Last Updated : 23 Jun, 2022 03:35 PM

 

Published : 23 Jun 2022 03:35 PM
Last Updated : 23 Jun 2022 03:35 PM

இரண்டு இட்லி, ஒரு வடை, காபி... - ஓவியர் வேதா

நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே செங்கல்பட்டில்தான். வீட்டில் மூன்றாவது மகன். எனக்கு இரண்டு அண்ணன்கள், நான்கு தங்கைகள். அம்மா, அப்பா, தாத்தா, சித்தப்பா, சித்தி, அத்தை எனக் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். அப்பாவுக்குத் தென்னக ரயில்வேயில் கிளார்க் பணி. தாத்தா ஜோதிடர். அதனால், ஜோதிடம் பார்க்க வீட்டுக்கு தினமும் யாராவது வந்துகொண்டே இருப்பார்கள்.

சிறுவயதில் வேதா

நான் பிறந்தபோது வெள்ளையாக இருந்ததால் ‘கிளாஸ் பாப்பா’ என்றுதான் சித்தப்பா அழைப்பார். இப்போதும் சித்தப்பா ஜாலி மூடில் இருந்தால், அந்தப் பெயரைச் சொல்லித்தான் எல்லார் முன்னிலையிலும் அழைப்பார்!

நான் சாது. ஆனால், எனக்குத் தேவையானது கிடைக்கும்வரை அழுது அடம்பிடித்து, அடி வாங்கிக்கொண்டாவது சாதித்துவிடுவேன். இதனால் தாத்தா, அத்தையிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்.

நாங்கள் இருந்த வீட்டின் பின்புறம் சிறிய மலைக்குன்று இருந்தது. அதில் பூங்கா அமைத்து, மாலை நேரத்தில் விவசாயிகளுக்கான நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் ஒளிபரப்புவார்கள். அந்த மலைக்கு ‘ரேடியோ மலை’ என்று பெயர். அது மட்டுமல்லாமல் அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை சங்கு ஊதுவர்கள். இது செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஒலிக்கும். இதைக் கேட்டுத்தான் பள்ளிக்குக் கிளம்புவேன்.

சித்தப்பா மாயவரத்துக்கு மாற்றலாகி, என்னையும் அழைத்துச் சென்றார். வீட்டுக்கு எதிரே காவிரி ஆறு. ஒருமுறை காவிரியில் தண்ணீர் அதிகம் வந்தது. நான் காவிரியில் குளிக்கும்போது, என்னைத் தண்ணீர் இழுத்துச் சென்றுவிட்டது. என்னை மீட்டு, செங்கல்பட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

அத்தை பணிபுரிந்த புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். நான் ஆசிரியர் உறவினர் என்பதால் சில சலுகைகள் கிடைத்தன. நான்காம் வகுப்பில் நான், கணேஷ், ராமநாதன், சுரேஷ் ஆகிய நால்வரும் பாடத்தைக் கவனிக்காமல் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தோம். இதைக் கவனித்த ஆசிரியர், எங்களை எழுப்பி கேள்வி கேட்டார். நாங்கள் பதில் தெரியாமல் விழித்தோம். உடனே எங்கள் நால்வரின் நெற்றியிலும் சாக்பீஸால் நீரில் நனைத்து முட்டை போட்டுவிட்டர். பள்ளி முடியும் வரை அழிக்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். மதியச் சாப்பாடு வீட்டில் இருந்து வரும். அத்தையுடன்தான் சாப்பிட வேண்டும். எங்களுக்கு முட்டை போட்ட ஆசிரியரும் எங்களுடன்தான் சாப்பிடுவர். அவர் என்னைப் பற்றி ஏற்கெனவே அத்தையிடம் சொல்லிவிட்டார். அத்தை அடி பின்னிவிட்டர். அன்று முதல் வகுப்பறையில் யாருடனும் பேசுவதில்லை என்று முடிவெடுத்து, அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

எங்கள் அப்பா விடுமுறை நாள்களில் வெளியில் செல்லும் போது இரண்டாவது அண்ணன் அப்பாவுடன் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். காரணம் தெரியவில்லை. எனக்கும் பெரிய அண்ணனுக்கும் சந்தேகம் வந்தது. ஒருமுறை மூத்த அண்ணன் அப்பாவுடன் சென்றுவந்த பிறகு, இரண்டாவது அண்ணனைப் பார்த்து, ‘இரண்டு இட்லி, ஒரு வடை, காபி’ என்று அழைத்தபோதுதான் விவரம் புரிந்தது. மணிக்கூண்டு அருகில் உள்ள உடுப்பி ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு இரண்டு இட்லி, ஒரு வடை, காபி கிடைக்கும்.

ஓவியர் வேதா

என் புதிய சட்டையை இரண்டாவது அண்ணன் போட்டுக்கொள்வதால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். ஆனாலும், அடி என்னவோ எனக்குத்தான் முதலில் விழும். இரவு எட்டு மணிக்குத்தான் சாப்பாடு என்பதால் சாப்பிடும்போதே தூக்கம் வந்துவிடும். பாதி சாப்பாட்டில் உட்கார்ந்த இடத்திலேயே சுவரில் சாய்ந்தபடி தூங்கி விடுவேன். இடி விழுவதுபோல் அடிவிழும். அலறி அடித்துக்கொண்டு ஓடுவேன்.

எட்டாம் வகுப்பில் உடல் நலமில்லாததால் ரெக்கார்டு நோட்டில் படம் வரையாமல், பாடம் மட்டும் எழுதியிருந்தேன். முதல் வரிசையில் இருந்த என் நோட்டை வாங்கிப் பார்த்த ஆசிரியர், படம் வரையவில்லை என்பதால் ஓங்கி ஓர் அறை விட்டார். அதனால் என் ஒரு காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டது.

ஒரு படம் வரையாததால் கேட்கும் சக்தியை இழந்த நான், ஓர் ஓவியராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். பள்ளி இறுதியாண்டு முடிக்கும்போது செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றேன். ஓவியக் கல்லூரியில் சேர விரும்பினேன். ஐந்து வருடங்கள் படிக்க வேண்டும் என்பதால் வீட்டில் மறுத்தனர். அப்பா என்னைப் புரிந்துகொண்டு, ஓவியர் மணியம் செல்வத்திடம் அழைத்துச் சென்று, ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். அவரையே என் குருவாக ஏற்று, கற்றுக்கொண்டேன். இன்று முழுநேர ஓவியராக என் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

கட்டுரையாளர், ஓவியர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x