Published : 24 Nov 2019 10:08 AM
Last Updated : 24 Nov 2019 10:08 AM

இனி எல்லாம் நலமே 33: அதிக உதிரப்போக்கைத் தீர்ப்பது எளிது

அமுதா ஹரி

காரணம் இல்லாமல் சிலருக்கு அசாதாரண அளவில் உதிரப்போக்கு ஏற்படும். இதை dysfunctional uterus bleeding என்கிறோம். இது எந்த வயதில், எதனால், எப்படி நடக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் இதனுடைய சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

இது இனப்பெருக்க காலகட்டத்தில் நிகழக்கூடிய சாதாரணமான அறிகுறிதான். கருப்பையில் நார்திசுக்கட்டி இருக்கிறதா, விழுதுகள் என்று சொல்லக்கூடிய polyps இருக்கிறதா, தைராய்டு பிரச்சினை இருக்கிறதா, கருப்பையின் வாயில் தொற்று அல்லது polyps இருக்கிறதா, ஆரம்ப நிலைப் புற்றுநோய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

எது அசாதாரண உதிரப்போக்கு?

மேற்குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமலேயே ஹார்மோன் சுரப்பிகளின் மாறுபாட்டாலும் பெண் களுக்கு அசாதாரண உதிரப்போக்கு வருவதும் இயல்புதான். இது வளரிளம் பருவத்தில் வரலாம். மெனோபாஸ் என்று சொல்லக்கூடிய மாதவிடாய் உதிரப்போக்கு நிற்பதற்கான காலகட்டத்துக்கு முன்னதாக வரலாம். வளரிளம் பருவத்தில் 20 சதவீதம் வருகிறது என்றால் மாதவிடாய் நிற்பதற்கு முன்னதாக 40-45 சதவீதம் வரலாம்.

வளரிளம் பருவத்தில் இது தைராய்டு பிரச்சினையாலோ சினைப்பையை ஒட்டிய பிரச்சினையாலோ ஏற்படலாம். பொதுவாக, மெனோபாஸ் பருவத்துக்கு முன்னதாகப் பலருக்கு அதிகப்படியான உதிரப்போக்கு வரலாம். சாதாரணமாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு வரக்கூடிய உதிரப்போக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவால் ஏழு, எட்டு நாட்கள்வரை நீளக்கூடும்.

இளம் பெண்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு வருவதற்குக் காரணம் கருமுட்டை வெளிப்பாடு (ovulation) சரியாக இல்லாமல் இருப்பதாகவும் இருக்கலாம். அதாவது கருமுட்டை வெளி வராததால் வரக்கூடிய உதிரப்போக்கு (unovulatory bleed). எது சாதாரண உதிரப்போக்கு, எது அசாதாரண போக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 21 நாட்களுக்குள் மாதாந்திர உதிரச்சுற்று வந்தாலும், உதிரப்போக்கு ஏழு நாட்களுக்கு மேல் இருந்தாலும், 50 மி.லி. அளவைத் தாண்டி கட்டி கட்டியாக உதிரப்போக்கு இருந்தாலும் அது அசாதாரண உதிரப்போக்கு.

தீர்வும் சிகிச்சையும்

இதற்கான தீர்வும் சிகிச்சை யும் வயதுக்கு ஏற்றாற்போல் மாறு படும். வளரிளம் பருவத்தில் ஹார்மோன்கள் சரியாகச் சுரக்கிற காலம்வரை சிலருக்கு மூன்றிலிருந்து ஆறு மாத கால அளவில்கூட மாதாந்திர உதிரப்போக்கு அசாதாரணமாக இருக்கலாம். ஆறு மாதத்துக்குள் இது ஓரளவு சரியாகி விடும்.

சிலருக்குக் கருமுட்டை சரியாக வெளிப்படாததாலும் உதிரப்போக்கு அதிகப்படியாக இருக்கலாம். கரு வெளிப்படுதலுக்கான போக்கு அப்போதுதான் சரியாக ஆக ஆரம்பிக்கிறது. இதுவும் சரியாகி விடும். இந்த உதிரப் போக்கு அசாதாரணமானது அல்ல. காரணம், இது தானாகச் சரியாகி விடும்.

திருமணம் ஆன பிறகும் ஒரு பெண்ணுக்கு இப்படி அசாதாரண உதிரப்போக்கு இருந்தால் கண்டிப்பாக அது என்ன என்று பார்க்க வேண்டும். கருப்பையில் ஏதாவது பிரச்சினை இருந்து அதனால் உதிரப்போக்கு இருந்தால் அதை உதிரப்போக்கு ஒழுங்கின்மை என்று சொல்ல முடியும்.

ஹார்மோனின் சீரற்ற தன்மையும் உதிரப்போக்கு ஒழுங்கின்மைக்குக் காரணமாக இருக்கலாம். ஹார்மோனின் சீரற்ற தன்மையின் அறிகுறிகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

* உடல் கொஞ்சம் பருமனாகியிருக்கும்.
* எரிச்சல், படபடப்பு இருக்கும்.
மன ஊசலாட்டங்கள் இருக்கும்.
* பிறப்புறுப்பில் பிசுபிசுப்பு அற்று உலர்ந்த தன்மை இருக்கும்.
* சர்க்கரை வியாதி இருக்கலாம்.
* குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கலாம்.
* மலச்சிக்கலோ பேதியோ இருக்கலாம்
* மார்பகம் வீங்கிப்போகலாம்.
* அஜீரணக் கோளாறு இருக்கலாம்.
* திடீரென்று பரு வரலாம்.

