Published : 13 Feb 2016 11:54 AM
Last Updated : 13 Feb 2016 11:54 AM

மீண்டும் குழி வெட்டக் கிளம்பும் பூதம்

2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம். ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்தில் சிறுகளஞ்சி பகுதியில் கெயில் நிறுவனம் காவல்துறை பாதுகாப்போடு நுழைந்தது. குழி வெட்டத் தயாராக இருந்த அந்நிறுவனத்தின் பொக்லைன் இயந்திரங்களின் முன் ஆண்களும் பெண்களும் படுத்துக்கொண்டு மறியல் செய்தனர். அவர்கள் பலவந்தமாக அப்புறப் படுத்தப்பட்டு குழிகள் பறிக்கப்பட்டன. பொக்லைன் இயந்திரங்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் முற்றுகை யிட்டுத் தடுத்து நிறுத்தினர். இது நாடெங்கும் பரவலான எதிர்ப்பை உருவாக்கியது. நிலத்தைப் பாதுகாக்கப் போராடிய விவசாயி களுக்கு ஆதரவாக விவசாய அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் களத்தில் இறங்கின.

- கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டம் இப்படித்தான் தமிழகத்தில் நுழைந்தது.



அடி மேல் அடி

தமிழகத்தில் வேளாண் தொழில் நசிந்து வருகிறது. உறுதியில்லாத விளைச்சல், கட்டுப்படியாகாத விலை போன்ற காரணங்களால் விவசாயத்தைவிட்டுக் கிராமமக்கள் வேறு தொழில்களுக்கு நகர்ந்து வருகின்றனர். உழவர்களின் தற்கொலை செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், வேளாண் தொழிலில் நிலத்தடி நீரைக் கொண்டு சாதனை படைத்து வருபவர்கள் கொங்கு மண்டல விவசாயிகள்.

இந்தப் பின்னணியில் கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கும், மங்களூருவுக்கும் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தைக் கெயில் நிறுவனம் 2011-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. கேரளத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் மங்களூரு வரை செல்லும் திட்டம் கைவிடப்பட்டதாக அன்றைய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழகத்தின் மேற்கு மண்டல விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் முடிவால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 175 வருவாய் கிராமங்களிலுள்ள சுமார் 4000 ஏக்கர் விளைநிலம் இதற்காகக் கையகப்படுத்தப்பட உள்ளது.



ஊதியமற்ற காவலர்கள்

பெட்ரோலியக் கனிம வளக் குழாய் பதிப்புச் சட்டம், 1962 (PM&P Act 1962) என்ற சட்டத்தின் கீழ், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலேயே வேளாண் விளைநிலங்களைக் கெயில் நிறுவனம் எடுத்துக்கொண்டது. இந்தச் சட்டத்தின்படி விளைநிலங்களின் வழிகாட்டு மதிப்பில் 10 சதவீதத்தை மட்டும் ஒரே ஒரு முறை குத்தகைத் தொகையாகக் கொடுத்துவிட்டு 99 ஆண்டுகளுக்கு நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

அது மட்டுமல்லாமல், இந்தத் திட்டம் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்குத் தேவையான பாசன அமைப்புகளும் நில அமைப்புகளும் சிதைக்கப்படும் என்பதாலும் வேளாண் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும். குழாய் பதிக்கப்பட்ட நிலங்களில் விவசாயிகள் மேற்கொண்டு எந்த மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மொத்தத்தில் இந்தத் திட்டத்தால் 24 ஆயிரம் ஏக்கர் வேளாண் உற்பத்தி நாசமாகும். வேளாண்மையை நம்பி வாழும் 5000 குடும்பங்கள் நேரடியாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து போவார்கள்.

பெட்ரோலியக் கனிம வளக் குழாய் பதிப்புச் சட்டத்தில் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி எரிவாயுக் குழாய்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கும் சேதங்களுக்கும் நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பு என்பது கூடுதல் இடி. சேதத்தின் தன்மைக்கேற்ப மூன்று ஆண்டு முதல் ஆயுள் தண்டனைவரை கொடுக்க வழியுள்ளது. இதனால் நிலத்தையும் இழந்துவிட்டு எரிவாயுக் குழாய்களைப் பாதுகாக்கும் ஊதியமற்ற காவலர்களாக விவசாயிகள் மாற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.



மாற்று வழி இல்லையா?

