Last Updated : 18 Jul, 2022 04:20 PM

Published : 18 Jul 2022 04:20 PM
Last Updated : 18 Jul 2022 04:20 PM

சங்கிலி புங்கிலி கதவைத் திற! - சாலை செல்வம்

ஆசிரியர் மகள் நான். படித்த வீட்டுப் பிள்ளைகளாக இருப்பதும் படிக்கும் பிள்ளைகளாக இருப்பதும் அப்போது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. படித்த, படிக்கும் பெண் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பலர் இலக்கணம் வகுத்துக்கொண்டே இருந்த காலம். பாடப் புத்தகங்களிலும் அது உண்டு. பாரதி, காலை எழுந்தவுடன் படிப்பு என்று பாடியிருப்பார். எங்கள் வீட்டு இலக்கணத்தில் அதிகாலை காலை எழுந்து, பஞ்சனை எழுச்சிப் பாட கோயிலுக்குச் செல்ல வேண்டும். கருவப்பட்டை பல்பொடியை இடது கையிலேந்தி, வலது கை ஆள்காட்டி விரலால் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும்போதே தூங்கிவிடுவேன்.

“எவ்வளவு நேரம் பல் விளக்குற?” என்கிற அம்மாவின் சத்தம் கேட்டதும், வேகமாக வேலையை முடித்துவிட்டு, கோயிலுக்குச் சென்றுவிடுவேன். அங்கே பாடிக்கொண்டே தூக்கத்தைத் தொடர்வேன்.

அம்மாவுக்கு நல்ல பிள்ளை என்றால் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் ஊரான மெய்வழிச்சாலையில் ஆன்மிகக் காரணங்களால் இன்றுவரை மின்சாரம் இல்லை. அதனால், எங்கள் வீட்டில் அரிக்கன் லாந்தர் விளக்குதான். விளக்கு வைத்ததும் புத்தகத்தை எடுக்க வேண்டும். முதலில் வேதம் ஓத வேண்டும். பிறகு பாடப் புத்தகம். அம்மா வாங்கிக் கொடுக்கும் குழந்தைகளுக்கான ரஷ்யக் கதைப் புத்தகங்களும் அதில் உண்டு. அம்மா படி என்றால் படிக்க வேண்டும். படித்ததைப் பார்க்காமல் சொல் என்றால் சொல்ல வேண்டும்.

ஒருநாள் படித்துக்கொண்டே தூங்கியபோது, விளக்கின் மேல் விழுந்துவிட்டேன். என் முடியில் நெருப்பு பற்றிக்கொண்டது. வேகமாக அணைத்தேன். பொசுங்கிய முடிகளைச் சேகரித்து ஒரு பேப்பரில் மடித்து ஒளித்து வைத்தேன். காலையில் அம்மா என் தலையைப் பார்த்து பயந்துவிட்டார்! எட்டு ஆண்டுகளாக அந்த முடி வளராமல், குத்திட்டு நின்றது.

வகுத்தல் கணக்கு போடச் சொன்னார் அம்மா. அதுவரை எனக்கு வகுத்தல் வாய்ப்பாடு சொல்லித் தரவில்லை. அது பற்றி அம்மாவிடம் சொல்வதற்கும் பயம். கணக்குப் போடுவதுபோல் நடித்துக்கொண்டிருந்தேன். அம்மா வந்து நோட்டைப் பார்த்தார். கோபத்தில் நோட்டைத் தூக்கி வீசினார். அம்மாவின் இன்னொரு கையிலிருந்த விறகு என் கண்ணைப் பதம் பார்த்துவிட்டது. என் கண்ணின் நிலையைப் பார்த்த அம்மா கதறி அழுதார். இனி பாடம் சம்பந்தமாக எந்தக் கேள்வியும் கேட்பதில்லை என்று கடவுளிடம் வேண்டினார். மருத்துவமனைக்குச் சென்றோம். “படி” என்று சொல்லாத அம்மா அழகாக இருப்பார். “படி” என்று சொல்லும் அம்மா அக்கறையோடு இருப்பார்.

