Published : 08 Mar 2020 12:02 PM
Last Updated : 08 Mar 2020 12:02 PM

அன்றொரு நாள் இதே நிலவில் 48: தானியம் காக்கும் சாமி

பாரததேவி

பிள்ளைகள் கோழிகளை மடக்கிப் பிடிக்கவும் வீட்டுக்குள்ள போயி அருவாமனை, ஊசி நூல், ஒரு சருவச்சட்டியோடு ஒரு பெரிய மஞ்சள் கிழங்கையும் செறட்டை நிறைய அரைத்து வழித்தெடுத்து வந்தாள் கோமதி.

அப்போதெல்லாம் கத்தி, கித்தி எதுவும் கிடையாது எல்லாப் பழக்கத்துக்கும் அரிவாள்மனைதான் இருந்தது. ஒருவரின் நகத்தைக்கூட மற்றவர்கள் அரிவாள்மனை கொண்டு நறுக்கினார்கள். சில நேரம் ஊர்க்காரர்களுக்கு முடிவெட்டிவிடும் தொழிலாளியிடம் தங்கள் நகங்களை வெட்டச்சொல்வார்கள்.

கோமதியின் சாமர்த்தியம்

கோமதி அந்தப் பிள்ளைகளிடமிருந்து ஒவ்வொரு கோழியாக வாங்கினாள். கோழியின் இரைப்பொட்டியை அரிவாள்மனையால் லேசாகக் கிழித்து அதனுள் இருந்த கேப்பையையெல்லாம் சருவச்சட்டியில் உதிர்த்தாள். இப்படியே ஒவ்வொரு கோழியின் இரைப்பையிலிருந்த எல்லாக் கேப்பையையும் தட்டினாள். பிறகு ஒவ்வொரு கோழியின் இரைப்பையையும் ஊசியில் நூல்கோத்து மெல்லியதாகத் தைத்துவிட்டதோடு தான் அரைத்துவைத்த மஞ்சளையும் பூசி குப்பைக் கிடங்கைப் பார்த்து விரட்டிவிட்டாள். பிறகு சருவச்சட்டியிலிருந்த கேப்பையைத் தண்ணிவிட்டு அலசிக் காயவைத்தாள்.

இதற்குள் திருவையில் போட்ட பத்தும் காய்ந்துவிட்டது. பிறகு பெரிய மொடாப்பானையில் ஒரு குடம் தண்ணியை ஊற்றி உலை வைத்து தண்ணியாகக் கூழைக் காய்ச்சினாள். அந்தத் தீ கங்கிலேயே ஒரு கை மிளகாய் வற்றலை எடுத்து உருளச்சுட்டு உப்போடு வைத்தாள். இதற்குள் பிள்ளைகள் எல்லாம் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு சொம்பு கூழை ஊற்றி வற்றலையும் கொடுத்தாள். அவர்கள் வயிறு குளிர மனம் குளிரக் குடித்தார்கள்.

அதன்பின்தான் கோழிகள் தின்றுவிட்ட கேப்பையைத் தான் மீட்டெடுத்த விதத்தைச் சொன்னாள். உடனே பிள்ளைகள், “எங்களுக்காகக் கோழியோட இரப்பெட்டியைக் கிழிச்சிட்டயே. அதுக பாவம்” என்றார்கள். கோமதியும், “போங்கடா போங்க. இரப்பெட்டி காயத்த சீக்கிரம் மஞ்சள் ஆத்திரும். அதுக போயி குப்ப வரப்பில் இருக்க கரையானத் தின்னு தங்க வவுத்த நிரப்பிக்கிடுங்க. நானு இந்த மாதிரி ஒரு வேல செய்யாட்டா என் புள்ளைக பசிய எப்படிப் போக்குவேன்?” என்றாள்.

ஊரைக் குளிர்வித்த மழை

நாளாக ஆக மழை இல்லாமல் ஊர் ரொம்ப மோசமாகப் போய்க்கொண்டிருந்தது. சங்கிலியாண்டியின் கிணற்றில்கூடத் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டது. அன்றும் ஊர்ப் பெரியவர்கள் கூட்டம் போட்டார்கள். “இனியும் இந்த ஊரில் இருக்கக் கூடாது. இப்படியே கொஞ்ச காடுகளைக் கடந்து போவோம். பன்னண்டு வருசத்துப் பஞ்சத்துக்கும்கூடச் செழிப்பான காட்டுல இருக்கும் ‘பனம்பூ’ மணக்குமாக்கும். அப்படிப் பனம்பூ மணத்துச்சின்னா நம்ப திரும்பி வந்துருவோம்.

