Published : 28 Jan 2017 08:32 AM
Last Updated : 28 Jan 2017 08:32 AM

பேலியோ டயட்: ஆபத்தின் திறவுகோலா?

>கடந்த வாரத் தொடர்ச்சி...

கொழுப்பு, சக்தியாக மாறும்போது, ரத்தத்தில் கீட்டோன் கலக்கிறது. இது அமிலத் தன்மை வாய்ந்தது. பேலியோ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தங்கள் ரத்தத்தில் கீட்டோன் அளவைத் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும். நிறைய தண்ணீர் பருக வேண்டும். கீட்டோன்களைச் சிறுநீர் வழியாகச் சிறுநீரகம் வெளியேற்றிவிடும்.

பேலியோ உணவு முறையைப் பின்பற்றும் போது, திடீரென கார்போஹைட்ரேட்டை அதிகமாக உட்கொள்வதற்கு முன் எச்சரிக்கை தேவை. நீங்கள் கீட்டோஸிசில் இருக்கிறீர்கள். உறவுகளின் நெருக்கடி, இல்லை கொஞ்சம் ஆசைப்பட்டு கார்போஹைட்ரேட்டை அதிகமாக உட்கொண்டுவிடுகிறீர்கள். ஒரே நேரத்தில் சர்க்கரையும் கீட்டோனும் ரத்தத்தில் அதிகமாக இருந்தால், கீட்டோ அசிட்டோஸிஸ் நிலை தோன்றும். அதாவது கீட்டோ காய்ச்சல். முதலில் உடல் சர்க்கரையை வெளியேற்றும். ஆனால் அதிக சர்க்கரை, அதிக கீட்டோன் என இரண்டுமே ஆபத்தானதுதான். எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் பேலியோ உணவு முறையைப் பழக வேண்டும்.

இன்சுலின் குறைவதால் உடலில் உப்பு குறையும். அதனால் உடலில் திரவங்கள் தங்காது. உடலில் போதிய திரவம் இல்லை என்றால் கீட்டோன்கள் மூலம் அமிலத்தன்மை கூடிவிடும். அவை உடலில் தேங்கிவிடும். அதனால் பேலியோவைப் பின்பற்றும்போது, உப்பை அதிகமாக உட்கொள்ள வேண்டும். நிறைய தன்ணீர் தாகம் எடுத்தால், உடலில் கீட்டோன் அதிகமாகி உள்ளது அல்லது உப்பு குறைந்துள்ளது என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவர் மேற்பார்வை

பேலியோ உணவு முறையை மருத்துவர் கண்காணிப்பில் பின்பற்றுவதுதான் சிறந்தது. தன்னிச்சையான முடிவுகள் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இந்த உணவு முறை அதிகமாகக் கவனத்தைக் கோரக்கூடியது. உடல் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவர வேண்டும். எடை குறைவதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கக் கூடாது. உங்கள் உடலின் அளவும் குறைகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். உங்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்துக்கொள்ள வேண்டும். மாதா மாதம் மருத்துவர் பரிந்துரைக்கக்கூடிய ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்க்கரை குறைவது, கோபத்தை வரவழைக்கும். கீட்டோன் அதிகரிப்பு, குழப்பத் தைத் தரும். இதில் எதை உணர்ந்தாலும் உடனடியாக உங்கள் உடலைக் கவனிக்க வேண்டும். பேலியோ உணவு முறையைப் பற்றி அறிந்திராத மருத்துவர்கள், இந்த உணவு முறையைப் பெரும்பாலும் எதிர்ப்பார்கள். அவர்களுக்குப் புரியவைப்பது உங்களின் திறமை. ஆனால், உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த ஒரு மருத்துவரின் உதவியுடனே, இந்த உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.

கார்போஹைட்ரேட் விஷமா, உணவு அரசியலா?