அடுப்பில் பாலை வைத்துவிட்டு, பாத்திரம் விளக்குவார் அம்மா. பால் பொங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் பருப்பு வேகும், காய் வாங்கப் போயிருப்பார். அதைக் கிளறிவிட வேண்டும். ஒரு நாள் தங்கைக்கு உடம்பு சரியில்லை. ஒரு வெள்ளைத்தாளில் கையெழுத்துப் போட்டு என்னிடம் கொடுத்து, லீவ் லெட்டர் எழுதி பள்ளியில் கொடுத்துவிடு என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார் அம்மா. அனுப்புநர், பெறுநர் எழுதும்போதே குழம்பிவிட்டேன். அம்மா கையெழுத்துப் போட்ட தாள் தவறாகிவிட்டது. அம்மாவின் கையெழுத்தைப் போட்டுப் பார்த்தேன். முடியவில்லை. குவிந்து கிடந்த காகிதங்களில் ஓரளவு சரியான கையெழுத்து உள்ளதை எடுத்து, ஆசிரியரிடம் கொடுத்து, கடிதம் எழுதிக்கொள்ளும்படி சொன்னேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிட்டார். பிறகு என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்!

ஆட்டுக்கல்லில் நான் அரிசி ஆட்டினால், அக்கா உளுந்து ஆட்ட வேண்டும். அம்மா துணிக்கு சோப்பு போட்டால், நான் அலசி, காய வைக்க வேண்டும். நான் பாத்திரம் தேய்த்தால், தங்கை கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவர் கோலம் போட வேண்டும். அக்காவும் தங்கையும் செய்வார்கள். ஊர் சுற்றியான எனக்கு அது கொஞ்சம் கஷ்டம். வேலைகளை ஏமாற்றக் கற்றுக்கொண்டேன். ஒரே கோலத்தைப் போடுவேன். அதிலிருந்து விடுதலை கிடைத்தது. அரிசி களையும்போது கையில் கல் நிற்கவில்லை என்றதால் அந்த வேலையும் கிடையாது. இப்படிப் பல நுட்பங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கியதால் ‘ஏமாற்றுக்காரி’ என்கிற பெயரும் கிடைத்தது.

வீட்டில் முறுக்கு சுட்டால் அடுத்த 10 நாட்கள் முறுக்குதான். அதிரசம் சுட்டால் அடுத்த 10 நாட்கள் அதுதான். தின்பண்டங்களை நாங்கள் கண்டுபிடிக்க முடியாமல் ஒளித்துவைப்பதும் எங்களால் திறக்க முடியாமல் மூடிவைப்பதும் அம்மாவின் திறமைக்குச் சான்று!

ஒரு தடவை சர்க்கரை டப்பாவை எடுக்கும்போது, ஐந்து கிலோ சர்க்கரையும் என் மீது கொட்டிவிட்டது. அம்மாவின் புடவையைப் போர்த்திக்கொண்டு, அப்படியே கம்மாய்க்கு ஓடினேன். தண்ணீரில் மூழ்கி, சர்க்கரையைக் கரைத்துவிட்டு, வெளிவந்தேன்!
ஊர் சுற்றிகளான நாங்கள் அவ்வப்போது தொலைந்து போவதும் உண்டு. சாப்பிட வரவில்லை என்றால் தேடுவார்கள். ஒரு நாள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு தொட்டியில் ஒளிந்து, அப்படியே தூங்கிவிட்டேன். விளையாடுபவர்கள் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா வந்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நானாகத் தூக்கம் கலைந்து எழுதுவந்தபோது, வீட்டில் ‘நன்றாக’ கவனித்தார்கள்!