வந்து புள்ள, குட்டிகள, குடும்பங்கள கூட்டிட்டுப் போயிருவோம்” என்று முடிவெடுத்தார்கள். இதைத் தங்கள் வீடுகளில் சொன்னபோது எல்லோருக்கும் மலைப்பாக இருந்தது. ஆனால், நம் பிழைப்பு இனி கொஞ்சம் செழிப்பாயிருக்கும் என்று நினைத்தபோது சந்தோசமாகவும் இருந்தது. ஆனால், ஊருக்குள்ளிருக்கும் ஆண்கள் எல்லாரும் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்களுக்குத் திகைப்பாகவும் இருந்தது. இவர்களின் மனக்குழப்பத்தைப் பார்த்தோ என்னவோ மழையே செழிப்பாகப் பெய்துவிட்டது.

திருட வந்த சின்னச்சாமி

களம் நிறைய சோளம் காய்ந்துகொண்டிருந்தது. சுமார் இருபது மூடை இருக்கும். அமாவாசை முடிந்த பின் வளர்ந்துகொண்டுவந்த அரை நிலா வெளிச்சத்தில் புழுதியில் பால் சிந்தியதுபோல் சோளத்தைக் களம் நிறையக் காயப்போட்டிருந்தார்கள். அது பெரிய களம். சோளத்துக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் குருதவல்லி (குதிரைவாலி), வரகு, கேப்பை, சாமை என்று நிறைய தானியங்களை மூடை, மூடையாய்க் காயப்போட்டிருந்தார்கள். களவு செய்யவந்த சின்னச்சாமிக்கு அந்தத் தானியங்கள் மீதெல்லாம் நாட்டம் போகவில்லை.

அதெல்லாம் உமி தானியங்கள். இந்நேரம் அள்ளிக்கொண்டு போனாலும் குத்தவும் பொடைக்கவுமாக அம்மாவை நிறைய வேலைவாங்கும். அரை மூடை தானியத்தை அள்ளிக்கொண்டு போனாலும் பாதி உமி போக மீதிதான் அரிசியாக இருக்கும். இந்தச் சோளம் என்றால் ஒரே தடவையில் குத்திப்புடைத்து இடிச்சிப் போட்டா கஞ்சியாயிரும். அரை மூடை சோளத்த அள்ளிட்டுப்போன நாமளும் ஏழெட்டு நாளைக்கு நிம்மதியாக இருக்கலாமின்னு நினைச்சான்.

முன்பெல்லாம் இந்த சின்னச்சாமி நல்லவனாகத்தான் இருந்தான். அய்யாகூட வேலைக்குப்போயி ரெண்டு பேரு கொண்டுவர கூலியத்தான் கொண்டாந்து வீட்டுல கொடுத்து எப்படியோ அரையும் குறையுமா கஞ்சி காய்ச்சி குடிச்சிக்கிட்டு இருந்தாக. ஒருநா அம்மையில விழுந்த அவன் அப்பா ‘குளுந்துப் போயிட்டாரு’ (செத்துப் போனாரு). வீட்டுல இருந்த புள்ளைகள்லாம் இவனுக்குச் சின்னப் பிள்ளைகளா இருந்தாங்காட்டி இவன் ஒருத்தன்தான் வேலைக்குப் போனான். இவன் அன்னாடு கொண்டு வார கூலியில இவன் தம்பி தங்கச்சிகளுக்கு அரை வயிறுகூட நிறைய மாட்டேங்குது. எப்பப் பார்த்தாலும் இலையும் கொலையுமா பசி, பசின்னு வீட்டச் சுத்தியே கண்ணீரும் கம்பலையுமா அலையுதுக.

அம்மாவின் ஆசி

சின்னச்சாமி இப்படிப் பசியோட அலையிற புள்ளைகளப் பாத்தான். அவனுக்கு மனசு நொந்துபோச்சு. அதுக்குப் பெறவுதான் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சரி, இனிமே நம்ம கொத்துதவேலைக்குப் போயி கொண்டார கூலியில இவுக பசிய நிரப்ப முடியாது. இப்படி இவுக பட்டினியே கிடந்தா செத்தாலும் செத்துப்போவாக. அதனால, தம்பி தங்கச்சிக பெரிய ஆளா ஆவந்தண்டியும் நம்ம களவு வேலை செஞ்சிதேன் இவுகள காப்பாத்தணும். எல்லாரும் பெரிய ஆளா ஆயி சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா நம்ம களவு வேலய விட்டுவிடுவோமின்னு நினைச்சான். அதைத்தான் அம்மாகிட்டயும் சொன்னான்.

