Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கதை: எறும்புகளும் எறும்புத்தின்னியும்

சு.அபிநயா

வெயில் தாங்காமல் ஒரு மரத்தடியில் தன் குட்டியுடன் ஓய்வெடுத்தது பன்றி. அப்போது எறும்புக் கூட்டம் ஒன்று அந்தப் பக்கம் வந்தது.

“எறும்புகளே, நானும் என் குட்டியும் தாகத்துடன் இருக்கிறோம். கொஞ்சம் தண்ணீர் கொடுத்து உதவ முடியுமா?” என்று கேட்டது பன்றி.

“இந்த வெயிலில் எதற்கு உணவு தேடி வந்தீர்கள்? எங்களால் எப்படித் தண்ணீர் கொடுத்து உதவ முடியும்? எங்கள் பின்னால் வந்தால், தண்ணீர் இருக்கும் இடத்தைக் காட்டுகிறோம்” என்றது தலைவர் எறும்பு.

“எங்களால் நடக்கவே முடியவில்லை. தண்ணீர் இல்லாவிட்டால் என்ன ஆவோம் என்று பயமாக இருக்கிறது” என்று கெஞ்சியது பன்றி.

“சரி, ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். நீங்கள் இருவரும் இங்கேயே ஓய்வெடுங்கள்” என்று சொல்லிவிட்டு, கூட்டத்தை அழைத்துக்கொண்டு சென்றது தலைவர் எறும்பு.

சிறிது நேரத்தில் ஓர் ஓடை வந்தது. எறும்புக் கூட்டம் நின்றது. “எப்படியாவது பன்றிகளைக் காப்பாற்ற வேண்டும். ஏ, காகமே... ஒரு உதவி வேண்டும். வடக்கில் மஞ்சனத்தி மரத்துக்கடியில் இருக்கும் பன்றிகளுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுமா உன்னால்?”

“தண்ணீரைப் பிடித்துக் கொடுத்தால் கொண்டு செல்கிறேன்” என்றது காகம்.

அப்போது யானையின் பிளிறல் கேட்டது. “யானையாரே, நலமா?” என்று கேட்டது தலைவர் எறும்பு.

“தண்ணீர் பருக வந்தேன். ஏன் நின்றுவிட்டீர்கள்?”

“வடக்கில் மஞ்சனத்தி மரத்தடியில் இருக்கும் இரு பன்றிகளுக்குத் தாகம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க முடியுமா?”

யானை சம்மதித்தது. தாகம் தீர தண்ணீர் குடித்தது. பிறகு தும்பிக்கை முழுவதும் தண்ணீரை எடுத்துக்கொண்டு பன்றிகளைச் சந்தித்தது.பன்றிகள் இரண்டும் தண்ணீர் பருகின. நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பின.

இரண்டு நாட்களுக்குப் பிறகு எறும்புகளிடம் நன்றி சொல்வதற்காக வந்தது பன்றி. அப்போது எறும்புக்கூட்டம் முழுவதும் அழுதுகொண்டிருந்தது. பன்றிக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் கேட்டது.

“எங்கள் கூட்டத்தில் எறும்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நம் காட்டுக்குப் புதிதாக வந்த எறும்புத்தின்னிதான் (அலங்கு) இந்தக் காரியத்தைச் செய்கிறது” என்று அழுதது தலைவர் எறும்பு.

”உங்களுக்கு என்னால் ஆன உதவியை நிச்சயம் செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்ற பன்றி, வழியில் யானையைச் சந்தித்தது.

“யானையாரே, நம் எறும்புகள் ஆபத்தில் இருக்கின்றன. எப்படியாவது அந்த எறும்புத்தின்னியை விரட்டி, எறும்புகளைக் காப்பாற்ற வேண்டும்” என்றது பன்றி.

“எறும்புத்தின்னியை விரட்டுவது என் பொறுப்பு. ஆனால், எறும்புகள் இனி நான் இருக்கும் பக்கம்கூடத் தலை வைத்துப் படுக்கக் கூடாது. போன வாரம் ஒரு எறும்பு காதுக்குள் சென்று உயிரை வாங்கிவிட்டது.”

“அப்படியே செய்யச் சொல்கிறேன்.”

இரண்டும் எறும்புப் புற்றுக்குச் சென்றன. சிறிது நேரத்தில் புற்றை நாடி எறும்புத்தின்னி வந்தது.

“வந்த வழியே திரும்பிப் போய்விடு. எனக்கு உதவி செய்த எறும்புகளுக்கு ஒரு தீங்கும் நடக்க அனுமதிக்க மாட்டேன்” என்றது பன்றி.

“என் உணவே எறும்புகள்தான். என்னைத் தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை. தன் எதிரியான எறும்புகளுக்கு யானை காவல் நிற்பது ஆச்சரியமாக இருக்கிறது. யானை கரும்பு, மூங்கில்களைச் சாப்பிடக் கூடாது, பன்றிகள் காய்கறி, பழங்களைத் தேடக் கூடாது என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? வழி விடுங்கள்’’ என்றது எறும்புத்தின்னி.

“நீ வாயைப் புற்றுக்குள் விட்டால் கூட்டத்தையே காலி பண்ணிடறே... எறும்புகளும் பாவம் இல்லையா?” என்று கேட்டது பன்றி.

“சாப்பிடாமல் போக மாட்டேன்.”

“உன்னைத் தூக்கி வீசினால், ஒரு வருஷத்துக்கு நடக்க முடியாது. வீசட்டுமா? இல்லை, நீயே கிளம்பிடறீயா?”

“என் உணவு, என் உரிமை.”

“நம்ம காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருப்பதே இந்த ஒரு எறும்புத்தின்னிதான். அடுத்த வாரம் வேட்டைக்காரர்கள் வரும்போது, இதைக் காட்டிக் கொடுத்துவிடுவோம். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்றது யானை.

“ஐயோ... மனிதர்களா? வேண்டாம், இனி எறும்புகள் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன். பழங்கள், முட்டைகளைச் சாப்பிட்டுக் காலம் தள்ளுகிறேன். இல்லையென்றால் பக்கத்து காட்டுக்குச் சென்றுவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடியது எறும்புத்தின்ன்னி.

எறும்புகள் நிம்மதியாக வெளியே வந்து யானைக்கும் பன்றிக்கும் நன்றி கூறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x