எப்பொழுதும் அப்பாயி பாட்டியிடம்தான் கதை கேட்பது வழக்கம். சொர்க்கம், நரகம் கதைகளையும் அக்கா, தங்கச்சி கதைகளையும் கேட்பதற்கு அவர்களுக்கு சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுத்து, முதுகுக்கு மருந்து தடவி, பிறகுதான் கதை கேட்க உட்காருவோம். நான் மட்டும் அப்படியே தூங்கிவிடுவேன். எழுப்பி அனுப்புவார்கள். மேற்கே ஒரு வீட்டில் கதை சொல்கிறார்கள் என்று தெரிந்து அங்கே சென்றேன். தொலைவில் உள்ள அந்த வீட்டை அம்மாவால் ஊகிக்கக்கூட முடியாது. கதை கேட்டுக்கொண்டே வழக்கம் போல் தூங்கிவிட்டேன். திடீரென்று இரவில் விழித்து, வீட்டுக்கு ஓடிவந்தேன். நடக்க நடக்க வீடு வரவில்லை. எங்கள் மீது உயிரையே வைத்திருக்கும் அம்மாவின் அனைத்துச் செயல்பாடுகளும் என் நடையின் முன் இருந்த இருட்டில் காட்சிகளாகத் தோன்றி மறைந்தன. கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அடிக்கும் மணி ஒலித்தது.
மூன்று மணி. எந்தச் சத்தமும் இல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் நெல் சுவருக்குள் ஒளிந்து, நான் இங்குதான் தூங்கினேன் என்று சாதிக்க வேண்டும் என்பது திட்டம். பறவை சிறகசைத்தால்கூட விழித்துவிடும் அம்மா என் காலை, தன் கையால் கவ்விவிட்டார்!எண்ணற்ற விளையாட்டுகளால் ஆனது எங்கள் குழந்தைப் பருவம். என்னைப் போன்றவர்களுக்கு வேலையும் விளையாட்டுதான். கடைக்குப் போகவேண்டும் என்றால் ஒரு விளையாட்டை உருவாக்கிவிடுவேன். வீட்டிலிருந்து கடைக்குச் சில்லு விளையாடிக்கொண்டே செல்வது, கண்ணை மூடிக்கொண்டே செல்வது, குதித்துக்கொண்டே செல்வது, ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே செல்வது, நடனமாடிக்கொண்டே செல்வது என்று இருக்கும். அதேபோல் அறுவடைக் காலங்களில் காயும் வைக்கோலுக்குள் ஒளிந்து விளையாடுவது, பூ பூக்கும் காலங்களில் கல்யாணம், சடங்கு போன்ற விசேஷங்களைக் கொண்டாடும் விளையாட்டு என இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப விளையாட்டை உருவாக்குவோம்.

கிச்சி கிச்சி தாம்பாளம், சங்கிலி புங்கிலி கதவைத் திற, பூப்பறிக்க வருகிறோம் என்பது போன்ற எண்ணற்ற குழு விளையாட்டுகளையும் பாடலுடன்கூடிய விளையாட்டுகளையும் விளையாடிக்கொண்டே இருப்போம். குரங்கு கோல் விளையாடும்போது மரத்தின் உச்சியில் ஓர் உடைந்த கிளையில் சதையோடு ரத்தத்தைப் பார்த்தேன். பிறகு அது என் கையில் இருந்ததுதான் என்பதை உணர்ந்தேன். காயத்துடன் இருந்த என்னைப் பலர் தூக்கிக்கொண்டுவரத் தயாராக இருந்தபோதும் யாரும் வேண்டாம் என்று நானே வீட்டுக்குப் போனேன். மரம் ஏறியது, குரங்குகோல் விளையாடியது என எல்லாவற்றையும் மறைத்து நான் சொன்ன பொய்க்கதையை எல்லாரும் வியந்து கேட்டார்கள். திரும்பச் சொல்லும்படி கேட்டு, காயம் எப்படிப்பட்டது என்றெல்லாம் அலசினார்கள்.

ஒரு முறை சைக்கிள் ஓட்டிக் கீழே விழுந்து நல்ல காயம். வலியையும் தாங்க வேண்டும். காயத்தையும் மறைக்க வேண்டும். புண்ணில் சீழ்வைத்ததும் அம்மாவுக்குத் தெரிந்தது. பிறகு அது பெரிய காயமாகி, சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.

கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x