Published : 04 Mar 2020 10:21 AM
Last Updated : 04 Mar 2020 10:21 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பூமி எதனால் சுற்றுகிறது?

பூமி எதனால் சுற்றுகிறது, டிங்கு?

- ம. அஜய்குமார், 8-ம் வகுப்பு, திரு இருதய மேல்நிலைப் பள்ளி, காவல் கிணறு.

நல்ல கேள்வி. தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் ஆன திரளை நெபுலா என்று அழைக்கிறார்கள். நெபுலாவிலிருந்துதான் நட்சத்திரங்கள் உருவாகின்றன. இப்படிப்பட்ட ஒரு நெபுலாவிருந்து சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியன் என்ற நட்சத்திரம் உருவானது. மீதிப் பொருட்கள் எல்லாம் சேர்ந்து கோள்களாகவும் நிலாக்களாகவும் குறுங்கோள்களாகவும் வால் நட்சத்திரங்களாகவும் உருவாகின.

சுழற்சி விசையோடு இவை உருவானதால், சூரியனை மையமாக வைத்துச் சுற்றி வருகின்றன. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பூமியும் பிற கோள்களும் சுற்றிவருகின்றன. வெள்ளி கோள் மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிவருகிறது. சூரியன் தன்னுடைய ஈர்ப்பு விசையால் கோள்களை இழுத்துக்கொள்ள முடியும். சூரியனிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால் கோள்களும் அதை எதிர்த்து வேகமாகச் சுழல வேண்டும். அதனால்தான் சூரியனுக்கு அருகில் உள்ள புதன், வெள்ளி கோள்கள் அசுர வேகத்தில் சுற்றிவருகின்றன.

பூமியைப் பொருத்தவரை அதனுடைய வேகத்தை, துணைக்கோளான நிலா தடை செய்கிறது. இதனால்தான் கடலில் ஓதம் ஏற்படுகிறது. பூமி உருவான காலத்தில் நிலா அருகே இருந்தது. அப்போது பூமியின் வேகம் அதிகமாக இருந்ததால், ஒரு நாள் என்பது 6 மணி நேரமாக இருந்தது. நிலா தொலைவுக்குச் செல்லச் செல்ல, பூமியின் வேகமும் குறைந்து வருகிறது. இதனால் இன்று ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக ஆகிவிட்டது. இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் செல்லச் செல்ல பூமியில் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும், அஜய்குமார்.

குவாடன் பேலஸின் அழுகை என்னைத் தூங்கவிடாமல் செய்தது. ஏன் ஒருவரை உருவக் கேலி செய்கிறார்கள், டிங்கு?

- கே. அரவிந்த், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

குவாடன் பேலஸால் நானும் தூக்கத்தை இழந்தேன், அரவிந்த். உருவத்தைக் கேலி செய்வது என்பது மிக மோசமான, அநாகரிகமான விஷயம். இதனால் கேலிக்கு உள்ளாக்கப்படுபவர்கள் மிகுந்த மன வேதனை அடைகிறார்கள். ஆனால், உலகம் முழுவதுமே உருவத்தைக் கேலி செய்வது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. பலரும் உருவக் கேலி மோசமானது என்பதைக்கூட உணராமல், அன்றாடம் சர்வசாதாரணமாகக் கேலி செய்துகொண்டிருப்பார்கள்.

நெட்டை, குட்டை, ஒல்லி, குண்டு, எடுப்பான பல், ஓட்டைப் பல், மொட்டை, கறுப்பு, வெள்ளை போன்றவற்றைச் சொல்லிக் கேலி செய்யாதவர்கள் வெகு குறைவே. சாதாரணமாகக் கேலி செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்துவிடுகிறார்கள். அதையே மீண்டும் மீண்டும் சொல்லி, கேலி செய்யும்போது மனம் உடைந்துவிடுகிறார்கள். குவாடன் பேலஸ் இயற்கைக் குறைபாடுடையச் சிறுவன். அவனையும் இந்தக் கேலி விட்டு வைக்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையானது.

இனிமேல் உருவக் கேலியில் ஈடுபடுபவர்கள், குவாடன் பேலஸை நினைத்தால் போதும். யாருக்கும் அந்தத் தீங்கைச் செய்ய மாட்டார்கள். உருவக் கேலி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, தனக்காகக் கொடுக்கப்பட்ட 3.4 கோடி ரூபாயைத் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கி, எவ்வளவு உயர்ந்துவிட்டான் இந்தக் குட்டிப் பையன் குவாடன் பேலஸ்!

எலும்புகள் ஏன் கடினமாக இருக்கின்றன, டிங்கு?

- மு. பவித்ரா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

உடலுக்கு உருவம் கொடுப்பவை எலும்புகள்தான். உறுதியான எலும்புகளால்தான் மென்மையான மூளை, இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. நம் உடல் உறுதியாக நிற்க முடிகிறது. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர முடிகிறது. சிவப்பணுக்கள், வெள்ளையணுக்களை உருவாக்குவதும் எலும்புகள்தாம்.

உடலுக்குத் தேவையான கனிமங்களும் கால்சியம் போன்ற ரசாயனப் பொருட்களும் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகின்றன. எலும்புகள் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் எடை குறைந்ததாகவும் கடினத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன, பவித்ரா.

பழுத்த மஞ்சள் இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறுமா, டிங்கு?

- நு. நுஸைபா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி,சமயபுரம், திருச்சி.

செடிக்குச் சூரிய வெளிச்சமும் அளவான நீரும் கிடைக்காததால்தான் பச்சை இலை, மஞ்சளாக மாறுகிறது. சூரிய ஒளியும் அளவான நீரும் கிடைத்தால்தான் செடியில் ஒளிச்சேர்க்கை நடைபெற்று, உணவைச் சேமிக்க முடியும். இலைகளில் பச்சையமும் இருக்கும், நுஸைபா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x