Published : 30 Apr 2022 01:21 PM
Last Updated : 30 Apr 2022 01:21 PM
மோகன்லாலின் முக்கிய படமாக அறியப்படுகிற, எம்.டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி, பரதன் இயக்கிய‘தாழ்வாரம்’பார்த்த போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது வில்லனாக வரும் சலீம் கௌஸின் நடிப்பு. அவர் ஏற்றிருந்த ராஜு என்கிற கதாபாத்திரம் சுவாரஸ்யமான ஒன்று. அவன் தீமையின் உருவம் ஒன்றும் அல்ல. அவனுடைய ஒரே பிரச்சனை அறவுணர்வோ குற்றம் செய்யும் தயக்கமோ இல்லை என்பது. அச்சமும் ஆசையும் அவனை தொடர்ந்து பிடித்தாட்டுகிறது. கொலைகள் செய்ய வைக்கிறது. அங்கங்கே வரும் சிறு சிறு வசனங்கள் மூலம் அவனை புரிந்து கொள்கிறோம்.
ஒரு கள்ளக்காதலியை காணப் போகும் போது அங்கே எதிர்பாராமல் அவள் கணவன் இருக்க ஒரு பயத்தில் ராஜு அவனை குத்தி விடுகிறான். அது போன்றே போலீசிடம் இருந்து தப்பித்து ஊர் ஊராய் ஓடி, பின்னர் தன் நண்பனான பாலனிடம் (மோகன்லால்) தஞ்சம் கோருகிறான். அப்போது அவன் தன் அவல நிலையை விளக்கும் இடங்களில் கௌஸ் அற்புதமாக நடித்திருக்கிறார். கௌஸ் நடிக்கையில் கண்களின் தீவிரம், கைகளின் சைகைள், உடல் மொத்தமும் ஒரு கண்ணாடியாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் என அட்டகாசமாக இருக்கும். அதுவும் சட்டென தன் மனநிலையை காட்டும் அந்த வேகம் மோகன்லாலுக்கும் வராது. இந்த பாவனைகளை மாற்றும் வேகம் காரணமாக கௌஸ் நடிப்பதில் உள்ள முயற்சி துளியும் தெரியாது.
ராஜு பின்னர் தான் தமிழ்நாட்டுக்கு தப்பித்து போகப் போவதாக கூறுகிறான். பாலன் சிறுக சிறுக 40,000 சேர்த்து வைத்திருக்கிறான். பாலனின் திருமண இரவன்று வந்து மது வாங்கிக் கொடுத்து அன்பைக் காட்டுகிறான். அது ஒரு விநோதமான காட்சி. ஏனென்றால் அன்றிரவு அவன் தன் நண்பனின் பணத்தை திருடிப் போக முடிவெடுத்திருக்கிறான். அது தான் ராஜு. அவனிடம் அன்பு, நட்பு, குரூரம், குற்றத்திற்கான விழைவு எல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. குற்றவுணர்வு ஏற்படாத, குற்றத்தின் ருசி பழகிய, மரத்த ஒரு மனதுக்கு தான் அது சாத்தியமாகும் போல. நம்மை கட்டித் தழுவி பிரியத்தை காட்டியபடி மறுநொடி கழுத்தில் உள்ள செயினுக்காக சங்கை அறுப்பார்கள். இவர்களுக்கு இரண்டு செயலுக்கும் முரண்பாடு தெரியாது. ராஜு திருடுகையில் பாலனின் மனைவி வந்து தடுக்க அவளை குத்தி விடுகிறான். பணத்தோடு தப்பிக்கிறான். மனைவியையும், தன் மொத்த சேமிப்பையும் இழக்கிற பாலன், தன் நண்பனை பழிவாங்க தேடி அலைகிறான்.
ராஜு தீராத அச்சத்துடன் அலைந்து திரிந்து ஒரு தாழ்வாரத்துக்கு வருகிறான். அங்கு ஒரு சந்தையில் நாணு என்கிற ஒரு சிறு விவசாயியை காண்கிறான். அந்த சம்பவத்தைப் பற்றி பின்னர் குறிப்பிடுகையில் நாணு: “இவனுக்கு இருட்டை பார்த்தாலும் வெளிச்சத்தை பார்த்தாலும் பயம், மக்களை பார்த்தால் பதுங்குவான். நான் தான் பேசி பேசி ஒருவாறு ஆற்றுப்படுத்தி மலையில் நாலு ஏக்கர் நிலம் வாங்க வைத்து இங்கேயே வாழச் செய்தேன்” என்பார்.