‘பேலியோ அடிப்படைவாதிகள்’ வலிந்து பிரசாரம் செய்யும் மற்றுமொரு தவறான தகவல் ‘கார்போஹைட்ரேட் ஒரு விஷம்’ எனப் பரப்புவது. இதைப் புரிந்துகொள்ள உணவு அரசியலை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சந்தைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. உணவுச் சந்தையை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என உணவுப் பொருட்களை லாபமாகப் பார்க்க ஆரம்பித்ததன் விளைவுதான் இது. இன்றைய பல நோய்களுக்கும் கொழுப்பின் மீதான வெறுப்பு பரவலானதற்கும் காரணம் இந்தச் சந்தையே.

கொழுப்பு நிறைந்த உணவை நீண்ட நாள் கெடாமல் பாதுகாப்பது சிரமம், நிறைய செலவாகும். ஆனால், கார்போஹைட்ரேட் உணவுகளைக் கெடாமல் பாதுகாப்பது எளிது, செலவு குறைவு. அதனால் குறைந்த முதலீடு, அதிக லாபம் கிடைக்கும் என்பதால் கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுப் பொருட்களை முன்னிலைப்படுத்தின பெருநிறுவனங்கள். அதற்கு ஆதர வாகக் கொழுப்பைக் குற்றவாளி ஆக்கிக் கூண்டில் ஏற்றினார்கள்.

திட்டமிட்ட அரசியல்

மரபான நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட் ரேட்டைத்தான் மக்கள் காலம்காலமாக உண்டுவந்தனர். விதைச் சந்தையைப் பிடிக்கவும் உணவுச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், மரபான உணவுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. இனிப்புகளில் சர்க்கரைக்குப் பதில் ‘கார்ன் சிரப்’ சேர்க்கத் தொடங்கினார்கள். இது சர்க்கரையைவிட அதிக சுவையைத் தரக்கூடியது, குறைந்த செலவில் கிடைக்கும், அதிக லாபமும் கிடைக்கும்.

மரபான நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் (சிறு தானியங்கள், பனைவெல்லம்) போன்றவை செரித்தவுடன் ரத்தத்தில் மெதுவாகவே சர்க்கரையை வெளியிடும். இவை புரதச் சத்தும் மிகுந்தவை. அதேநேரம் பெருநிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய அரிசி வகை, சர்க்கரை, கரும்பு வெல்லம் ஆகிய அனைத்தும் நார்ச்சத்து நீக்கப்பட்டவை, புரதம் நீக்கப்பட்டவை. அதிக விளைச்சல், நீண்ட நாள் கெடமால் இருப்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. இவை ரத்தத்தில் உடனே சர்க்கரையாக மாறும். அடுத்ததாக கார்ன் சிரப் சேர்க்கப்பட்ட சாக்லெட், துரித உணவுகள், குளிர் பானங்கள் போன்றவை வருகின்றன. இவை மிக வேகமாகவும் அதிகமாகவும் ரத்தத்தில் சர்க்கரையை வெளியிடக்கூடியவை.

எது விஷம்?

நாம் இன்று உண்ணும் அரிசியை எடுத்துக் கொள்வோம். புரதம் நீக்கப்பட்ட, பாலிஷ் போடப்பட்ட வெண்மையான அரிசி. இது பூச்சி(க்கு) கூடப் பிடிக்காது. ஒரு நூறு ஆண்டு களில் நம் உணவில் நடந்த மாற்றம் இது பெருநிறுவனங்களின் லாபத்துக்காகக் கொழுப்பைத் தவிர்த்து, கார்போஹைட்ரேட்டை அதிகமாக உண்டு, நோய்களைப் பெற்று, பின்பு அவர்களிடமே மாத்திரைகளை வாங்கி, அதைத் தின்று ஒரு பெருநரகச் சுழலில் சிக்கிக்கொண்டுள்ளோம்.

