Published : 09 Oct 2019 12:40 PM
Last Updated : 09 Oct 2019 12:40 PM

அறிவியல் மேஜிக்: கோப்பையைக் கவ்வும் பலூன்!

பலூன் மீது காகிதக் கோப்பையைப் பசையின்றி உங்களால் ஒட்ட வைக்க முடியுமா? ஒரு சோதனை செய்து பார்த்துவிடுவோமா?

என்னென்ன தேவை?

பலூன்கள்
காகிதக் கோப்பை (பேப்பர் கப்)
நூல்

எப்படிச் செய்வது?

* ஒரு பலூனை எடுத்து ஊதி, நூலால் கட்டிக்கொள்ளுங்கள்.
* காற்று ஊதிய பலூன் மீது காகிதக் கோப்பையை அழுத்தி வைத்து, கையை எடுத்துவிடுங்கள்.
* காகிதக் கோப்பை என்ன ஆனது? கீழே விழுந்துவிட்டதா?
* இன்னொரு பலூனையும் காகிதக் கோப்பையையும் எடுத்துக்கொள்ளுங்கள். பலூனை ஊதும் முன்பு, காகிதக் கோப்பைக்குள் பலூன் இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்.
* அப்படியே பலூனை ஊதுங்கள். சற்று ஊதிய பிறகு காகிதக் கோப்பையிலிருந்து கையை எடுத்துவிடுங்கள்.
* பிறகு பலூனை இன்னும் கொஞ்சம் ஊதி, பெரிதாக்குங்கள். இப்போது நடப்பதைக் கவனியுங்கள்.
* பலூனோடு சேர்ந்து காகிதக் கோப்பை ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கோப்பை கீழே விழாமல் இருப்பதையும் பார்க்கலாம்.

என்ன காரணம்?

தொடக்கத்தில் காகிதக் கோப்பைக்குள் பலூனை வைத்து ஊதுகிறபோது கோப்பைக்குள் உள்ள காற்றின் பருமன் சற்று குறைவாக இருக்கும். பலூனைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊதும்போது கோப்பைக்குள் காற்றின் பருமன் கூடுகிறது. இந்த இடத்தில்தான் ராபர்ட் பாயில் விதி பயன்படுகிறது. அதாவது, வெப்பநிலை மாறாமல் இருக்கிறபோது குறிப்பிட்ட நிறை உள்ள வாயுவின் பருமனும் அழுத்தமும் ஒன்றுக்கொன்று எதிர்விகிதத்தில் இருக்கும் என்பதே பாயில் விதி.

இந்த விதியின் அடிப்படையில் கோப்பைக்குள் காற்றின் பருமன் அதிகரிக்கிறபோது, கோப்பைக்குள்ளே அழுத்தம் குறையும். அப்போது வெளிக்காற்றின் அழுத்தமானது, கோப்பையின் உள்ளே உள்ள காற்றழுத்தத்தைவிட அழுத்தமாக இருக்கும் என்பதால், வெளிக்காற்று கோப்பையின் மீது விiசையைச் செலுத்துகிறது. அதன் காரணமாகக் கோப்பையைக் கீழே விழாமல் பிடித்துக்கொள்கிறது. காகிதக் கோப்பை பலூன் மீது ஒட்டிக்கொள்ள காற்றழுத்தமும் பாயில் விதியுமே காரணம்.

- மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x