Published : 09 Jul 2021 10:40 am

Updated : 09 Jul 2021 10:47 am

 

Published : 09 Jul 2021 10:40 AM
Last Updated : 09 Jul 2021 10:47 AM

கே.பாலசந்தர் 91-வது பிறந்தாள்: மேடையின் ‘சிகரம்’

balachander-s-91st-birthday
இளைஞர் கே.பி.

எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதி 1964-ல் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கே.பி. அதன்பின்னர் 2006-ல் வெளியான ‘பொய்’ திரைப்படம் வரை 105 திரைப்படங்களில் அவருடைய படைப்பாக்க மேதமை வெளிப்பட்டிருக்கிறது. 1990-ல் தூர்தர்ஷன் அலைவரிசைக்காக இயக்கிய ‘ரயில் சினேகம்’ குறுந்தொடரில் தொடங்கி, 2011-ல் ஜெயா தொலைக்காட்சியில் வெளியான ‘சாந்தி நிலையம்’ மெகா தொடர் வரை 19 வெற்றிகரமான தொடர்களை இயக்கி, சின்னத்திரையிலும் தான் சிகரம் என்பதை நிரூபித்தார். ஆனால், இந்தச் சாதனையாளரின் தாய் வீடு நாடக மேடை.

கே.பியின் மேடை நாடகங்கள் சமகாலச் சமூகத்தில் மலிந்த முரண்பாடுகளைக் கண்ணாடிபோல் பிரதிபலித்தன. பெண்களுக்காகவும் சாமானிய மனிதர்களுக்காவும் பரிந்து பேசின. 60-களில் அவருடைய நாடகங்கள் சென்னையில் மட்டுமே அதிகமாக நிகழ்த்தபட்டன. அவற்றுக்கு பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களைப் படித்துவிட்டு, அவற்றைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் சென்னைக்கு வந்து சென்றார்கள். நாடகம் தொடங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாகவே அரங்கு நிறைந்துவிடும். காட்சிக்குக் காட்சி கரவொலி, உருக்கமான தருணங்களில் கண்ணீர் வடிப்பது என அவரது நாடகங்களோடு ரசிகர்கள் ஒன்றிப் போனார்கள். அவரது புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படங்களாக வெளிவந்தபோது, அவற்றைப் பார்க்க மறுத்துவிட்ட கே.பியின் தீவிர நாடக ரசிகர்கள் உண்டு.


கே.பியுடைய நாடகங்களின் வெற்றிக்கு அவர் தேர்ந்தெடுத்த உள்ளடக்கம் மட்டுமல்ல, நடிகர்கள் தேர்வு, இரண்டு மாதம் வரை ஒத்திகை, மிகக் குறைந்த அரங்கப் பொருட்கள் என்று ஒவ்வொன்றிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். குறிப்பாக, தான் எழுதிக்கொடுத்த வசனங்களுக்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட்டியோ, குறைத்தோ பேச அவர் அனுமதிகொடுக்கவில்லை. அத்தனைக் கறாரான நாடகாசிரியர், நாடக இயக்குநர் கே.பியை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.

திண்ணை நாடகம்

தஞ்சையின் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி. 12 வயது சிறுவனாக, தன் வீட்டுத் திண்ணையில் நாடகம் போட்டால், கண்டிப்பான அப்பாவிடம் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அதனால், பத்து வீடுகள் தள்ளிப்போய், நாடகம் போட்டார். அப்பா ஊரில் இல்லையென்றால், எதிர்வீட்டு நண்பன் நாகராஜனைச் சேர்த்துக்கொண்டு, இரவல் பெற்றத் திண்ணையில் நாடகம் அரங்கேறும். வாடகைக்கு எடுத்துவந்த பெட்ரோமாக்ஸ் விளக்குடன், போர்வையைத் திரையாக்கி, கடவுள் வாழ்த்து பாடி, நடிகர்களாகப் பங்குபெறும் தன்சோட்டு சிறுவர்களின் பெயர்களை வாசித்து, கே.பி. அரங்கேற்றியது பத்து பக்கத்தைத் தாண்டாத குட்டி நாடகம். அந்த முதல் முயற்சிக்குக் கிடைத்த கைதட்டல்களின் வழியாகத்தான் கே.பி.என்கிற நாடகக் கலைஞர் பிறந்தார்.

