Published : 12 Jul 2022 12:54 PM
Last Updated : 12 Jul 2022 12:54 PM

வலது கையா, இடது கையா? - கதை - சி. சுகுமாரன்

விடுமுறை நாள்களில் கயலும் அம்மாவும் பூங்காவுக்குச் செல்வார்கள். சிறிய பூங்காதான். ஆனால், அழகான பூங்கா.
பூங்காவில் இரண்டு ஊஞ்சல்களும் ஒரு சறுக்கு மரமும் இருந்தன.

கயல் மணல்வெளியில் பந்து விளையாடினாள். கயலின் அம்மா பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண், கயலையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்.

“உங்க குழந்தை இடது கையால் பந்து விளையாடுறாளே... இடது கைப் பழக்கம் நல்லதல்ல, இப்போதே அதை மாற்றுங்கள். வலது கையே நல்லது” என்றார். அந்த அம்மா சொன்னதைக் கயலும் கேட்டாள்.

கயலுக்கு வரைவது மிகவும் பிடிக்கும். ஒரு தாளில் கலர் பென்சிலால் வரைந்தாள். கயல் வரைவதைப் பார்த்த பாட்டி, “கயல், இது என்ன பழக்கம்? வலது கையால் வரை” என்று கண்டித்தார்.

“இரண்டு கைகளும் என்னுடையது தானே... எனக்கு இடது கை தான் வருகிறது” என்றாள் கயல்.

“அப்படிச் சொல்லக் கூடாது. பெரியவங்க சொன்னா, மாத்திக்கணும்” என்றார் பாட்டி.

“பாட்டி நல்லதுக்குதான் சொல்வார், கேட்டுக்கோ” என்றார்கள் கயலின் அப்பாவும் அம்மாவும்.

பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர் சொல்வதை இடது கையால்தான் எழுதினாள், கயல். அதைப் பார்த்த ஆசிரியர் வலது கையால் எழுது என்று வற்புறுத்தினார்.

கயல் வலது கையால் எழுதினாள். பேனாவைப் பிடிப்பதற்கே சிரமப்பட்டாள். எழுத்துகளும் ஒழுங்காக வரவில்லை.

ஒரு நாள் கயல் இடது கையால் எழுதும்போது அம்மா தலையில் குட்டினார். கயல் வலது கையால் எழுத ஆரம்பித்தாள்.

போகப் போக கயல் வலது கையை எல்லாவற்றுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தாள். வலது கையால் சாப்பிட்டாள். வலது கையால் கத்திரிக்கோலைப் பிடித்து வெட்டினாள். வலது கை இப்போது பழகிவிட்டது. ஆனால், வலது கையால் வரைய மட்டும் முடியவில்லை.

அம்மா, பாட்டி, ஆசிரியருக்கு மட்டும்தான் வலது கை. கயல் இடது கையால் தான் படம் வரைந்தாள். இடது கை தான் அவளுடைய கற்பனையின் கரம்.

கயல் நூலகத்துக்குச் சென்று ஓவியம் தொடர்பான ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்களாகவே இருந்தார்கள்!

லியோனார்டோ டா வின்சியின் ‘மோனலிசா’, ரெம்பிரான்ட்டின் ‘நைட் வாட்ச்’, மைக்லாஞ்சலோவின் ‘தேவதை’ ஆகிய உன்னத ஓவியங்கள் எல்லாம் இடது கையால் வரையப்பட்டவை தாம்!

அம்மாவுக்கும் பாட்டிக்கும் ஆசிரியருக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாதா? இந்த ஓவியர்களின் இடது கைப்பழக்கம் தவறானதா?

இடது கையால் வரைவது ஒன்றும் தவறு இல்லை என்ற முடிவுக்கு வந்த கயல், அன்று முதல் யாருக்கும் தெரியாமல் இடது கையால் வரைய ஆரம்பித்தாள்.

கயலின் பள்ளிக்குப் புதிய ஆசிரியர் ஒருவர் வந்தார். கயல் இடது கையால் ஓவியம் தீட்டுவதைப் பார்த்தார். கயல் நிமிர்ந்து பார்த்தாள். "மதிய உணவு இடைவேளையில் வந்து பார்" என்று என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

மதிய உணவு இடைவேளை வந்தது. கயல் பயந்துகொண்டே ஆசிரியரைப் பார்க்கப் போனாள்.

ஆசிரியர் கயலை எதிரே உட்காரச் சொன்னார். பிறகு ஒரு தாளையும் பென்சிலையும் எடுத்தார். கயலின் முகத்தை மிக அழகாக வரைந்தார், இடது கையால்!

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x