மீண்டும் பேலியோவின் மூடநம்பிக்கை களுக்குத் திரும்புவோம். கார்போஹைட்ரேட் விஷமா? இல்லை, நிச்சயம் இல்லை. நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் உணவு நமக்குத் தேவை. அதேநேரம் நார்ச்சத்து மிகுதியான உணவை அளவாக உட்கொள்ளும்போது, அது பேலியோவைத் தொந்தரவு செய்வதில்லை. உங்கள் மூளை வேலை செய்ய குளுகோஸ் தேவை. அது கார்போஹைட்ரேட்டிலிருந்துதான் கிடைக்கும். அதனால்தான் பேலியோவில் ஐந்து சதவீதமாவது கார்போஹைட்ரேட் சேர்த்துக்கொள்வது அவசியம்.

சிறுதானியங்கள் எதிரியா?

பேலியோ நண்பர்கள் மற்றொரு தவறான தகவலையும் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். அது சிறுதானியங்கள் அவசியமற்றவை என்பது. இதற்கு ஆதரவாக ஆதிகால மனிதர்கள், இறைச்சியை மட்டுமே உண்டார்கள் என்கிறார்கள். 10 லட்சம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஆதிகால மனிதர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் விவசாயம் பழகினார்கள் என்கிறார்கள். அவர்கள் சில விஷயங்களை வசதியாக மறக்கிறார்கள்.

நாம் மேலே பார்த்ததுபோல் பேலியோ உணவு முறையைப் பின்பற்ற ஆரம்பித்த முதல் கட்டத்தில் ஒரு நாளைக்கு 30 கிராம்வரை கார்போஹைட்ரேட் உட்கொள்ள வேண்டும். மெல்ல உடற்பயிற்சியைத் தொடங்கியவுடன் எடை குறைவதற்கு ஏற்றாற்போல் அல்லது உடலின் சர்க்கரை அளவு குறைவதைப் பொறுத்து கார்போஹைட்ரேட்டை 98 கிராம்வரை அதிகரிக்கலாம். நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட்டைப் பயமில்லாமல் உட்கொள்ளலாம். மெல்ல நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட்டுக்கு மாறிவிடலாம்.

ஆகவே, முதல் கட்டம் தவிர, அதாவது பேலியோ முறையைப் பின்பற்றத் தொடங்கி சில மாதங்கள் கழித்து, நீங்கள் தாராளமாகச் சிறுதானியங்கள், பல விதமான புரதம் நிறைந்த விதைகள், கீரைகளை உட்கொள்ளலாம். மொத்தமாக கார்போஹைட்ரேட் விஷம் என ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

100 கிராம் தினை அரிசியில் நார்ச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட் 50 கிராம் உள்ளது. 100 கிராம் தினையில் நெய் ஊற்றிச் செய்யும் மீன் சோறோ, பனீர் சோறோ ஒரு நாள் பேலியோ கட்டுப்பாட்டைத் தொந்தரவு செய்வதில்லை. உடலுக்கும் கேடு விளைவிப்பதில்லை. சிறுதானியங்கள் கெட்டதா என்று கேட்டால், பேலியோ முறையில் எடுத்துக்கொள்ளப்படும் தானியங்களின் அளவே அதைத் தீர்மானிக் கிறது. அல்லது உங்கள் உடலின் நிலையைப் பொறுத்து மருத்துவர் உதவி யுடன் சிறுதானியங்கள் சாப்பிடுவதைப் பற்றி முடிவு செய்வதே சிறந்தது.

தானியமின்றி வாழ்வது சாத்தியமல்ல

ஆதிகால மனிதர்கள் ‘இப்படி வாழ்ந்தார் கள், அப்படி உண்டார்கள்’ என்பதெல்லாம் அபத்தமான வாதம். ஆதிகால மனிதர்கள் பச்சையாகத்தான் கறியை உண்டார்கள். சுட்டுச் சாப்பிடுவது நடுவில்தான் வந்தது. நம் பேலியோ நண்பர்கள் பச்சையாகவா இறைச்சி உண்ணப் போகிறார்கள்?