மேடைகளைத் தேடியவர்

பள்ளியில் ஆண்டுதோறும் நடக்கும் மாறுவேடப் போட்டியில் கே.பி. போட்டது வெறும் மாறு வேடங்கள் அல்ல. அத்தனையும் ஒருநபர் பங்கேற்கும் ஓரங்க நாடகங்கள். 8-ம் வகுப்பு படித்தபோது நடந்த மாறுவேடப் போட்டியில் விக்டர் ஹ்யூகோவின் ‘The Hunchback of Notre Dame’ நாவலில் வரும் கூணன் வேடமிட்டு, அதில் வரும் ஒரு காட்சியை நடித்துக்காட்டி முதல் பரிசைத் தட்டிக்கொண்டு வந்தார் கே.பி.

பால்யம் கடந்து இளைஞனாக வளர்ந்து நின்றபோது, தன்னுடைய நண்பர்கள் சினிமா பார்க்க திருவாரூர் சென்றால், கே.பி. நாடகக் கொட்டகைக்குள் நுழைந்துவிடுவார். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா நாடகங்களைப் பார்த்து, நள்ளிரவில் வீடு திரும்பி, அப்பாவிடம் நையப் புடைபட்டவர். கலைவாணரின் நாடகங்களில் நிறைந்திருந்த சமூக எள்ளல் பாலசந்தரை வியக்க வைத்தது. எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் அணலாகத் தெறித்த பகுத்தறிவுப் பிரச்சாரமும் அவருடைய குபீர் நகைச்சுவையின் ‘டைமிங்’கும் கே.பிக்கு அரசியல் நாடகங்களின் நீள அகலங்களை அறிமுகப்படுத்தின. இந்த இரண்டு நாடக ஆளுமைகளுக்கு மாற்றாக டி.கே.சண்முகம் சகோதரர்களின் நாடகங்கள் சமூகத்தின் மீதும் குடும்ப அமைப்பின் மீது காட்டிய அக்கறையைக் கண்டு நெகிழ்ந்துபோனார் இளைஞர் கே.பி.

கல்லூரி முதல் பள்ளி வரை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் இளங்கலை விலங்கியல் படித்து, 19-வயதில் முதல் வகுப்பில் தேறி பட்டம்பெற்றார். அங்கே, மாணவர் விடுதி தினத்துக்காகவும் பல்கலைக்கழக நிறுவனர் தினத்துக்காகவும் காத்திருந்து ஓரங்க நாடகங்கள் நடத்திப் பாராட்டுகளைக் குவித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்று விலங்கியல் படிக்கச் சொன்னதைத் தட்டாத கே.பி., அப்பாவின் பொருளாதார பலம் அதற்கு இடம்கொடுக்காது என்பதைத் தெரிந்துகொண்டபோது, துளி மனவருத்தமும் இல்லாமல் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்வது என்று முடிவெடுத்தார். அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்துக்கு விண்ணப்பித்துவிட்டு, வேலை வரும்போது வரட்டும் என்று உடனடியாகக் கிடைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் வேலையில் மாதம் 30 ரூபாய் ஊதியத்தில் சேர்ந்துவிட்டார்.

முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக கே.பி.வேலைக்குச் சேர்ந்தபோது அவருக்கு 20 வயது. அங்கே 18 வயதில் பல மாணவர்கள் இருந்தார்கள். கே.பி. நாடகத் தோரணையுடன் பாடம் நடத்துவதை, கண்டு வியந்துபோனார் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் வேதநாயகம். கே.பி.யை அழைத்து ‘நம்ம மாணவர்களை வைத்து ஒரு நாடகம் போடக் கூடாதா?’ என்றார். அதற்காகவே காத்திருந்த கே.பி., பள்ளி ஆண்டுவிழாவில் நடத்திய நாடகத்தை ஊர் மக்கள் கொண்டாடினார்கள். யார் அந்த ஆசிரியர் என்று வியந்து, தேடி வந்து கைகுலுக்கினார்கள். முத்துப்பேட்டையின் விஜபியாக ஆனார். ஓராண்டு ஆசிரியராகப் பாணியாற்றியிருந்த கே.பி. சென்னைக்குப் புறப்பட்டபோது, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என ரயில் நிலையத்தில் திரண்டு வந்து வழியனுப்பினார்கள்.

