Published : 06 Mar 2020 09:29 AM
Last Updated : 06 Mar 2020 09:29 AM

பாடல் பயணம் 40: அதுவொரு பொன்மாலைப் பொழுது!

ஆர்.சி.ஜெயந்தன்

பள்ளிக் காலத் தமிழாசிரியர்களை ஆண் தேவதைகள் என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒரு வரம் தருவதைப் போல் அன்றைய பாடத்துக்கு வெளியே, அவர்களிடம் ஒரு புதிய செய்தியோ கதையோ கவிதையோ இருக்கும்.

அன்று, “உங்களில் எத்தனை பேர் வானத்தில் மிதந்துசெல்லும் மேகங்களில் உருவங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியோடு தொடங்கினார் சுப்பையா வாத்தியார். எனதருகில் அமரும் நண்பன் கோவிந்தராஜ் முந்திக்கொண்டு ‘ஐய்யனாரப்பன் அரிவாளுடன் குதிரையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன்’ என்றான்.

பத்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு சிரிப்பலையில் அதிர்ந்தது. வாத்து, நாய், ஆடு, மாட்டு வண்டி தொடங்கி ஒவ்வொருவரும் மேகங்களில் தங்களது கண்டுபிடிப்புகளைச் சொல்லிக் கொண்டுவந்தார்கள். நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜெயசுதாவின் முறை வந்தபோது ‘நகரும் கடல் அலைகள்’ என்றாள். வகுப்பில் இரண்டு நொடி மௌனம். ‘எல்லோரும் கைதட்டுங்கள்’ என்றார் ஆசிரியர். அந்தப் பாராட்டுதலில் ஜெயசுதாவின் முகம் செங்கொடிபோல் சிவந்துபோனது.

“இதுதான் கற்பனாவாதம். ஆங்கிலத்தில் ரொமாண்டிசிசம் என்று சொல்லுவார்கள். கற்பனாவாதத்தை தூக்கிப்பிடித்த வானம்பாடி புதுக்கவிதை இயக்கம் பற்றி இன்று நாம் பார்ப்போம். உங்களில் எத்தனை பேருக்கு வைரமுத்துவைத் தெரியும்... கையைத் தூக்குங்கள்...” என்றபோது முதல் வரிசையில் அமர்ந்திருந்த நான் உட்பட அந்த அறையிலிருந்த 30 மாணவர்களில் பாதிப் பேர் உற்சாகமாகக் கையைத் தூக்கியிருந்தோம்.

‘உனக்குப் பிடித்த வைரமுத்துவின் பாடல் எது?’ என்று முதலில் என் பக்கம் திரும்பினார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘எரிமலை எப்படிப் பொறுக்கும் - நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்’ என்றேன். ‘அருமை.. அதை இங்கே வந்து பாடிக் காட்டு’ என்றார். எனக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஆசிரியர் அமர்ந்திருக்கும் சிமெண்ட் மேடை மீது ஏறி நின்று உரத்த குரலில் பாடத் தொடங்கினேன்.

‘ரத்தம் இங்கே வேர்வையாகச்

சொட்டிவிட்டது; உயிர் வற்றிவிட்டது

சட்டம் வந்து ஊமைக் கையைக்

கட்டிவிட்டது; கண்ணீர் சுட்டுவிட்டது’ என்று முதல் சரணம் கடந்து...

‘காலம் புரண்டு படுக்கும் - நம்

கண்ணீர் துளியைத் துடைக்கும்’

என்பதுவரை நான் பாடி நிறுத்தியபோது மாணவர்களோடு ஆசிரியரும் இணைந்து கைதட்டினார். கை உயர்த்தாத மாணவர்கள் இப்போது ‘இந்தப் பாடல் எங்களுக்கும் தெரியுமே’ என்றார்கள்.

கீழத்தஞ்சை மாவட்டத்தின் பொதுவுடைமைக் கட்சிப் பொதுக்கூட்டங்களில் அன்று அதிகம் ஒலித்த பாடல் இதுதான். புனல் வடிவ ஒலிபெருக்கியில் கேட்டுக் கேட்டு மொத்தப் பாடலும் மனப்பாடம் ஆனதற்கு இசையும் டி.எம்.எஸ்ஸின் குரலும் மட்டுமே காரணமல்ல; கண்முன்னால் பார்த்த ஏழை விவசாயத் தொழிலாளர்களின் விளிம்புநிலை வாழ்க்கையை வெளிச்சம்போட்டுக் காட்டிய வைரமுத்துவின் வரிகளுக்கே அதில் அதிகப் பங்கிருந்தது.

