறக்காது. நமக்கு ‘மறந்துவிடுகிறது’ என்கிற நினைப்பை நீங்கள் உடனடியாக மறந்துவிடுவது நல்லது. ஓராண்டு முழுவதும் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகள் வரப்போகின்றன.

அந்தக் கேள்விகளுக்கான பதில்களை எந்தவிதமான பதற்றமும் இன்றி எழுதிவிடலாம் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். தைரியமாகத் தேர்வை எதிர்கொள்வீர்கள், நந்தினி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x