அவன் அம்மாளும், “நீ சொல்வதும் வாஸ்தவமான வார்த்ததேன் சின்னச்சாமி. அம்புட்டுப் புள்ளைகளும் கண்ணுக்குள்ள உசுர வச்சிக்கிட்டுத்தேன் அலையுதுக. நீ நித்தமும் களவாங்கப்போகையில எங்கிட்ட சொல்லிட்டுப்போ. நானு ஒரு துணிய எடுத்து மஞ்சள்ல முக்கி சாமியக் கும்புட்டு ஒரு முடிச்சிப் போட்டுவைக்கேன். நானு கும்புடுதசாமி உன்ன யார் கண்ணுக்கும் காட்டிக்கொடுக்காம கொண்டாந்து வீடுசேத்துரு”மின்னு சொன்னா. தன் அம்மா சொன்னதக் கேட்டதும் இவன் தினமும் தைரியமா களவாங்கப்போனான்.

அப்படிப் போறவன் அவன் அம்மா சொன்ன மாதிரியே கேப்பகருது, கம்மங்கருது, பருத்தி, நிலக்கடலை, வெங்காயமின்னு மூடை மூடையா ராவோட ராவா கொண்டாந்து சேத்திருவான். அவன் அம்மா மகன் தானியம் கொண்டாந்தா குத்திப் பொடச்சி புள்ளைகளுக்குக் கஞ்சி காய்ச்சி ஊத்துவா. அதேநேரம் வெங்காயம், நிலக்கடலை, பயறு, பச்சையின்னு கொண்டு வந்தா அத ராத்திரியோட ராத்திரியா ரகசியமா யாருக்காவது வித்து, சாப்பாடு செஞ்சி பிள்ளைக வயித்த நிரப்பிடுவா.

பேர்வாங்கிய காவலுச்சாமி

இன்னைக்கு ஒரு சாக்கைத் தூக்கிட்டு களவாங்க வந்தவனுக்கு இந்தச் சோளத்தப் பாத்துட்டுப் போகவே மனசு இல்ல. அதை அள்ளவும் மனசில்ல. ஏன்னா, களத்துக்குக் கொஞ்ச தூரத்தில் வீரசிங்க சாமி கையில பெரிய அரிவாளோட திருக்கு மீசையோட ஒரு மண்பீடத்தில் உக்காந்திருக்கு. இந்தக் களத்தில் வண்டி வண்டியாவும், கட்டு கட்டாவும் கருதக் கொண்டாந்து போட்டு அடிக்கிறவங்க எல்லாம் பொழுது அடைஞ்சிருச்சின்னா அள்ளிட்டுப் போறதில்ல. அது பத்து மூடையா இருந்தாலும் சரி அம்பது மூடையா இருந்தாலும் சரி அள்ளிக்கிட்டும் போவது கிடையாது. காவலுக்கும் வந்து படுக்க மாட்டாக.

ஒரு சூடத்த அந்த வீரசிங்க சாமி முன்னால ஏத்திக் கும்பிட்டு, சாமி நீதேன் என் தானியத்துக்குக் காவலுன்னு சொல்லி அப்படியே தானியத்தைக் களத்தில காயப் போட்டுட்டுப் போயிருவாக. மறுநாளு வந்து பாத்தா அட்டம்சுழியாம, அசக்காத்து வீசாம அந்தத் தானியமெல்லாம் ஒரு கைபிடிகூடக் குறையாம அப்படியே இருக்கும். அதனால, அந்தச் சாமியோட காவல பத்தி சுத்தியுலுள்ள கிராமங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி, அந்தச் சாமி ‘காவலுச்சாமி’ன்னு பேர் வாங்கிருச்சி. சில விவசாயிக அம்பது மூடை நெல்லக்கூடக் கொண்டாந்து அங்கே போட்டுட்டு விலைக்கு அளக்கவரும் வியாபாரிக்காகக் காத்திருப்பாக. ஆனா, காவலுக்கு ஒருத்தருகூட வந்து படுக்க மாட்டாக. அந்தச் சாமிமேல அவ்வளவு நம்பிக்கை.

(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x