இந்தப் பிரச்சினைகளின் அடிப்படையில் விளைநிலங்களின் வழியாகக் கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்குத் தடை விதித்து, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தற்போதைய தீர்ப்பைக் கெயில் நிறுவனம் பெற்றுள்ளது. கெயில் நிறுவனத்தின் இந்த அணுகுமுறை, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள நிலம் குறித்தான அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்புக்கு மாற்றுவழி இல்லாமல் இல்லை. எரிவாயுக் குழாய்களை நெடுஞ்சாலை ஓரம் பதிக்கலாம் என மத்தியப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் சாலை ஓரமாகப் பல ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு எரிவாயுக் குழாய் கொண்டு செல்லப் படுகிறது. தமிழகத்திலும் அதைப் பின்பற்றி மத்திய அரசு செயல்பட வேண்டும். அத்துடன் விவசாயிகளின் வாழ்வாதாரங் களை எண்ணெய் நிறுவனங்கள் பறிக்க வழிவகுக்கும் 1962 பெட்ரோலியக் கனிமவளம், குழாய் பதிப்பு சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும்.



கெயில் எரிவாயுக் குழாய் திட்டம்

இதுவரை

திட்டம் என்ன?:

கொச்சியில் தொடங்கிப் பெங்களூரு வரை ரூ. 3,500 கோடி திட்ட மதிப்பீட்டில் 871 கி.மீ. தொலைவுக்குக் குழாய்கள் மூலமாக எரிவாயுவை அனுப்பும் கெயில் நிறுவனத்தின் திட்டம்.

எரிவாயுக் குழாய் செல்லும் பாதை:

கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்கள். கேரளத்திலும் கர்நாடகத்திலும் நெடுஞ்சாலை வழியாக எரிவாயுக் குழாய்க்கான பாதை செல்கிறது.

பாதிக்கப்படவுள்ள மாவட்டங்கள்:

திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள்.

தமிழகத்தில் செல்லவுள்ள தொலைவு: 310 கி.மீ.

சட்ட அடிப்படை

# பெட்ரோலியம் மற்றும் கனிமக் குழாய்களுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1962, பிரிவு 3

# அது சார்ந்து 2011-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி, டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கைகள்

# 2012-ம் ஆண்டு ஜனவரி 4-ல் வெளியிடப்பட்ட அறிவிக்கை

# எரிவாயு குழாயில் எங்கே கசிவு, வெடிப்பு ஏற்பட்டாலும் சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயியே அதற்குப் பொறுப்பு. அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து 7 முதல் 10 ஆண்டுகள்வரை சிறை தண்டனை பெற்றுத் தரலாம் என்கிறது திருத்தப்பட்ட எரிவாயு குழாய் பதிக்கும் சட்டம்.

கருத்து கேட்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2013 மார்ச் மாதம் தமிழகத் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஏழு மாவட்டங்களின் 134 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து விளை நிலங்கள் வழியாகக் குழாய்கள் பதிப்பதைக் கைவிட்டு நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்களைப் பதிக்குமாறு கெயில் நிறுவனத்தைத் தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

உடனடி பாதிப்புகள்

# குழாய் பயணிக்கும் இரு புறமும் 6 மீட்டர் தூரத்துக்கு விவசாயம் செய்யக்கூடாது.

# குழாய் செல்லும் இருபுறமும் குறைந்தது ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

# எரிவாயு குழாய் செல்லும் பாதையிலோ அருகிலோ ஆழமாக வேர் ஊடுருவும் பயிர்களை வளர்க்கக் கூடாது. குறிப்பாக மரம் வளர்க்கக் கூடாது.

# பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட எல்லைக்குள் கிணறோ, குளமோ, வாய்க்காலோ வெட்டக்கூடாது.

எதிர்காலப் பாதிப்புகள்

# மொத்தம் 279 ஹெக்டேர் நிலப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாது.

# மா, பலா, தென்னை உள்ளிட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பழவகை மரங்களை வெட்ட வேண்டியிருக்கும்.

# மொத்தம் 758 வீடுகள் இடிக்கப்படும்

# மொத்தம் 588 நீர்நிலைகளை மூடும் ஆபத்து ஏற்படும். தொடர்ந்து வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பிரச்சினையின் தற்போதைய நிலை

# கெயில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

# தேமுதிக கட்சி சார்பிலும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

# தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்யத் தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதில் கெயில் நிறுவனத்தினரையும் இணைந்துகொள்ளச் சொல்லிக் கேட்டுக்கொண்டுள்ளது.

- தொகுப்பு: ஆதி

கட்டுரையாளர், தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர்
தொடர்புக்கு: kiveponnaiyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x