Published : 20 Mar 2022 07:39 AM
Last Updated : 20 Mar 2022 07:39 AM

பெண்கள் 360 | ஓயாத சர்ச்சை

தொகுப்பு:  க்ருஷ்ணி

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பள்ளியொன்றில் தொடங்கிய ‘ஹிஜாப்’ விவகாரம் தொடர்கதையாக நீண்டுகொண்டே போகிறது. வகுப்பறைக்குள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிவதற்கு அந்தப் பள்ளி நிர்வாகம் தடைவிதிக்க, அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் அதை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன. சில வாரங்களில் இது தேசிய அளவில் கவனம் பெற்றது. பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவுக்கு ஆதரவாகக் கடந்த மார்ச் 16 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து சமூகச் செயற்பாட்டளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் நிலையில் இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்துள்ளது. “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இந்தியாவோ, அமெரிக்காவோ, உலகின் மற்ற எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதே அந்தச் சமூகத்துக்கான அளவுகோல்” என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை குழுத் தலைவர் கிரிகோரி மீக்ஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பெண்ணுரிமைப் போராளி மலாலா யூசுப்சாய், ‘இஸ்லாமியப் பெண்களை ஓரங்கட்டும் செயலை நிறுத்துங்கள்’ என்று இந்தியத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். சீருடை என்பது அனைவருக்கும் பொதுவானது என்கிறபோதும் அதைக் காரணமாக வைத்துப் பெண்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதே பலரது எதிர்பார்ப்பு.

கல்வியை உறுதிசெய்யும் திட்டம்

அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை உறுதிசெய்வதற்காக அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப் படுள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தத் திட்டத்துக்கென 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பைத் தொய்வின்றி தொடர வழிசெய்யும் வகையில் அவர்களது வங்கிக் கணக்குக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலைப் படிப்பு முடிக்கும்வரை இந்த நிதியுதவி தொடரும். ஐ.டி.ஐ., டிப்ளமோ படிப்பில் சேர்கிறவர்களுக்கும் இந்த உதவித்தொகை உண்டு. தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின்மூலம் ஆறு லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமா’க மாற்றம்பெறுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். திருமண நிதியுதவியைவிட, இந்தத் திட்டம் பெண்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தாலிக்குத் தங்கம்’ வழங்கும் அரசின் திருமண நிதியுதவித் திட்டங்கள், ஏழைப் பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைத்துவரும் நிலையில் இந்தத் திட்டம் உயர்கல்வித் திட்டமாக மாற்றம்பெறுவது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், திருமண நிதியுதவி வழங்கும் ஐந்து அரசுத் திட்டங்களில் மற்ற நான்கு திட்டங்களும் எந்த மாற்றமும் இன்றிச் செயல்படும் என்பதால் கவலைகொள்ளத் தேவையில்லை என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் இதுபோன்ற திட்டங்கள் வரவேற்கப்படவேண்டியவை.

பெண் கீதம்

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் உலக உழைக்கும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘பாலின பேதத்தை நொறுக்குவோம்’ என்பதுதான் கருப்பொருள். மகளிர் நாள் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ‘பெண் கீதம்’ என்னும் தலைப்பில் காணொலியை வெளியிட்டுள்ளது சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெண் (PENN) அமைப்பு.
இந்த அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் பல்வேறு செயல்களைச் செய்துவருகிறது. பெண்களிடையே பாதுகாப்பு உணர்வை வலுப்படுத்துதல், உடல், மன வலிமை குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவற்றைச் செய்துவருகிறது. ‘பெண் கீத’த்தை பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார். பாடலைக் காண: https://bit.ly/3CUXKCi

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x