Published : 12 Oct 2022 06:38 AM
Last Updated : 12 Oct 2022 06:38 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கை நீட்டினால் தானாகத் தண்ணீர் வருவது ஏன்?

சூரியனும் நிலாவும் வானத்திருந்து ஏன் கீழே விழுவதில்லை, டிங்கு?

- சு. வர்ஷினி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நாம் பூமியில் வசிப்பதால் நமக்கு மேலே இருக்கும் பகுதியை வானம் என்றும் கீழே இருக்கும் பகுதியை நிலம் என்றும் குறிப்பிடுகிறோம். சூரியன், நிலா மட்டுமல்லாமல் பூமி போன்ற கோள்களும் அண்டவெளியில் அந்தரத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அண்ட வெளியில் மேல் பகுதியும் இல்லை, கீழ்ப்பகுதியும் இல்லை. ஒவ்வொரு கோளுக்கும் விசை இருக்கிறது. அந்த விசையால் தன்னையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருகின்றன, இப்படிச் சீரான வேகத்தில் சுற்றுவதால் அவை வேறெங்கும் விழ வாய்ப்பில்லை, வர்ஷினி.

பெண் மயிலுக்குத் தோகை இல்லையே ஏன், டிங்கு?

- எஸ். சிவனேஷ், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

உயிரினம் என்றாலே அதன் முக்கியப் பணி அடுத்த சந்ததியை உருவாக்குவதுதான். ஆணும் பெண்ணும் சேர்ந்து குடும்பம் நடத்தினால்தான் அடுத்த சந்ததி உருவாகும். பெண்களை குடும்பம் நடத்துவதற்கு அழைக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது. குடும்பம் நடத்திய பிறகு முட்டைகளை இட்டு, அடைகாக்கும் பொறுப்பு பெண்களுக்கு இருக்கிறது. எனவே கண்கவர் தோகையை விரித்து, நடனமாடி, பெண்ணை ஆண் மயில் அழைக்க வேண்டும். அதனால் இயற்கை ஆண் மயிலுக்கு நீண்ட அழகிய தோகையை வழங்கியிருக்கிறது. பெண் மயிலுக்கு அந்தத் தேவை இல்லாததால், நீண்ட தோகை இல்லை. மயிலுக்கு மட்டுமில்லை, பொதுவாகவே பெரும்பாலான உயிரினங்களில் பெண்ணைவிட, ஆண் இனம் கூடுதல் வசீகரத்துடனே இயற்கையில் உருவாகியிருக்கின்றன, சிவனேஷ்.

சில இடங்களில் குழாய்க்கு நேராகக் கையை நீட்டினால் தண்ணீர் வருகிறது, கையை எடுத்துவிட்டால் தண்ணீர் நிற்கிறது. இது எப்படி டிங்கு?

- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

தானியங்கிக் குழாய்கள், சென்சார் (உணர்வி) மூலம் இயக்கப் படுகின்றன. குழாய்க்கு முன்பாக கையை நீட்டும்போது, குழாயில் இருக்கும் அகச்சிவப்புக்கதிர்கள் (Infrared) சிதைக்கப்படுகின்றன. அப்போது சோலேனாய்ட் வால்வு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியே வருகிறது. கையை எடுத்தவுடன் மீண்டும் அகச்சிவப்புக் கதிர்கள் இயல்புநிலைக்குத் திரும்புகின்றன. சோலேனாய்ட் வால்வு மூடிக்கொள்கிறது. தண்ணீர் நின்றுவிடுகிறது. இந்த சென்சார் குழாய் இயங்குவதற்குக் குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படுகிறது, இனியா.

இரண்டு முறை பற்கள் விழுந்த பிறகு மீண்டும் முளைக்குமா, டிங்கு?

- பா. முத்துப்பேச்சி, 3-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

மனிதர்களுக்குப் பால்பற்கள் விழுந்து மீண்டும் முளைக்கும். இரண்டாவதாக உருவான நிலையான பற்கள் விழுந்தால், மீண்டும் முளைக்காது, முத்துப்பேச்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x