Published : 10 Nov 2019 09:56 AM
Last Updated : 10 Nov 2019 09:56 AM

வாழ்வு இனிது: புத்தருடன் ஒரு நாள்

பயணங்களாலான வாழ்க்கை உயிர்ப்புள்ளது. ஒரேயொரு பயணம் பல்லாண்டு கால வாழ்க்கைக்கு ஈடான அனு பவத்தை அளித்துவிடக்கூடும். அது ஒரு மழைக்காலம். பிஹாருக்குச் சென்றபோதெல்லாம், புத்த கயாவுக்குச் சென்றுவிட வேண்டுமென நான் விரும்பியது உண்டு. பலமுறை நிறைவேறாத அந்த விருப்பம், ஒரு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவேறியது. மழைகொட்டித் தீர்த்த பருவம் அது. பிஹாரைப் பொறுத்தவரை மழையோ வெயிலோ குளிரோ மிகுந்த உக்கிரமாக, தாங்க முடியாத அளவில்தான் இருக்கும். மழையைக் கிழித்தபடி எங்கள் கார் விரைந்தது. போஜ்பூரி மொழியில், ஏதோவோர் இனிய பாடல் காருக்குள் கசிந்துகொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் பசுமை பூத்துக் குலுங்கியது. எப்போதும் அழுக்கடைந்திருக்கும் பிஹார், அன்று சொர்க்கபுரியைப் போல் தோன்றியது. வீட்டின் மதில்களில் ஒட்டப்பட்டிருந்த வரட்டிகள், மழைநீரில் கரைந்து வழிவதுகூட அன்றைக்கு அழகாகத் தெரிந்தது.

பிஹாரில் ஒரு வெளிநாடு

புத்த கயாவை நெருங்க நெருங்க மழை எட்டி எட்டிச் சென்றது. புத்த கயாவில் மழையின் சுவடே இல்லை. அங்கே இளம்வெயில் இதமாகப் படர்ந்திருந்தது. புத்த கயாவின் நேர்த்தியாலும் கட்டமைப்பாலும் பிஹாருக்கு மட்டுமல்லாமல்; இந்தியாவுக்கும் அதுவோர் அந்நியப்பட்ட பகுதியாகத் தோன்றியது. சீனர்களும் திபெத்தியர்களும் சாலையெங்கும் குவிந்திருந்தனர். அங்கிருந்த சாலைகள், பிஹாரின் இயல்புக்கு மாறாக சிக்னல்களுடன் இருந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவலர்களும் இருந்தனர்! முக்கியமாகச் சாலைகள் அகலமாகவும் தூய்மையாகவும் வழுவழுவென்றும் இருந்தன. சுருங்கச் சொன்னால், பிஹாருக்குள்ளேயே வெளிநாட்டிலிருக்கும் உணர்வை புத்த கயா ஏற்படுத்தியது.

ஊரின் அமைப்பு மட்டுமல்லாமல், மனிதர்களின் தோற்றமும் பிஹாருக்கு அந்நியப்பட்டதாக இருந்தது. “பூ வாங்கிட்டு போ அண்ணா” என்ற தமிழ்க் குரல் கேட்டு ஆச்சரியத்துடன் திரும்பினேன். அந்தப் பெண்ணுக்குத் தமிழ்நாட்டின் இயல்பு துளியுமில்லை. சுற்றுலாப் பயணிகளிடம் பேசியே பல மொழிகளைக் கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார். சுற்றுலாத் தலங்களில் வியாபாரம் செய்பவர்களுக்கே கைவசப்படும் அம்சம் அது. அழகான சிறுமி பழங்களை விற்றபடியே, தனது வயதுக்கு ஏற்ற குறும்புடன் அங்கே வரும் குழந்தைகளிடம் விளையாடிக்கொண்டிருந்தாள். ஆளுயர பலூனை விற்றுக்கொண்டிருந்த பலூன் வியாபாரியைப் பார்த்த அவளுடைய பார்வையில் குடிகொண்டிருந்த ஏக்கம், ஒரு சிறுகதைக்குரியது.

சிரிப்பைத் தொலைத்த முகங்கள்

புத்த கயா கோயில், ஊர் பேருந்து நிலையத்தின் அருகிலேயே இருந்தது. சாலையிலிருந்து கோயிலுக்கு நீளும் பாதையெங்கும் வண்ணத் தோரணங்கள் அணிவகுத்துத் தொங்கின. மக்கள் தலைகளால் நீண்ட அந்தப் பாதையின் இருபுறங்களிலும் யாத்ரீகர்கள் அமர்வதற்கு வசதியாகத் திண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தத் திண்டுகளில் பக்தியில் மூழ்கியபடி ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்தனர். வயதானவர்கள் மட்டுமல்லாமல்; இளைஞர்களும் கைகளில் மலர்க் கூடைகளை ஏந்தியபடி வரிசையில் சென்று கொண்டிருந்தனர். முதியவர்கள் சிலர், கைகளில் வைத்திருக்கும் ஜெபமாலையை உருட்டியபடி மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தனர். பொதுவாக, அங்கே இருந்த அனைவரும் ஒருவிதத் தீவிரச் சிந்தனைக்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். யாருடைய முகத்திலும் பளிச்சென்ற சிரிப்பைப் பார்க்க முடியவில்லை.

தியானத்துக்கேற்ற மகா போதி

கோயிலைவிட, கோயிலின் வலது புறத்திலிருந்த போதி மரத்தைச் சுற்றித்தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பௌத்த நம்பிக்கையின்படி கலியுகத்தின் முடிவில், இந்த அண்டம் பிரளயத்தால் அழியும்போது, இந்த போதி மரம்தான் கடைசியாக அழியும். பின்னர் புதிய உலகம் படைக்கப்படும்போது, இந்த மரம்தான் முதலில் தோன்றும் என்றும் கருதப்படுகிறது.

அந்த மரத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பக்தர்கள், தம்மைத் தொலைத்து ஞானத்தை அடைய முயல்வது கண்கூடாகத் தெரிந்தது. மரத்தைச் சுற்றியிருந்த சுவரில் மேலிருந்து கீழாகக் கயிறுகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. தங்களின் வேண்டுதல் களைக் காகிதத்திலோ துணியிலோ எழுதி, கயிற்றில் கட்டிவிடுவது அங்கு வழக்கம். அந்தக் கயிற்றில் தொங்கிய வேண்டுதல்கள், காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. ‘ஆசையைத் துற, ஆசையே துன்பத்துக்கு அடிப்படை’ என்ற புத்தரின் போதனையும், அந்தக் காற்றில் ஆடுவதுபோல் தோன்றியது.

புத்தர் ஞானம் பெற்றுச் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. 2500 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த போதி மரம் இன்றும் கம்பீரமாகவே உள்ளது. ஞானத்தை அடையும் முயற்சியில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இன்றும் இங்கே கூடுகின்றனர். இருந்தாலும், துறவிகளுக்கு எல்லாம் தலைவனாக, ஞானத்தின் அரசனாக புத்தர் மட்டுமே இன்றும் ஒளிர்கிறார்.

படங்கள்: முகமது ஹுசைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x