Published : 20 Jun 2022 02:47 PM
Last Updated : 20 Jun 2022 02:47 PM

பச்சைப் பாம்பைக் கையில் பிடித்தேன்! - நிவேதிதா லூயிஸ்

ஒரு சனிக்கிழமை எனக்குப் பள்ளி விடுமுறை. அம்மா ஆசிரியராகப் பணிபுரிந்த பள்ளிக்கு அவருடன் சென்றுவிட்டேன். பத்து மணிக்கெல்லாம் கடல் அலைபோல ஆர்ப்பரித்து கல்லூரி மாணவர் கூட்டம், மூடிக்கிடந்த கேட்டுக்கு வெளியே கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் பாபநாசம் கல்லூரி மாணவர்கள். ‘ஸ்டூடண்ட்ஸ் ஸ்டிரைக்’. பள்ளிக்கும் விடுமுறை விடவேண்டும் என்று போராட வந்திருந்தனர். தலைமை ஆசிரியர், அருட்சகோதரி. பதறியவர் அம்மாவிடம் வந்து, “டீச்சர்… பசங்க ஸ்கூல் வாசல்ல ஸ்டிரைக் பண்றாங்க. போகச் சொல்லுங்க. நம்ம பிள்ளைங்க பயந்துருவாங்க” என்றார்.

சிறுமி நிவேதிதா

அம்மா விறுவிறுவென வாயிலுக்குச் சென்றார். எல்லாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். கதவின் ஒரு பக்கத்தைத் திறந்துகொண்டு அம்மா ஒற்றை ஆளாக நின்றார். எதிரே மாணவர் அலை ஆர்ப்பரித்தது. “என்ன வேணும் உங்களுக்கு?” என்ற அம்மாவின் அதட்டலுக்குக் கூட்டம் அடங்கி நின்றது. “பிள்ளைகளைத் தனியா வீட்டுக்கு அனுப்ப முடியாது. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கிளம்புங்க” என்று அம்மா கம்பீரமாகச் சொன்னார். கூட்டம் மெல்லக் கலைந்தது. இப்படி சிங்கம் போன்று கர்ஜித்த அம்மாதான் என் ரோல் மாடல்!

1980களில் ஆசிரியர் போராட்டம் நடந்தபோது, எங்கள் வீடு முழுக்க ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் நிறைந்திருக்கும். எல்லாருக்கும் காபி போட்டுத் தரும் பணி என்னுடையது. அப்போதுதான் அவர்கள் பேசிய அரசியல் சித்தாந்தங்களைக் கொஞ்சம் உள்வாங்கிக்கொண்டேன். போராட்டத்தில் அம்மா கைது செய்யப்பட்டபோது, காவல்நிலைய ஆலமரத்தடியில் தைரியமாகக் காத்திருந்தேன்.

எங்கள் வீட்டுக்கு அருகிலேயே வாய்க்கால்களும் வயல்வெளிகளும் இருந்த பசுமை கொஞ்சும் ஊர் விக்கிரமசிங்கபுரம். ஒரு நாள் வாய்க்காலைத் தாண்டி பொத்தைக்குச் சென்றுவிட்டேன். பெரணிச் செடியைப் பறிக்க பாறை இடுக்கில் கைவிட, பச்சைப் பாம்பு ஒன்று கையைக் கவ்விவிட்டது. அலறியடித்துக்கொண்டு பாட்டியிடம் ஓடினேன். “நான் சாகப் போறேன்” என்று அழுதேன். அவரோ, “ஏல… பச்சைப் பாம்ப சும்மாவா விட்ட? கழுத்தப் பிடிச்சு உடம்பை வலது கையால உருவிவிட்டா நீ என்ன சமைச்சாலும் அமிர்தமா ருசிக்கும்ல…” என்று சிரித்தார். அதற்கு பிறகு பச்சைப் பாம்புகளை எங்கு கண்டாலும் பிடித்து விளையாடுவேன்.

மூதாய்ப்பூச்சிகளைப் பிடித்து ஜாமெட்ரி டப்பாவில் போட்டு, உண்பதற்கு அருகம்புல்லும் வைப்பேன். இதனால் என் அருகில் வரவே மாணவியர் தயங்குவார்கள். “அவளா? எப்பப் பாரு ஏதாவது பூச்சிய, பாம்ப கைல வச்சிருப்பா” என்று பேசிக்கொள்வார்கள்.

வீட்டருகே உள்ள தலையணை, அகஸ்தியர் அருவி எல்லாம் எனக்குப் பிடித்த இடங்கள். வீட்டில் கோபித்துக்கொண்டு அருவிக்கு சைக்கிளில் சென்றுவிடுவேன். சின்ன ஊர் என்பதால் கிட்டத்தட்ட எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். அம்மாவிடம் யாராவது சொல்லிவிடுவார்கள் என்பதால், வீடு திரும்பியதும் நானே குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிடுவேன்.

பெரும்பாலும் பேன்ட் சர்ட்தான் விரும்பி அணிவேன். சிறு வயது முதலே கிராப் முடிதான். தலை சீவி பராமரிக்க அம்மாவுக்கு நேரம் கிடையாது. பெரிய விழிகள் என்பதால் ‘முண்டக்கண்ணி’ என்கிற பட்டப்பெயரும் எனக்கு உண்டு.

எந்தப் போட்டி என்றாலும் பெயர் தரச் சொல்லிவிடுவார் அம்மா. நடனம், கவிதை, பேச்சு, ஒப்புவித்தல், வினாடி வினா என எதையும் விடுவதில்லை. அவ்வூரில் பெயர்பெற்ற ஆங்கிலப் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் செல்வதே வாழ்வின் குறிக்கோளாகச் செயல்படுவேன்.

எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்

வேல்முருகன் என் சைக்கிள் நண்பன். இருவரும் கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தினமும் சைக்கிளில் செல்வோம். போகும் வழியில் வாய்க்காலில் ஆகாயத் தாமரைத் தண்டில் ‘முட்டை உடைப்பது, எருக்கஞ்செடியில் மொட்டு உடைத்து ‘டொக்கு’ போடுவது, தேன் பூ பறித்துத் தேன் உறிஞ்சுவது, காட்டு இலந்தைச் செடியில் முள் குத்தக் குத்த பழம் பறித்து உண்பது, கம்பளிப்பூச்சியைப் பிடித்து சிரட்டையில் சிறைவைப்பது, குன்னிமுத்துகளைச் சேர்ப்பது, காந்தள் பூவைக் காதில் செருகிக்கொள்வது’ என எல்லா கோமாளித்தனங்களும் செய்ததுண்டு.

எல்.கே.ஜி. முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பரதநாட்டிய வகுப்பு, அதன்பின் அரங்கேற்றம், ஆறாம் வகுப்பு முதல் இந்தி பிரச்சார சபா தேர்வுகள், பத்தாம் வகுப்பிலேயே ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு தேர்வு என அனைத்தும் எனக்குத் தந்த சிற்றூர் இன்று, என் நினைவடுக்குகளில் மட்டுமே மாறாமல் இருக்கிறது.

கட்டுரையாளர், ஆய்வாளர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x