கலையுலகம் ஆன அலுவலகம்

நல்ல பணியும் அதற்கேற்ற ஊதியமும் அமைந்தது மட்டுமல்ல, தன்னுடையக் கலைப் பயணத்தை முழுவீச்சில் தொடங்க பெரும் களமாகவும் அமைந்துவிட்டது கே.பி. வேலையில் இணைந்த ஏ.ஜி அலுவலகம். வேலைக்கு இணைந்த முதலாண்டில், ஏ.ஜியாக இருந்தவர் பணியிட மாறுதலில் சென்றார். என்.ஜி.ஓ.சங்கத்தின் செயலாளர் சுப்பைய்யா என்பவர் பிரிவுபசார விழாவையும் புதிய ஏ.ஜிக்கான வரவேற்பு விழாவையும் ஒன்றாக நடத்தினார். புகழ்பெற்ற ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்த அந்த விழாவில், ‘Cinema Fanatic’ என்கிற ஆங்கில ஓரங்க நாடகத்தை நடத்தியது மட்டுமல்ல, அதில் வரும் மூன்று கதாபாத்திரங்களையும் கே.பியே ஏற்று நடித்தார். 1953-ல் மேடையில் அரங்கேறிய கே.பியின் முதல் நாடகம் அதுதான்.

அதன்பிறகு ஏ.ஜி. அலுலவகத்திலும் கே.பி.தான் கதாநாயகன். அந்த நாடகத்தில் வந்த, தீவிர சினிமா ரசிகன் கதாபாத்திரம்தான் பின்னாளில், ‘எதிர் நீச்சல்’ நாடகத்திலும் திரைப்படத்திலும் இடம்பெற்ற பட்டு மாமி கதாபாத்திரமாக மாறியது. ஏ.ஜி. அலுவலகத்துக்காக அதன்பிறகு ஐந்துக்கும் மேற்பட்ட ஆங்கில நாடகங்கள். ஏ.ஜி.க்காகஅலுவலகத்தில் கே.பி. நடித்து, இயக்கிய நாடகம்தான் பின்னாளில் ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படமானது.

கே.பி.யின் திறமையைக் கண்டு ராமன், பி.ஆர். கோவிந்த ராஜன், ராமையா, ஹரிகிருஷ்ணன் என பல கலையார்வம் கொண்ட நண்பர்கள் அவருடன் இணைந்துகொண்டார்கள். ஐந்து ஆண் கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸில் கே.பி.போட்ட முதல் நாடகம் ‘புஷ்பலதா’. மேடையில் பெண் கதாபாத்திரம் தோன்றாமல், அவரைப் பற்றி ஆண் கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த நாடகம் சூப்பர் டூப்பர் ஹிட். “அந்த வெற்றியின் நினைவாகவே மகளுக்கு புஷ்பா எனப் பெயர் சூட்டினேன்” என்று நினைவு கூர்ந்திருக்கிறார் கே.பி.

மேடையிலிருந்து திரைக்கு…

இதன்பின்னர் கே.பி.யின் நாடக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்கள் ‘இண்டியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ குழுவை நடத்தி வந்த வி.எஸ்.ராகவனும் ‘மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்’ கார்த்திக் ராஜகோபாலும். இவர்களுக்காக நாடகங்களை எழுதியும் அவற்றில் நடித்தும் பிரபலமான கே.பியை தனிப்பெரும் நாடக ஆளுமையாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ நாடகம். இதன்பின்னர், ‘மெழுகுவர்த்தி’, ‘நீர்க்குமிழி’, ‘எதிர் நீச்சல்’, ‘நவக்கிரகம்’, ‘நாணல்’, ‘கௌரி கல்யாணம்’ என மேடையில் வெற்றிக்கொடி நாட்டிய தன்னுடைய பல நாடகங்களை தனக்கே உரிய திரைமொழியில் வெற்றித் திரைப்படங்களாக்கியது தனிப்பெரும் சரித்திரம்.

நாடக மேடை, வெள்ளித்திரை, சின்னத்திரை என சிகரம் தொட்ட கே.பி., மீண்டும் தன்னுடைய தாய் வீட்டுக்குத் திரும்பி, ‘பௌர்ணமி’, ‘ஒரு கூடைப் பாசம்’ ஆகிய இரண்டு நாடகங்களை எழுதி, இயக்கி ஹிட்டடித்தார்.

படங்கள் உதவி: ஞானம்

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in


கே.பாலசந்தர்91-வது பிறந்தாள்Balachander's 91st birthdayBalachanderஎம்ஜிஆர்சரோஜா தேவிதெய்வத்தாய்தமிழ் சினிமாபொய்திண்ணை நாடகம்மேடைகள்கல்லூரிகலையுலகம்KBalachander

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x