Published : 14 Aug 2017 11:14 am

Updated : 14 Aug 2017 11:14 am

 

Published : 14 Aug 2017 11:14 AM
Last Updated : 14 Aug 2017 11:14 AM

சபாஷ் சாணக்கியா: திருப்திப் படாதீங்க..!

தி

ருமணமாகி ஆறே மாதங்கள் ஆகியிருந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒன்றாகச் சாமியார் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தனர். இருவரையும் ஆசீர்வதித்தவர், வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.


`ஐயா எங்களிடையே ஒற்றுமை இல்லை. எதிர்பார்த்த மகிழ்ச்சி இல்லை. ஏமாற்றம் தான் மிச்சம்.நாங்கள் விவாகரத்து வாங்கிப் பிரிய உள்ளோம்.ஆசி வழங்குங்கள்' என்றார்கள். திருமணங்களில் ஆசி வழங்கிப் பழகிய துறவிக்கு இது வியப்பைக் கொடுத்தது. இருப்பினும் கணவனிடம் ஒரு வெள்ளைத் தாளைக் கொடுத்து, `இதில் நீங்கள் உங்கள் மனைவியிடம் உங்களுக்குப் பிடிக்காதது எல்லாவற்றையும் பட்டியலிட்டுக் கொண்டு வாருங்கள் ' என்றார். பின்னர் மனைவியிடமும் கணவனிடம் பிடிக்காததை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டு வரச் சொன்னார்.

மறுநாள் அதை வாங்கி வைத்துக் கொண்டவர், கணவரிடம் தனக்கு மனைவியிடம் பிடித்த குணங்களையும், அதே போல் மனைவியைக் கூப்பிட்டு அவருக்குத் தன் கணவரிடம் பிடித்த குணங்களையும் எழுதிக் கொடுக்கச் சொன்னார்!

மூன்றாம் நாள் ``நல்ல தீர்ப்பு’’ கிடைக்குமென சாமியாரிடம் சென்ற தம்பதியரை அமரச் செய்தார் அவர். பின்னர் தன்னிடம் அவர்கள் கொடுத்த தாள்களை எடுத்தவர், முதலில் கணவனைப் பற்றி மனைவி எழுதிய குற்றங்களைப் படித்தார். அதில் கணவர் தன்னுடன் உட்கார்ந்து பேசுவதில்லை, எப்போது பார்த்தாலும் கைபேசியுடன் இருக்கிறார் என்பது போன்ற 5 குறைகள் இருந்தன!

மனைவியைப் பற்றி கணவன் எழுதிய குற்றங்களில் மற்ற பெண்களிடம் தேவையில்லாமல் பல்லை இளித்துப் பேசுவதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறாள் போன்ற 4 குறைகள் சொல்லப் பட்டிருந்தன!

பின்னர் அடுத்த இரு தாள்களை எடுத்தார் அந்த வெண்தாடிக்காரர். அது இருவரும் எழுதியிருந்த நற்குணங்களின் பட்டியல்.கணவன் தன் மனைவி தன்மேல் அதீதப் பிரியம் வைத்திருப்பதாகவும், விடாமல் பராமரித்துக் கொள்வதாகவும்,இத்யாதி இத்யாதி 12 எழுதி இருந்தார்! மனைவியும் தன் கணவனின் 10 நல்ல குணங்களைக் குறிப்பிட்டிருந்தார்! சாமியார் படிக்கப் படிக்க இருவரும் அழுது விட்டனர்!

பின்னர் என்ன, பரஸ்பரம் இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டு ஏன் வீண் விவாதம் என , சாமியாரிடம் அதிகம் பேசாமல் வேகமாக வீடு திரும்பினர்! `ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி , உணவு ,நியாயமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி,தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் ' என்கிறார் சாணக்கியர்.

உண்மை தானேங்க.சிலவற்றை மாற்ற முடியாது.மேலும் மாற்றினாலும் நிம்மதி கூடுமா என்று சொல்ல முடியாது. மணவாழ்க்கை அதில் முக்கியமானது. திருப்தி என்பது எதிர்பார்ப்பைப் பொறுத்தது தானே?அதிகமாக எதிர் பார்த்தால்?மேலும் அந்தப் பக்கத்தில் உங்களைப் பற்றிய எதிர் பார்ப்புகளை நீங்களும் பூர்த்தி செய்ய வேண்டுமில்லையா? பணியிடத்திலும் இதே கதைதானே? பிடிக்கவில்லை என்பதற்காக எத்தனை முறை மாறலாம்? அதுவும் எளிதா என்ன?புதிய வேலை முன்னதை விட சிறப்பாக அமைந்து விடுமென என்ன உத்திரவாதம்? இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி தேவையின்றி அலையலாமா?

இந்த அணுகுமுறை வருமானத்தில் மிக முக்கியம்.முன்னேற முயல வேண்டியதுதான். அதற்காக எதிலும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது, திருப்தியில்லை என்றால் எப்படி? மன உளைச்சல்தான் மிஞ்சும்! பண விஷயத்தில் உன்னை விடக் குறைந்த நிலையில் உள்ளவரைப்பார்த்து மகிழ்ச்சி கொள், உடல் ஆரோக்கியத்தில் உன் சம வயதினரைப் பார்த்துத் திருத்திக்கொள், படிப்பில், அறிவில் உன்னை விட உயர்ந்தோரைப் பார்த்து அதிகரித்துக் கொள் என்பார்கள்!

எனது நண்பர் ஒருவர் பணி நிறைவு பெற்ற பின் 61 வயதில் வேதங்களின் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்து உள்ளார்! கற்றுக் கொள்வதற்கு வயதோ எல்லையோ ஏது? ஆர்வம் போதுமே! இந்தக் கற்றல் என்பதற்கு முடிவு ஏதுங்க?

நாம் திருப்திப் படக் கூடாத இன்னுமொரு விஷயம் தர்மம் செய்வது. படிப்பு எப்படி திகட்டாதோ, அதே போல தர்மமும் செய்யச்செய்ய மேன்மேலும் மகிழ்ச்சியையே தருமல்லவா?

அண்ணே , சாணக்கியர் சொல்வது போல, நமக்கு அமைந்து விட்ட மண வாழ்க்கையில், வேலையில் , வருமானத்தில் திருப்தி அடைவோம். ஆனால் நம்மிடம் தற்பொழுதுள்ள கல்வியறிவில் , கொடையளவில் திருப்தி அடையாதிருப்போம்!

-


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x