நாணு மிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் அவர் தொணதொணவென பேசிக் கொண்டே இருக்கிறார். அவர் இறந்து போன மனைவி அவருக்கு வைத்த பட்டப்பெயர் வெட்டுக்கிளி. அந்த மலைப்பிரதேசத்தில் நான்கே பேர் தான். ராஜுவும், அவனைத் தேடி அங்கு வரும் பாலனும் மௌனமாக ஒருவரை ஒருவர் மூர்க்கமாக கவனித்தபடி இருப்பார்கள். நாணுவின் மகள் எப்போதும் எறும்பு போல் ஏதாவது வேலை பார்த்தபடி இருப்பாள். அப்போது இடைவிடாது பேசும் நாணுவின் குரல் அங்குள்ள மௌனத்தை அப்படி கனக்கச் செய்கிறது. ஒரு காட்சியில் நாணு ஏதோ சத்தம் கேட்டு நள்ளிரவில் எழுந்து கொள்கிறார். காயமுற்று கிடக்கும் பாலனை ராஜு கொல்ல முயல்கிறான். அவன் எதிர்த்து போராடும் போது கேட்கும் ஓசையில் அவர் அங்கு வர, ராஜு ஓடி விடுவான். பாலன் தனக்கும் ராஜுவுக்கும் உள்ள பிரச்சனையை ரகசியமாக வைத்திருப்பான். அப்போது நடந்த போராட்டத்தை பற்றி சொல்ல மாட்டான். பாலன் சிறுநீர் கழிக்க எழுந்து நடக்கையில் விழுந்து விட்டான் போல என நினைக்கும் நாணு, அவன் அருகே அமர்ந்து கொள்வார். அந்த நள்ளிரவில் தன் பழைய வாழ்க்கை பற்றி தொணதொணவென மீண்டும் பேச ஆரம்பிப்பார். அந்த சூழலில் அவரது பேச்சு உருவாக்கும் அபத்தம் நுட்பமான ஒன்று.
நாணுவும் கிட்டத்தட்ட ராஜுவை போல சமூகத்துக்கு பயந்து மலையில் வந்து தனியே வாழ்பவர் தான். அவர் ஒரு உயர்சாதி பெண்ணை காதலித்து அவளது சொந்தங்களுக்கு அஞ்சி ஓடி அந்த மலைப்பிரதேசத்துக்கு வந்து கடுமையாக உழைத்து சமூகத்தில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். அதனால் தான் எதேச்சையாக ராஜுவை காண அவனிடம் அப்படிப் போய் ஒட்டிக் கொள்கிறார். அவர் மனம் முழுக்க வருடங்களாகப் பேசாத பேச்சு சலசலத்துக் கிடக்கிறது. அவருடைய கதாபாத்திரத்தை ராஜுவின் பின்னணியில் பார்க்கையில் அந்த மொத்த மலையும் அங்குள்ள தனிமையும் நமக்கு மனதின் குறியீடாக கூட தோன்றுகிறது. நகரத்தின் சின்ன ஒரு அறையில் கூட ராஜுவையும் நாணுவையும் போல தமக்குள் ஒளிந்து ஒடுக்குபவர்கள் இருக்கக் கூடும்.
இன்னொரு காட்சியில் தன்னை தேடி வந்து நாணுவின் வீட்டில் தங்கி இருக்கும் பாலனை பற்றி ராஜு தவறாக சித்தரித்து நாணுவிடம் பேசுகிறான். அதாவது தன்னுடைய சுபாவத்தை அப்படியே பாலன் மீது திணிக்கிறான். இதை ராஜுவே ஒரு விலகல் மனநிலையில் தன்னை தானே கண்டு சித்தரிப்பது எனலாம். “அவனை (பாலன்) நம்ப முடியாது. பேசுகிற ஒவ்வொரு சொல்லும் பொய். ஏமாந்த நேரம் பார்த்து பொன்னையும் பொருளையும் அபகரிப்பதே நோக்கம். அதற்காக கொலை கூட பண்ணுவான்.”
“அப்படி என்றால் இப்பவே அனுப்பி விடலாமே”
“இல்லை பாவமாக இருக்கிறது. கொஞ்ச நாள் காத்திருந்து விட்டு என்னிடம் பரிதாபமாக பேசுவான். கெஞ்சுவான். எல்லாம் பணத்துக்காகத் தான். கொடுத்து விட்டால் போய் விடுவான். அவன் குணம் அப்படி.” இப்படிக் குற்றங்கள் பல பண்ணுவது, பிறகு நண்பனிடம் மன்றாடி தன்னை காப்பாற்ற கேட்பது, மீண்டும் அவனை ஏமாற்றி குற்றம் பண்ணுவது ஆகிய விசயங்களை அதற்கு முன் வந்த காட்சிகளில் ராஜு தான் செய்திருப்பான்.
