Published : 25 Aug 2020 09:57 AM
Last Updated : 25 Aug 2020 09:57 AM

எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை? - பேராசிரியர் லெ. ஜவகர்நேசன்

லெ. ஜவகர்நேசன்

நாடு முழுவதும் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கான எதிர்ப்பும் ஆதரவும் தீவிரமாக எழுந்துவருகின்றன. இந்த நிலையில் மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ் அறிவியல்-தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் லெ.ஜவகர்நேசன் கல்விக்கொள்கை குறித்து எழுதிய ‘In Search of Education: Nationalistic Education Vs Society Driven Education’ என்னும் நூல் கடந்த ஆண்டு வெளியானது. இது ’கல்வியைத் தேடி: தேசியவாதக் கல்வி எதிர் சமுதாய உந்துவிசைக் கல்வி’ என்னும் தலைப்பில் தமிழில் (மொழிபெயர்ப்பு: கமலாலயன்) ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நூல் ஆசிரியர் ஜவகர்நேசன் கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும், அதில் என்னென்ன இருக்க வேண்டும், அதன் விளைவுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசியதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி:

மாநிலத்துக்கான கல்வி

கல்விக்காக ஒரு கொள்கையை வகுத்துத் திட்டமிட்டு செயல்படுத்துவது தேவையான ஒரு செயல்பாடுதான். ஆனால், அது தேசிய அளவிலானதாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் உலக நாடுகள் தரும் அனுபவம். வளர்ந்த நாடுகளிலும் இதுதான் நிலைமை. இந்தியாவைப் பொறுத்தவரை மாநிலங்களின் பார்வையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும். அந்தந்த மாநில மக்களின் தேவைக்கேற்ப கல்விக்கொள்கை வகுக்கப்படுவதே சரியாக இருக்கும்.

ஏனென்றால், கல்வி என்பது சமூகப் பண்புடன் பின்னிப் பிணைந்த ஒரு செயல்பாடு. சமூகப் பண்பு, சமூக நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகிற பொருளாதார நடவடிக்கை ஆகியவை குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் நிச்சயம் வெவ்வேறானவை. இதனால்தான் இந்தியா போன்ற வேற்றுமைகள் நிறைந்த ஒரு நாட்டில் தேசிய அளவிலான கல்விக்கொள்கை தேவையில்லை என்று வலியுறுத்துகிறோம்.

இயற்கையான கற்றலும் அறிவுப்பெருக்கமும்

தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள், கேள்விகள், முயற்சிகள் ஆகிய எல்லாவற்றுக்கும் சேர்த்து விடை அல்லது தீர்வைக் காண்கின்ற வேலையில்தான் ஒரு சமூகத்தில் இருக்கும் மனிதர்கள் ஈடுபட்டிருப்பார்கள். திட்டமிட்டாலும் திட்டமிடாவிட்டாலும் இயற்கையாகவே சமூகத்தில் இந்தத் தேடுதல் நடந்துகொண்டுதான் இருக்கும்.

கல்விக்கான உள்ளார்ந்த விளக்கம், கற்றல் என்று வைத்துக்கொள்ளலாம். அந்தக் கற்றல் இந்தத் தேடுதல் மூலமாக ஐம்பதாயிரம் ஆண்டுகளாகத் தானாகவே நடந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையான தேடுதலின் விளைவாக நிகழும் கற்றலைத் தாண்டி அனைவருக்குமானதாக, சமத்துவமானதாக, அனைவருடைய தேவைகளை நிறைவேற்றுவதாக கல்வி அமைய வேண்டும். இதற்காகத்தான் முறைப்படுத்தப்பட்ட கல்வி தேவைப்படுகிறது. இந்த அம்சங்கள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், வகுக்கப்படுவது எப்படிக் கல்விக்கொள்கையாக இருக்க முடியும்?

சமூகத்தின் கற்கும் திறன்

ஒவ்வொரு சமூகத்துக்கும் தனக்கென்று ஒரு கற்கும் திறன் (Educative Capacity) உள்ளது. உரையாடல்தன்மை, தொடர்பாடலின் தீவிரத்தன்மை, கருத்துப் பரிமாற்றங்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் கற்கும் திறனும் மாறுபடும். ஆனால், நம் நாட்டில் சமூகம் சாதிகளாக பல ஆயிரம் ஆண்டுகளாகப் பிரிந்து கிடக்கும்போது, இயல்பான அறிவுப் பரிமாற்றம் இங்கு நடக்கவே இல்லை. சமுதாயத்தின் கற்கும் திறனை அதிகரித்தால்தான், கல்வி தன் நோக்கத்தை முழுமையாக அடைய முடியும். அதை விட்டுவிட்டு மற்ற நாடுகளில் நிலவும் சிறந்த கல்வி நடைமுறைகளின் அடிப்படையில் கல்விக் கொள்கையை வடிவமைப்பது சரியான புரிதல் இல்லை.

