Published : 11 Jul 2022 03:47 PM
Last Updated : 11 Jul 2022 03:47 PM

கல்லைத் தூக்கு, கருப்பட்டி தாரேன்! - எஸ். தினகரன்

எனது பால்யம் அருப்புக்கோட்டையிலும் மதுரையிலுமாகக் கழிந்தது. காக்காப்பொன் எனும் ஜிப்ச சில்லாக்கு சேகரிப்பேன். கருவேலங்காடுகளில் மாடு பிடிப்பது (ஜல்லிக்கட்டு வீரனோ எனத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்! மாடு என்பது சீமைக்கருவேலமரத்தில் வாழும் கௌபக் எனும் பூச்சி), தட்டானைப் பிடித்து ‘கல்லைத் தூக்கு, கருப்பட்டி தாரேன்’ என்றெல்லாம் விளையாடியிருக்கிறேன்.
அருப்புக்கோட்டை பள்ளி மைதானத்தில் மழைக்காலத்தை ஒட்டிய நாள்களில் மழைப்பூச்சிகள் அதிகமாகத் தென்படும். அது புல்லைத் திங்காது என்பது தெரியாது. சிறு துளைகளிட்ட தீப்பெட்டிகளில் மழைப்பூச்சியைப் பிடித்துப் போட்டு, உணவாகப் புற்களைக் கிள்ளிப் போட்டு வைத்திருப்பேன்.

சிறுவயதில் தினகரன்

பொன்வண்டு பிடிப்பது, தலைப்பிரட்டைகளை மீன் என்று நினைத்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் வளர்ப்பது, நண்பன் ஒருவன் முயல் குட்டி வளர்க்கத் தருவானா என்று அதிகாலையிலேயே அவன் வீட்டு முன்பு காத்திருப்பது என்றே கழிந்தது. அப்போது எனக்குத் தெரியாது நான் விலங்கியல் பேராசிரியராவேன் என்று. இப்போது உயிர்வதை பாவம் என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருக்கிறேன்!

அருப்புக்கோட்டையில் வசித்தபோது தேவாங்கச் செட்டிமார் தெருவில்தான் குடியிருந்தோம். ஓரிரு வீடுகளில்தான் தமிழ்க் குடும்பம் இருந்தது. அவர்கள் எல்லாரும் உடைந்த கன்னடம் பேசுவார்கள். தண்ணீர்ப் பஞ்சம் வேறு. குளிப்பதற்காக வெகுதொலைவு செல்வோம். பெண்பிள்ளைகளுக்கு மட்டுமே வீட்டில் குளிக்க அனுமதி. நினைத்துப் பாருங்கள் வெயில்காலத்தில் தண்ணீர் கஷ்டம். மழைக்காலத்தில் இயற்கை உபாதைகளைக் கழிக்க மிகவும் சிரமம். நடுத்தரக் குடும்ப வாழ்க்கை. தேவாங்கர் கல்லூரியில் படங்கள் திரையிடுவார்கள். இன்னும் அங்கே பார்த்த ‘புன்னகை’ திரைப்படம் நினைவில் இருக்கிறது.

முன்பெல்லாம் துணிப்பைதான். எழுதுவதற்குச் சிலேட்டும் குச்சிகளும்தாம்! வீட்டுப் பாடத்தை அழியாமல் கொண்டு செல்வதற்கே பெரிய திறமை வேண்டும். அப்படி ஒரு நாள் சிலேட்டைப் பைக்குகள் திணிக்க முடியாமல் நொறுக்கி அள்ளிப்போட்டுக் கொண்டுவந்ததில், வீட்டில் நொறுங்கியது நான்தான்! குச்சிகளுக்குச் சிறந்த தேர்வு கடல்குச்சி. கடல்வாழ் sea urchin தான் அது. அந்த உயிரினத்தின் வாய் அமைப்பு குறித்து அரிஸ்டாட்டில் வைத்த பெயர்தான் இன்றளவிலும் நிலைத்திருக்கிறது, ‘அரிஸ்டாட்டில் விளக்கு’. பின்னாளில் இது என் வேலையைத் தீர்மானிக்கும் முக்கியமான கேள்வியாகவும் இருந்தது.

அப்போது குழந்தைகளின் மத்தியில் தொற்று வருவது இயல்பு. குறிப்பாகச் சிரங்கு. ‘சிரங்குவத்தி’ என்கிற பட்டப்பெயர் அவ்வளவு பிரபலம். மண்ணில் புரள்வதால் ஏற்படும் தொற்று. ஸ்கேபிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெரும்பாலும் அந்தப் பூச்சிகள் கைகளில்தான் வாழும்.
கொப்புளங்களுக்குள் இருந்துகொண்டு நம்மை வதைக்கும். கைகளைச் சட்டைப்பைக்குள் மறைத்து வைத்தால் வயிற்றிலும் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் அடிபடாத நாட்களே இல்லை. அதனால், கால்களில் காயங்கள் நிரந்தரமாக இருக்கும். சிலருக்கு ‘புண்ணுவத்தி’ என்கிற பெயர் நிலைத்தேவிட்டது. பட்டப்பெயர்கள் ஏராளமாகப் புழங்கும்.

பேராசிரியர் தினகரன்

நாங்கள் படித்தபோது எல்கேஜி, யுகேஜி எல்லாம் கிடையாது. படிப்பதற்கு அவ்வளவாக மெனக்கெட்டதில்லை. விளையாட்டாகத்தான் படித்தோம். ஆங்கிலம் எங்களுக்கு மூன்றாம் வகுப்பில்தான் அறிமுகம். புஷ்பா டீச்சர்தான் பெரும்பாலான குழந்தைகளுக்கு அரிச்சுவடி பழக்கியவர். அவர் பெயர் தெரிந்த அளவுக்கு வேறு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை.

அருப்புக்கோட்டையில் கிடைக்கும் உருண்டையாக உருட்டிக் கொடுக்கப்படும் உளுந்தங்களி ஒன்றுதான் அப்போதைய சத்துணவு. பெரும்பாலான காலை நேர உணவும் அதுதான். கூம்பு வடிவ மிக்சர், பூந்திப் பொட்டலங்கள் மாலை நேரத்தில். மற்றபடி படி படி எனக் கடுமை காட்டாத பள்ளிப்பருவம்தான். எனினும் பானிபட் போர்களை நினைவில் கொள்வதுதான் பெரும்பாடு. மீண்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்கிற தீராத ஆசை மட்டுமே மூளை எங்கும் வியாபித்திருக்கிறது.

கட்டுரையாளர், பேராசிரியர், எழுத்தாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x