இந்த அறிகுறிகள் ஏன் இப்படித் தெளிவற்று எல்லா விதமாகவும் இருக்கின்றன என்றால் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டீரோன், தைராய்டு போன்ற அனைத்து ஹார்மோன்களும் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்துப் பாகங்களிலும் பிரச்சினையை உருவாக்கும். மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் அனைத்தும் இருக்கலாம் அல்லது ஒன்றிரண்டு மட்டும் இருக்கலாம்.

காரணத்தைக் கண்டறிதல் அவசியம்

திருமணமாகி ஏற்கெனவே குழந்தையுள்ள ஒரு பெண்ணுக்குத் திடீரென உதிரப்போக்கு வருகிறது என்றால், அந்த உதிரப்போக்கு எதனால் வருகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். தேவையான பரிசோதனைகளை முதலில் செய்துகொள்ள வேண்டும். காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

* அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும்போது முதலில் ரத்தத்தை உறையச் செய்யக்கூடிய மருந்தைக் கொடுப்பார்கள். இது ஹார்மோன் கிடையாது. இதைத் தான் மருத்துவர்கள் முதலில் கொடுப்பார்கள்.

* ஹார்மோன்கள் பிரச்சினை என்றால் ஹார்மோன் மாற்று சிகிச்சையை மேற்கொண்டாலே சரியாகிவிடும். புரொஜஸ்டீரோன் அளவை இந்த மருந்துகள் சரி செய்கின்றன.

* இந்த புரொஜஸ்டீரோன் மருந்து சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதற்கான அடை யாளம் என்னவென்றால், இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும்வரை உதிரப்போக்கு வராது. நிறுத்தியவுடன் உதிரப்போக்கு வரும்.
சிலருக்கு மாத்திரை சாப்பிடும்போது, உதிரப்போக்கு குறையவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். நாம் கொடுக்கும் மருந்தின் அளவு போதாமல் இருக்கலாம். அதுதான் காரணம் என்றால் மருத்துவரிடம் சென்று மருந்தின் அளவை அதிகரித்துக்கொள்ளலாம்.

கட்டுப்படுத்தும் காப்பர்-டி

சில நேரம் இந்தப் பிரச்சினைக்கு மருத்து வர்கள் கருத்தடை மாத்திரை களைக்கூடத் தருவார்கள். எனக்குக் கருத்தடை மாத்திரை தேவையில்லையே; எனக்கு ஏன் இதைக் கொடுக்கிறார்கள் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், இந்தக் கருத் தடை மாத்திரைகள் மாத விடாயைச் சீரமைப்ப தற்கும் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

அதிகப்படியான உதிரப் போக்கு இருக்கும் நேரத்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவசியம். உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளைச் செய் வது அவசியம். இப்படியெல்லாம் செய்தாலே அதிகப்படியான உதிரப்போக்கு வராது.

இதையும் தாண்டி உதிரப்போக்கு குறையவில்லை என்றால் புரொஜஸ்டீரோன் ஹார்மோன்கள் கொண்ட காப்பர்-டியைப் பொருத்துவோம். இது கருத்தடை முறை காப்பர்-டி இல்லை. உதிரப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்கானது. இதை மூன்று ஆண்டுகளுக்கு அப்படியே வைத்திருக்கலாம். இதைப் பொருத்தும்போது முதலில் சீரற்று உதிரப்போக்கு வரும்.

பிறகு இதைப் போட்டிருக்கும்வரை உதிரப்போக்கு வராது. ஏன் இந்த முறையைக் கையாள்கிறோம் என்றால், அதிகப்படியான உதிரப்போக்கால் சிலருக்குக் கருப்பையை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ஹார்மோன் சம்பந்தப்படாத கட்டி, polyp, தைராய்டு போன்ற பிரச்சினைகளால் உதிரப்போக்கு என்றால் அவற்றை வேறு முறையில் சரிசெய்யலாம்.

மேற்குறிப்பிட்ட எந்த சிகிச்சைக்கும் உதிரப்போக்கு கட்டுப்படவில்லை என்றால் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியா என்று பார்க்க வேண்டும். இந்த அதிகப்படியான உதிரப்போக்கை மெனோபாஸ் நிலைக்கு முன்னதாக வரக்கூடிய பிரச்சினையாக நினைத்துப் பலர் அலட்சியப்படுத்திவிட்டு அதிக ரத்தசோகையுடன் பிரச்சினை முற்றிய நிலையில் வருவார்கள். அதனால், ஓரிரண்டு மாதங்களுக்கு மேலாக அதிகப்படியான உதிரப்போக்கோ கட்டி கட்டியான உதிரப்போக்கோ வந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x