மிக சுவாரஸியமான வசனம் இது. ஈகோ இல்லாத மனிதனால் தான் தன் சுபாவத்தை இந்தளவுக்கு விலகி நின்று இன்னொருவர் மீது சுமத்த முடியும். ஈகோவுக்கும் நன்மைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நம்மை நாமே மதித்து நேசித்து போற்றும் போது தான் குற்றம் பண்ணுவது சிரமமாகிறது. எந்த பிடிப்பும் இல்லாமல் ஆகும் போது கண்ணாடிக் கோப்பைக்குள் நீர் போல் மனம் ஆகும் போது செயல் தான் பிரதானமாகிறது. குற்றச்செயலே ஆனாலும் அதை நான் பண்ணவில்லை சூழல் தான் பண்ண வைத்தது என நம்ப ஆரம்பிப்போம். இப்படியே ஒழுகிப் போகிற குற்ற மனதுக்கு எல்லையே இல்லை.
ராஜுவின் இந்த ஒட்டிக் கொள்ளாத கதாபாத்திரத்தை சலீம் கௌஸ் அழகாக புரிந்து கொண்டு செய்திருப்பார். தொடர்ச்சியாக மாறிக் கொண்டே இருக்கும் உடல் மொழியை கொண்டு வந்திருப்பார். மோகன்லால் மாறாக ஒரு இறுக்கமான நிரந்தரமான உடல் மொழியுடன் படத்தில் இருப்பார். ஒரு இடத்தில் லால், கௌஸிடம் நாணுவின் மகளை ஒன்றும் பண்ணி விடாதே என்பார். “அவள் உனக்கு யார்?” என கௌஸ் கேட்க, லால் “எனக்கு யாரும் இல்லை, ஆனால் அவளிடம் இருந்து ஒரு வாய் சோறு வாங்கி தின்றிருக்கிறேன். அந்த நன்றி உணர்வு எனக்கு இருக்கிறது. அது உனக்கு புரியாது” என்கிறான். கௌஸ் ஒரு துச்சமான புன்னகையை செய்வான். இது முக்கியமான அவதானிப்பு. ராஜுவுக்கு விழுமியங்களில் நம்பிக்கை இல்லை; அதனால் யாருடனும் உணர்வுரீதியான ஒட்டுதலும் இல்லை. அவனால் நேசிக்க முடியும். ஆனால் நேசத்துக்காக விசுவாசமாக இருக்க முடியாது.
இந்தப் படத்தில் சலீம் கௌஸ் நடிப்பில் லாலை பல மடங்கு கடந்து சென்றிருப்பார். இது ஆச்சரியமான ஒன்று. இவ்வளவு சிறந்த நடிகன் வெறும் வில்லன் கதாபாத்திரங்கள் மட்டுமே சொற்பமாய் செய்திருக்கிறாரே என்று ஆற்றாமை ஏற்படுகிறது.
‘வெற்றி விழா’ படத்தில் அவரது நடிப்பு இதே போல் தனித்துவமாக இருக்கும். ‘ரெட்’, ‘வேட்டைக்காரன்’, ‘திருடா திருடா’விலும் நடித்திருக்கிறார். திரையில் தோன்றிய சில நொடிகளில் தனக்கென ஒரு ஆளுமையை நிறுவிக் கொள்ளும் அபாரமான திறமை படைத்த கலைஞன். வில்லன் முகத்தில் அவர் காட்டும் புன்னகையும் களிப்பும் வெறுப்பும் கலந்த அந்த பாவனை ஒரு குற்றமனம் பற்றின அவரது சித்தரிப்பும் தான்.