கவிஞன் எனும் ஞானி

ஒரு மாணவன் சிறப்பாகப் பாடிவிட்டான் என்று நினைத்தாரோ என்னவோ, அந்த வகுப்பில் எஸ்.பி.பியாகக் குரல் மாறினார் எங்கள் தமிழாசிரியர். ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ எனச் சின்னச் சின்ன சங்கதிகளுடன் அவர் பாடப் பாட, அந்தக் கடைசி பாடவேளையில் பக்கத்து வகுப்பில் ‘சந்திரகுப்த மௌரியரின் பொற்காலம்’ குறித்துப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த நிர்மலா டீச்சர், வகுப்பை அப்படியே பாதியில் விட்டுவிட்டு எங்கள் வகுப்பின் ஜன்னல் அருகில் ஓசைப் படாமல் வந்து நின்று சுப்பையா வாத்தியார் பாடுவதை ரசித்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

‘வானம் எனக்கொரு போதிமரம்

நாளும் எனக்கது சேதி தரும்’

என்ற வரிகளுடன் பாடுவதை நிறுத்திய அவர்,

“இயற்கையை ஆழமாக உற்று நோக்குகிறவன் ஞானி மட்டுமல்ல; கவிஞனும்தான். அப்படி நோக்கும்போது, எத்தனை அழகான ஓவியங்களைத் தன் வார்த்தைகளால் வரைந்து காட்டுகிறான் பாருங்கள். நான் உங்களிடம் வானில் நகரும் மேகங்களில் உங்கள் கண்களுக்குத் தெரிந்த உருவங்கள் என்ன என்று கேட்டேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூறினீர்கள். ஆனால் எல்லோரும் வைரமுத்து ஆகிவிட முடியாதல்லவா? ‘வானத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திய கவிஞன், அவள் வெட்கப்பட்டதால் பொழுது மாறுகிறது, அவள் மாலை நேரம் எனும் மற்றோர் உடையை அணிந்து கொள்கிறாள்’ என்று எழுத எத்தனை ரசனை தேவை. ரசனைதான் கற்பனை எனும் குதிரைக்குச் சாரதி” என்றவர், ‘வானமகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்’ என்ற இருவரியை மீண்டும் பாடிக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

பாடல் வேளை

“வானம்பாடி கவிஞர்களைப் பார்த்து மிகை உணர்ச்சியில் திளைத்து, தன்வயம் பொங்க எழுதுகிறவர்கள் என்று கிண்டலாகக் கூறும் கவிஞர்கள் இன்று வந்துவிட்டார்கள். ஆனால், அதற்கும் அப்பால், கவிதையின் அழகுணர்வை, அதில் எழும் காட்சி வழியான கலை உணர்வை எளிய வரிகளில் எழுதி வரும் வைரமுத்து திரைப் பாடல்களுக்கும் புதுக்கவிதைக்குமான இடைவெளியை இல்லாமல் செய்துவிட்ட மகா கவிஞன்” என்று பேசிக்கொண்டே போனார்.

அப்போது, மன்னார்குடி சாந்தி திரையரங்கில் பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ வெளியாகி 25 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. பாட்டுப் போட்டிகளுக்கு எப்போதும் முதல் ஆளாகப் பெயர் கொடுக்கும் காயத்ரி, “சார் ‘பிள்ளை நிலா’ வைரமுத்து பாட்டுதான் பாடட்டுமா” என்றாள். “என்ன கேள்வி.. ஓடி வா” என்றார். பதின்மமும் பருவமும் சந்தித்துக்கொண்ட புள்ளியிலிருந்து கூவும் ஒரு வசந்தகாலக் குயிலைப் போல...

‘பிள்ளை நிலா.. இரண்டும் வெள்ளை நிலா’ என்று காயத்ரி பாட... மொத்த வகுப்பறையும் ‘லல்லல்லா...’ என்று ஒருமித்து சேர்ந்திசைக் குழுவாக மாறி கோரஸ் பாடியபோது பாட்டு வேளையாக இருந்த அந்த இறுதிப் பாட வேளையின் நேரம் முடிந்து, பள்ளி மணி அடித்ததில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் பொன்மாலைப் பொழுது காயத்ரிக்கான கைதட்டலோடு முடிந்து போனது. ஆனால், மூன்று தலைமுறை இயக்குநர்கள், இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து 7,500 பாடல்களைக் கடந்து எழுதிக்கொண்டிருக்கிறார் வைரமுத்து.

வானம்பாடி எனும் வட்டத்தை மீறி எழுந்த அவருடைய திரைப்பாடல்களில் இல்லாத மொழி நயமோ கற்பனையோ நவீனமோ இல்லை என்று கூறும் அளவுக்கு உணர்வுகளின் தூரிகையாய் அழகியலும் அறிவியலும் பின்னிப் பிணைந்து கிடப்பதில் அவற்றை திரைக் கவிதை இலக்கியமாகத் துணிந்து கௌரவம் செய்துவிடலாம்.

“என்னை விடச் சிறப்பாக வைரமுத்து எழுதுகிறார். வசியப்படுத்தும் வார்த்தைகளால் திரையுலகை அவர் ஆட்டிவைக்கிறார். என்னால் அது இயலாது. அவர் இந்தியில் எழுத வந்தால் என்னவாகும் என்ற கற்பனையே எனக்கு அச்சம் தருகிறது” என்று இந்திக் கவிஞர் குல்சார் மனதாரப் பாராட்டியதும், “வைரமுத்துவின் சிந்தனைகளை இந்தியில் மொழிபெயர்ப்பது மிகவும் கடினமான ஒன்று.

அவ்வளவு உயரத்தில் அவர் சிந்திக்கிறார்”என்று இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மானசீகமாகக் கூறியதும் வைரமுத்து மொழிகளைக் கடந்த பாடலாசிரியர் என்பதற்கான சாட்சியங்கள். ‘நிழல்கள்’ படத்தில் ‘பொன்மாலைப் பொழுதாகப்’ புறப்பட்ட வைரமுத்துவின் பாடல் பயணம் 40 ஆண்டுகளைக் கடந்து திசையெட்டும் விரிந்துகொண்டிருக்கிறது.

தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x