திடீரென ஒரு நாள் காலை ஆதி மனிதன் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆதிகால மனிதர்கள் வாழ்வில் சுட்ட கறி எப்படி நுழைந்ததோ, அதே போலத்தான் மெல்ல மெல்ல காய்கறிகளும் கனிகளும் தானியங்களும் வேட்டைச் சமூகத்தின்போதே நுழைந்திருக்க வேண்டும். அந்த உணவு வகைகள் அவர்களுக்கு ஜீரணமாகி இருக்க வேண்டும், பிறகு மெல்ல மெல்ல அவர்கள் விவசாயம் பார்க்க முனைந்தார்கள்.

அப்புறம் எல்லா நாளும் வேட்டையாட முடியாது. எல்லா நாளும் இறைச்சியும் கிடைக் காது. அப்போது மனித சமூகத்தை அழியாமல் பாதுகாத்தது காய்களும் கனிகளும் தானியங்களும்தான். ஏறக்குறையே அனைத்து உணவு வகைகளும் ஆதிமனித இனத்துக்குப் பழக்கப்பட்டவைதான். பேலியோவுக்கு ஏற்ற காய்கள், கனிகள், விதைகள், கீரைகள் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு.

எது உண்மை பேலியோ?

பெருநிறுவனங்கள் தங்கள் சுயநலத்துக்காக எப்படிக் கொழுப்பைக் குற்றவாளி ஆக்கினவோ, அதற்கு நிகரானது கார்போஹைட்ரேட்டைப் பொதுமைப்படுத்திக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது.

நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் தமிழகத்தில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்தின. ஏனென்றால், அப்போது நார்ச்சத்து மிகுந்த மரபு தானியங்களை உண்டு வந்தனர். சிக்கல் தோன்றியது சமீபத்திய ஆண்டுகளாகத்தான். ஆனால், இன்று பெரும்பான்மையாக ஆக்கிரமித்திருக்கும் சக்கை உணவுகளுக்குப் பதிலாக பேலியோ உணவு முறை நல்ல மாற்று என்பதில் சந்தேகமில்லை.

நாம் ‘பேலியோ அடிப்படைவாதி’ ஆக வேண்டாம். விஞ்ஞான முறைப்படியே பேலியோவை அணுகலாம். சக்கை உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் உடற்பயிற்சி செய்வது, அதிக புரதம், நார்ச்சத்துகளை உட்கொள்வது, இனிப்பைத் தவிர்ப்பது என்பதே ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான். அதுதான் பேலியோவின் உண்மையான வெற்றி.

பேலியோ எதுவரை?

பேலியோ உணவு முறை விஞ்ஞானப்பூர்வமானதுதான். ஆனால், இதில் பெரிய அளவு ஆய்வுகள் நடப்பதில்லை. ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பேலியோ உணவு முறையில் இருக்கலாமா என்பது விவாதத்துக்கு உட்பட்டது. இது சார்ந்து பலருடைய கருத்து, சரியான உடல் எடையை நாம் அடைந்தவுடன் அல்லது நம் உடல் ஆரோக்கியம் அடைந்தவுடன், பேலியோவைக் கைவிட்டுவிட வேண்டும். சக்கை உணவைத் தவிர்த்த அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள், குறைவான சர்க்கரை உள்ள பழங்கள், அளவான புரதம்-கொழுப்பை உட்கொள்ளும் உணவு முறைக்குக் மாற வேண்டும் என்பதுதான்.

நம் உடல் உறுப்புகள் இளமையில் இருப்பது போன்றே, முதுமையிலும் இருப்பதில்லை. நாளாக நாளாக எளிமையான உணவை செரிக்கக்கூடிய தன்மையையே ஜீரண உறுப்புக்கள் பெற்றிருக்கும். அப்போது கொழுப்பு அதிகமுள்ள உணவு பிரச்சினை யாகும் என்பதைக் கவனத்தில் கொள்வோம்.

விஞ்ஞான முறைப்படி பேலியோவின் நன்மைகளை நாம் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை, அதேநேரம் அதை சர்வரோக நிவாரணியாக்கி, அதன் பலவீனங்களை மறைக்கவும் தேவையில்லை. மருத்துவர் உதவியுடன் கவனமாக பேலியோவைப் பழகலாம்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: thiruvinod4u@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x