கௌஸ் சென்னையில் பிறந்து பிரசிடென்ஸி கல்லூரியில் படித்தவர். பூனே திரைப்பட கல்லூரியிலும் பயின்றார். ஒரு நல்ல கராத்தே கலைஞரும் கூட. ‘கொஜு ரையு’ வகை கராத்தே அவரது ஸ்டைல். அது போல் வர்மக் கலை மற்றும் தைச்சிசுவான் போன்ற சண்டைக்கலைகளிலும் நிபுணர். பொதுவாக கராத்தே அல்லது குங்ஃபூ பயின்றவர்கள் உடலை நேராக வைத்து கொஞ்சம் தலையை பின்சாய்த்து விரைப்பாக நிற்பார்கள். சினிமாவில் கௌஸின் இயல்பான உடல்மொழியே அப்படித் தான். அவரது பயிற்சியின் தாக்கம் அது. சூபி தத்துவத்திலும் ரூமியின் கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் கௌஸ். மும்பையில் Pheonix Players என்கிற ஒரு நாடகக்குழுவை வெற்றிகரமாக நடத்தி வந்தவர். ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’ போன்ற பல நாடகங்களை இயக்கியவர். ஒரு நாடக நடிகராக மிக முக்கியமானவராக கருதப்பட்டவர். ஷேக்ஸ்பியரின் ‘வெனிஸ் நகர வணிகன்’ நாடகத்தின் கொடூர யூத வில்லனான ஷைலாக் கதாபாத்திரத்தை கௌஸ் ஏற்று நடித்ததைக் கண்டவர்கள் பாக்கியவான்கள். வன்மம் பற்றியும், பழிவாங்கும் உணர்ச்சி பற்றியும் பேசுகையில் அவரது இடுங்கின கண்களில் ஒரு தூயமிருக நிலையைப் பளிச்சிட வைக்கிறார். ‘ரிச்சர்ட் III’ எனும் நாடகத்தில் வரும் கூன் கொண்ட ஊனமுற்ற மன்னனின் கதாபாத்திரத்தையும் கௌஸ் அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருப்பார் – ஊனத்தின் பொருட்டு சமூகத்தால் ஒதுக்கப்படுவதன் கசப்பையும், சமூகத்தை மறுக்கும் வீம்பையும், அதனால் விளையும் அகந்தையையும் சில பாவங்களில் கற்கள் உரசுவது போன்ற தன் குரலின் கரகரப்பு வழி சித்தரித்திருப்பார். அதே போன்றே தன் மிகுதியான அன்பின் விளைவாக மனைவி டெஸ்டிமோனாவை கொல்லும் ஒத்தெல்லோவின் கதாபாத்திரம் – அதை நடிக்கையில் மிகுந்த அன்பின் அக்கறையும் பதற்றமும் உருவாக்கும் களைப்பை முகத்தில் கொண்டு வருவார் (இந்நாடகங்களின் காணொலிகள் இணையத்தில் கிடைக்கின்றன). இந்த பாவனைகள் கௌஸின் சொந்த அவதானிப்புகள் எனலாம். ஷேக்ஸ்பியரை தன் கற்பனை வழி அறிந்து கொண்ட நடிகனால் மட்டுமே இதை செய்ய முடியும். நடிப்பு என்பது பிரதியில் இருப்பதை வெளிப்படுத்துவது அல்ல, அதை தன் வழி அறிந்து அர்த்தப்படுத்துவது – ஒரு நல்ல நடிகன் ஒரு தத்துவவாதியாகவும் படைப்பாளியாகவும் இருக்கிறான்.
தனக்கென வாழ்க்கை குறித்த தத்துவ நிலைப்பாடு கொண்ட ஒரு ஆழமான மனிதராக கௌஸ் வாழ்ந்து மறைந்திருக்கிறார். கௌஸின் திரை வாழ்க்கை கொண்ட பாதையை பார்க்கையில் மோகன் லால் எந்தளவுக்கு அதிர்ஷ்டசாலி என தோன்றுகிறது. அழகான தோற்றம், நல்ல இயக்குநர்களின் அரவணைப்பு, தொடர்ந்து நூற்றுக்கணக்கான படங்களில் இயங்கும் வாய்ப்பும் ஆர்வமும் அவரை இன்று இந்தியாவின் தலை சிறந்த நடிகராக மாற்றி இருக்கிறது.
இதே விசயங்கள் கௌஸின் வாழ்விலும் நடந்திருந்தால் அவர் பத்து மடங்கு மேலான நடிகராக ஒருவேளை பரிணமித்திருப்பார். அல்லது இர்பான் கான் போல் இந்திய மாற்றுசினிமாவின் நாயகனாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் சிலருக்கு சாதனை என்பதன் பொருள் சுயஅறிதலாகவும் கலாபூர்வமான பயணமாகவும் இருக்கும் – லௌகீக வெற்றிகளை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் நிலவின் ஒளி சிறு குட்டையில் விழுந்தால் என்ன தாஜ்மஹால் அருகாமையில் யமுனா நதியில் ஜொலித்தால் என்ன ரெண்டுமே ஒன்று தானே!
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: abilashchandran70@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT