Last Updated : 06 Feb, 2016 12:46 PM

 

Published : 06 Feb 2016 12:46 PM
Last Updated : 06 Feb 2016 12:46 PM

உலகை அச்சுறுத்திய 20 நோய்கள்

மனிதக் குல வரலாறு முழுவதும் போரால் கொல்லப்படுபவர்களைவிடவும் நோயால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையே அதிகம். சாதி, மதம், இனம், நிறம் என எந்த வேற்றுமையையும் நோய்கள் பார்ப்பதில்லை. பண்டைக் காலம் முதல் தற்போதுவரை உலகை ஆட்டிப்படைத்த 20 ஆட்கொல்லி நோய்கள்:

இதயக் கோளாறு

இன்றைய தேதிக்கு இதயக் கோளாறுதான் உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இறப்புக்கான காரணியாக இருக்கிறது. 2012-ல் 1.75 கோடி பேர் பலியாகியுள்ளனர். உலகில் நிகழும் 10 இறப்புகளில் மூன்றுக்கு இதய நோய்களே காரணம். இதயக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் ஏழை, நடுத்தர வருமானமுள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன.

காச நோய்

ஒவ்வொரு நொடியும் ஒருவர் காச நோய் தொற்றுக்கு ஆளாகிறார். 2012-ல் மட்டும் 13 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். காச நோய் பாக்டீரியா நுரையீரலையே அதிகம் தாக்கும் என்றாலும், மூளை, தண்டுவடம், சிறுநீரகம் போன்றவற்றையும் தாக்கலாம்.

நுரையீரல் புற்றுநோய்

உலகில் அதிகமானோர் இறப்பதற்குக் காரண மாக இருக்கும் புற்றுநோய் வகைகளுள் ஒன்று. ஆண்டுக்கு 13.8 லட்சம் பேர் பலியாகின்றனர். இந்த நோய் தாக்குவதற்கு 70 சதவீதக் காரணம் புகை பிடிப்பதுதான் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.

ஹெச்.ஐ.வி.

நோயை எதிர்த்து உடல் போராடுவதற்கு உதவியாக இருக்கும் ரத்த வெள்ளையணுக்களை ஹெச்.ஐ.வி. கிருமி தாக்குகிறது. இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதேநேரம் இந்த நோய்த்தொற்றின் இறுதி நிலையான எய்ட்ஸுக்கு இதுவரை 3.9 கோடி பேர் பலியாகியுள்ளனர்.

தட்டம்மை (Measles)

காற்று மூலம் மிக எளிதில் தொற்றக்கூடிய நோய் இது. தடுப்பூசி மூலம் வெற்றிகரமாகப் பல பகுதிகளில் தடுக்கப்பட்டு விட்டாலும், ஆப்பிரிக்கா, ஆசியா, கிழக்கு மத்தியத் தரைக் கடல் பகுதிகளில் இன்னமும் இந்த நோய் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 22 பேர் பலியாகி வருகின்றனர்.

காலரா

கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, ஒரு சில மணி நேரத்தில் இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடியது காலரா. சுத்தமான தண்ணீர் கிடைக்காத நாடுகளில் இந்த நோய் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் பேர் முதல் 50 லட்சம் பேர் காலராவால் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தொழு நோய்

தொழுநோய் குணப்படுத்தக் கூடியது என்றாலும் வரலாற்று ரீதியிலும் இப்போதும் பல நாடுகளில் தொழுநோயாளிகள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப் பட்டே வருகின்றனர். மெதுவாகப் பாதிப்புகளை வெளிக்காட்டத் தொடங்கும் இந்த நோய் தோலையும் நரம்புகளையும் பாதிக்கும். 2012-ம் ஆண்டு மட்டும் 2.5 லட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூளைக்காய்ச்சல் (Meningitis)

Meningococcal meningitis என்ற பாக்டீரியா மூளை, தண்டுவடத்தைச் சூழ்ந்துள்ள சவ்வுகளில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக ஒரு வயது முதல் 30 வயதுள்ளவர்களையே இது அதிகம் தாக்கும். ஆரம்பகட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தாலும்கூட, 5 முதல் 10 சதவீதமானவர்கள் இதற்குப் பலியாகி விடுகிறார்கள்.

கக்குவான் இருமல்

2008-ம் ஆண்டில் 1.6 கோடி பேர் கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்டார்கள். இதில் 95 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் 1.95 லட்சம் பேர் குழந்தைகள்.

சிபிலிஸ் (Syphilis)

எளிதாகச் சிகிச்சை அளிக்கக்கூடிய இந்த நோய், உடலுறவால் எளிதில் பரவக்கூடியது. இறப்பு அல்லது மூளை, இதயப் பாதிப்புகளை இந்த நோய் உருவாக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் 1.2 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர்.

எபோலா

காங்கோவில் எபோலா நதி அருகே 1976-ல் இந்த நோய் முதலில் தோன்றியதால் இந்தப் பெயர் வந்தது. உடல் திரவங்கள் மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு நேரடியாகக் கடத்தப்படும் வைரஸால் இந்த நோய் தொற்றுகிறது. தசை வலி, பலவீனம், கடும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள். இந்த நோய்த்தொற்றால் இறப்பதற்கு உள்ள வாய்ப்பு 90 சதவீதம்.

பன்றிக் காய்ச்சல் (Influenza A-H1N1)

பன்றி காய்ச்சல் 2009-ம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகச் சுகாதார நிறுவனக் கணிப்புகளின்படி 18,550 பேர் இறந்துள்ளனர். அதேநேரம், இந்தக் காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம்.

மலேரியா

கொசு கடியால் தொற்றும் நோய், கடுமையான காய்ச்சலுக்கான அறிகுறிகளையே காட்டும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இறப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீத இறப்பு ஆப்பிரிக்காவின் சஹாராவை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் குழந்தைகளிடையே நிகழ்கிறது.

மஞ்சள் காய்ச்சல் (Yellow fever)

கொசு கடிப்பதால் பரவும் நோய்களுள் இதுவும் ஒன்று. தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் மஞ்சள் காய்ச்சல் அதிகம் தாக்குகிறது. இந்த நோயால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 30 ஆயிரம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் கணிப்பு.

நாள்பட்ட நுரையீரல் நோய் (Chronic lung disease)

மூச்சுக்குழாய் அலர்ஜி, காற்றறைகள் சிதைந்து போதல் (emphysema) ஆகிய இரண்டு நாள்பட்ட நுரையீரல் நோய்களும் உலகெங்கும் மூன்றாவது மிகப் பெரிய இறப்புக் காரணியாக 2030-ல் இருக்கும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

பெரியம்மை

பண்டைக் காலத்தில் பெரிதும் அச்சுறுத்திய நோய் பெரியம்மை. இந்த நோய் தாக்கினால் இறப்பதற்கு உள்ள வாய்ப்பு 30 சதவீதம்தான். ஆனால், மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியது. உலகச் சுகாதார நிறுவனத்தின் தொடர்ச்சியான தடுப்பூசிகள் மூலம் 1977-ல் இந்த வைரஸ் மொத்தமாக ஒழிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே 50 கோடி பேரைப் பலி கொண்டது.

பிளேக் (Bubonic plague)

வரலாற்றின் மத்தியக் காலத்தில் மிகப் பெரிய பீதியைக் கிளப்பிய பிளேக் நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2.5 கோடி. ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பரவிய இந்த நோய் காரணமாக, ஐரோப்பாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் பலியாகினர்.

ஸ்பானிய காய்ச்சல் (Spanish Flu)

உலகின் மோசமான தொற்றுநோய்களுள் ஒன்று ஸ்பானிய காய்ச்சல். 1918-1919-ம் ஆண்டுகளில் உலகில் 3 கோடி முதல் 5 கோடி பேர் வரை இதற்குப் பலியாகியுள்ளனர்.

சார்ஸ் (SARS)

தெற்கு சீனாவில் 2002-2003-ல் உருவான சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome - SARS) கடுமையான சுவாசக் கோளாறை உருவாக்கக்கூடிய ஒரு வைரஸ். கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே 37 நாடுகளில் பரவிப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியது. 8,000 பேர் பாதிக்கப்பட்டு, 774 பேர் பலியாகினர்.

பறவை காய்ச்சல்

சார்ஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தலாகப் பரவிய மற்றொரு வகை காய்ச்சல் இது. 2003-ல் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவிய பிறகு 421 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 257 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x