Last Updated : 05 Feb, 2016 12:03 PM

 

Published : 05 Feb 2016 12:03 PM
Last Updated : 05 Feb 2016 12:03 PM

சர்வதேச சினிமா: லட்சியங்களைத் தொலைத்த தலைமுறையின் கதை- பயோனீர் ஹீரோஸ்

இலக்கியங்களும் கலைப் படைப்புகளும் உளவியல் ஆய்வுகளும் மனிதனின் குழந்தைப் பருவத்தின் மீது தொடர்ந்து கவனம் குவித்துக்கொண்டிருக்கின்றன. ஒருவன் அல்லது ஒருத்தியின் குழந்தைப் பருவம் எப்படி அமைகிறதோ அதுவே அவனது ஒட்டுமொத்த வாழ்க்கை மற்றும் தனி ஆளுமையைத் தீர்மானிப்பதாக உள்ளது. கலைஞன், மனிதாபிமானி, குற்றவாளி, பைத்தியம், குமாஸ்தா, அராஜகவாதி, ரசிகன், துறவி, நிர்வாகி, சோம்பேறி, அசடு என வருங்காலத்தில் அடையாளப்படும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவனது குழந்தைப் பருவம்தான் முழுமையாகத் தீர்மானிக்கிறது.

இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவரும், 20-ம் நூற்றாண்டின் சிறந்த கதைசொல்லியுமான காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், தன் 13 வயதுக்குள்ளேயே தனது கதை சொல்லும் ஆளுமை முழுமை பெற்றுவிட்டதாகச் சொல்கிறார். குட்டிப்பையனாக இருந்தபோது பாட்டி சொன்ன கதைகளை வேறுவிதமாக எழுதிப் பார்த்ததே தனது ‘நூறாண்டு காலத் தனிமை’ நாவல் என்கிறார்.

பெண் இயக்குநரும் நடிகையுமான நடால்யா குத்ரியஷோவாவின் முதல் திரைப்படம் ‘பயோனீர் ஹீரோஸ்’. குழந்தைப் பருவத்தில் கனவு கண்ட லட்சியவாத வாழ்க்கை, வளர்ந்த பின்னர், கானல் நீரானதை நினைத்து வெதும்பும் மூன்று இளைஞர்களின் கதை நம் முன் விரிகிறது. ஓல்கா, காத்யா, செர்கயேவ் மூவரும் தங்கள் பள்ளிப்பருவத்தில், இந்தியாவில் உள்ள சாரணர் படையினரைப் போல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இயங்கிய விளாதிமிர் லெனின் ஆல் யூனியன் பயோனீர் அமைப்பில் இருந்தவர்கள். அப்பருவத்தில் அவர்கள் எல்லாருக்கும் நாட்டுப்பற்றுடன் கூடிய லட்சியவாதக் கனவுகள் புகட்டப்படுகின்றன. ஆனால் சோவியத் ஒன்றியம் சிதறி, உலகமயமாதலால் லட்சியங்கள் தோற்றுப்போன நிலையில் அவர்கள் வெவ்வேறு வித மன அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஓல்காவுக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போதெல்லாம் பய பீடிப்பு தாக்குதல் ஏற்படுகிறது. சிறுவயதில் எண்ணற்ற மக்களை வியாதியிலிருந்து மீட்டு உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டுமென்ற கனவுடன் வளர்ந்த இளைஞன் செர்கயேவ், அதீதமாகத் தன் வேலையில் மூழ்கி யதார்த்தத்தைக் கடக்க முயல்கிறான். அவனது காதலியைக்கூடப் பொருட்படுத்தாத வெறுமையில் இருக்கிறான். காத்யாவுக்கோ தன்னைச் சுற்றிய வெறுமையைக் கையாளவே முடியவில்லை. பள்ளிச் சிறுமியாய் நாட்டின் நலனுக்காக வீட்டில் மது தயாரிக்கும் தனது மாமாவைக் காவல்துறையில் ஒப்படைக்க முயன்ற பெண் அவள். காத்யா குண்டுவெடிப்பு ஒன்றில் ஒரு குழந்தையைக் காப்பாற்ற முயல்கையில் பலியாகிறாள். சொர்க்கத்தைத் தவிர குறைவானது எதையும் அவள் கடவுளிடம் ஒப்புக்கொண்டிருக்க மாட்டாள் என்று அவளது மரணத்துக்குப் பிறகு செர்கயேவும் ஓல்காவும் முரண்நகையுடன் பேசிச் சிரிக்கின்றனர். செர்கயேவ், விரக்தியுடன் நகரத்தை விட்டு வெளியேறும்போது, ஏரியில் மூழ்கிய சிறுவன் ஒருவனைக் காப்பாற்றிவிட்டு துறவியர் மடத்தில் போய்ச் சேருகிறான். நாடக நடிகையான ஓல்காவுக்கு, மனநோய் மருத்துவர் கதாபாத்திரம் ஒன்று சினிமாவில் வழங்கப்படுகிறது.

மூவரின் குழந்தைப் பருவங்களும் தற்போதைய வாழ்க்கையும் அடுத்தடுத்து நம் முன்வைக்கப்படுகிறது.

கறுப்பு வெள்ளையில் நிதானமாகவும் அழுத்தமாகவும் துயரத்துடனும் நகரும் காட்சியமைப்புகள் இறந்தகால நினைவுகளும் சமகாலமும் ஒருவரது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை உணரவைக்கின்றன. குழந்தைப் பருவத்தின் முதிராக் கனவுகளும் வேடிக்கைகளும் பார்வையாளர்களின் குழந்தைப் பருவத்தோடு இனம் காணவைப்பவை. சிறுவன் செர்கயேவ், தேசபக்திப் பாடலைப் பாடும் குழுவில் பிரதான பாடகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சியளிக்கப்படுகிறான். ஆனால் குதிரைக் குளம்புகளின் ஓசையை நாவில் எழுப்பும் கோரஸ் சிறுவர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கத்தான் அவனுக்கு விருப்பம். ஆசிரியையிடம் கண்டனம் தெரிவித்து விலகிவிடுகிறான். பிரதானமாகப் பாடுவதைவிடக் குதிரைக் குளம்பின் ஓசையை மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து எழுப்புவதுதான் விருப்பமானதாக இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் நாம் காணும் கனவுகள் வேறு. பெரியவரான பின்னர் பெரும்பாலானவர்கள் அடையும் நிஜம் வேறு. இந்த ஏமாற்றத்துக்குச் சமூகம், குடும்பம், தேசம், அரசியல் எல்லாமும் காரணிகளாகின்றன.

ரஷ்யாவில் வாழும் இளம்தலைமுறையினரின் இன்றைய ஏக்கங்கள்தான் இக்கதை என்கிறார் இப்படத்தின் இயக்குநர். லட்சியங்கள் உலர்ந்துபோன இன்றைய தலைமுறையினர் அனைவரும் உணரக்கூடிய பொது அம்சத்தை அவர் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பதே இயக்குநர் நடால்யாவின் வெற்றி. சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம், குழந்தைகளின் பால்யம் குறித்த கவலைகளையும் ஏக்கங்களையும் நினைவுகூற வைக்கும் பொதுதன்மை கொண்ட படைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x