ஜனநாயகமாதலுக்கு வழிவகுக்கும் கல்வி

சமூகத்தை ஜனநாயகப்படுத்திவிட்டால் கல்வி சிறப்பாக அமைந்துவிடும் என்பது உண்மை. ஆனால், அதைக் கல்வியால் மட்டுமே செய்துவிட முடியாது. ஆனால், கல்வியானது சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்குள் இருக்கும் கருத்துப் பரிமாற்றத்தை அதிகரிக்க முடியும். அனைவருக்கும் பொதுவான கல்வியாக இருந்தால், சமூகத்தின் அனைத்து பிரிவினருடனும் உரையாட முடியும். எல்லா சமூகக் கூறுகளுமே தேச வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் தேவையானவை. யாரையும் புறக்கணிக்கக் கூடாது.

எனவே, கல்வியானது சமூகத்தின் எல்லாக் கூறுகளிடமிருந்தும் மனித அனுபவங்களை பாடத்திட்டத்தின் மூலமாக உள்வாங்கியிருந்தால், அந்தக் கல்வியின் மூலம் உருவாக்கப்படும் அறிவு, சமூகத்துக்கு மீண்டும் செல்லும். அங்கே அது மீண்டும் பரிசீலனை செய்யப்படும். இந்த வேலையைச் செய்ய கல்வித் துறைக்கு உத்வேகம் தந்துவிட்டால், சமூகத்தின் ஜனநாயகமயமாதல் காலப்போக்கில் நிகழ்வதற்கு ஏதுவாக இருக்கும்.

சமூகத்துக்கான கல்வியா? சந்தைக்கான கல்வியா?

வாழ்வாதாரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பிறந்துவிட்டால் ஒரு மனிதன் வாழ்ந்தாக வேண்டும். வாழ்வதற்கு ஏதாவது ஒரு வேலையைச் செய்தாக வேண்டும். அதுவே வாழ்க்கைக்கான ஆதாரம். வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கு ஒரு மனிதன் உருவாக்கிக்கொள்கிற அறிவு, அவன் உள்வாங்குகிற, உலகம் எதிர்கொள்கிற பிரச்சினை, அந்தப் பிரச்சினைக்கு அவன் கண்டறியும் தீர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒரு மனிதன் செயல்படுகிறான். அது அவனுக்கு உணவளிக்கிறது. வாழ்க்கையும் கொடுக்கிறது. இந்த நடவடிக்கையைத்தான் வாழ்வாதாரம் என்கிறோம். வாழ்வாதாரத்தைக் கல்வி கொடுக்க வேண்டுமென்றால். தனிமனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்வாதாரத் தேவையையும் அது உள்வாங்கியிருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் ஒருவருக்கு வேலை இல்லை, வாழ்வாதாரம் கிடைக்கவில்லை என்கிற நிலை வராது.

அப்படிப்பட்ட கல்வியைக் கொடுப்பதை விட்டுவிட்டு, சந்தை சக்திகள் தங்களுக்குத் தேவையான திறன்களை அளிக்குமாறு வற்புறுத்துகிறார்கள். அந்தத் திறன்களைக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை அளிப்பதாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாக அந்தத் தேவைகளுக்கான திறன் அடிப்படையில் கல்வி உருமாற்றப்படுகிறது. கல்விக் கூடங்கள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான, திறன்களைக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி நிலையங்களாகச் சுருங்கிவிடுகின்றன.

பொறியியல், மருத்துவம், பொருளாதாரம் என எந்தத் துறையாக இருந்தாலும் அதைப் பெறுவதற்கு அளிக்கப்படும் கல்வி, சமூகத்தின் தேவைகளுடன் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். அப்போதுதான் கல்வி கற்றவருடைய துறை சார்ந்த அறிவு, சமூகத்தின் தேவையுடன் தொடர்புகொண்டதாக உருவெடுக்கும். சந்தையின் தேவைக்கானதாக அல்லாமல், சமூகத்தின் தேவையைத் தீர்க்கும் கருவியாக கல்வி உருமாறுவதற்கான கல்விக் கொள்கையை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

கல்வியைத் தேடி,
லெ. ஜவகர்நேசன்,
தமிழில்: கமலாலயன்,
பாரதி புத்தகாலயம் வெளியீடு,
விலை ரூ. 370,
தொடர்புக்கு: 044-24332924

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x