Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

கதை சொல்வதில் மன்னன்

ஆப்ரஹாம் லிங்கன் யார் என்று கேட்டால், முன்னாள் அமெரிக்க அதிபர் எனப் பள்ளிக் குழந்தையும் சொல்லிவிடும். கொஞ்சம் வளர்ந்தவர்கள், ‘அவர் ஏழ்மை நிலையில் இருந்து ஒரு நாட்டுக்கே அதிபராக உயர்ந்தவர்’ என்று பகரலாம். இந்த மடுவுக்கும் மலைக்கும் இடையே அவர் பயணப்பட்ட பாதை, போராட்டம் நிறைந்தது. மிகச் சாதாரண இடத்தில் இருந்து கற்பனைக்கும் எட்டாத உயரத்தைத் தளராத தன்னம்பிக்கையாலும் அயராத முயற்சியாலுமே அவர் மெய்ப்பட வைத்திருக்கிறார்.

வேலைக்கு நடுவில் படிப்பு

ஆப்ரஹாமின் ஒன்பது வயதில் அவருடைய தாய் நான்ஸி இறந்துவிட்டார். அதன்பிறகு சாரா என்கிற விதவையை மணந்துகொண்டார் ஆப்ரஹாமின் தந்தை தாமஸ். உறுதியும் அன்பும் நிறைந்த சாராவுடன் மிக எளிதாக ஒட்டிக்கொண்டான் சிறுவன் ஆப்ரஹாம். தாமஸ், சாரா இருவருமே படிப்பு வாசனையற்றவர்கள் என்றாலும் தன் மகனைப் படிக்கச் சொல்லி உற்சாகமூட்டினார் சாரா. அந்தக் காட்டுப் பகுதியில் புத்தகங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. பல மைல்கள் நடந்து சென்று புத்தங்களை இரவல் வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம். ராபின்சன் க்ரூசோ, பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ், ஈசாப் கதைகளை விரும்பிப் படித்தார்.

சமூக அக்கறை

1830இல் இல்லினாய்ஸுக்குக் குடியேறியபோது சிறுவன் ஆப்ரஹாம், இளைஞனாக வளர்ந்திருந்தார். ஆறடி உயரமும் ஆஜானுபாகுவான உடலமைப்பும் கொண்ட லிங்கனுக்கு வேலை எளிதில் கிடைத்தது. தபால்காரர், நிலமதிப்பீட்டாளர், கடை உரிமையாளர் எனப் பலவித வேலைகளை அங்கே செய்தார். அவருடைய சமூக ஈடுபாடும் அக்கறையும் அந்தப் பகுதி மக்களிடையே லிங்கனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அரசியல் அறிமுகம்

அமெரிக்காவில் உள்நாட்டு கலவரம் மூண்டபோது, இல்லினாய்ஸ் பகுதி மக்கள் தங்கள் தலைவராக லிங்கனை முன்னிறுத்தினார்கள். அதுதான் அவரது அரசியல் நுழைவுக்கான முதல் துருப்புச்சீட்டாக அமைந்தது. அதன் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அடிமைத்தனத்துக்கு எதிரான தனது குரலைப் பதிவு செய்தார். அவருடைய இந்த அரசியல் பார்வை, மற்றவர்களிடம் இருந்து லிங்கனை வித்தியாசப்படுத்தியது.

இதற்கிடையே தானாகவே புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சட்டக் கல்வி பயின்றார். பார் கவுன்சில் தேர்வில் வெற்றிபெற்று, சில காலம் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். வேலையுடன் காதலும் வந்தது லிங்கனுக்கு. டைபாய்டு காய்ச்சலால் அவருடைய காதலி அன்னா ரட்லெஜ், திருமணத்துக்கு முன்பே இறந்துவிட்டார். அந்தத் தனிமையும், துயரமும் லிங்கனை வெகுவாகப் பாதித்தன. ஆனால், அதுதான் அவருக்கு ஆன்மப் பலத்தையும் தந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

திறமையான வழக்கறிஞர்

லிங்கனின் வலுவான வாதங்கள் அவரைச் சிறந்த வழக்கறிஞராக முன்னிறுத்தியதுபோல, அவருடைய சிறப்பான திட்டங்கள் அவரைச் சிறந்த அரசியல் தலைவராகவும் உயர்த்தின. தேசிய அரசியலிலும் தடம் பதித்தார். 1861ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16ஆவது அதிபராகப் பதவியேற்றார். திறமை மிகுந்தவர்களைத் தன் அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். அவர்களுக்கு, ‘நண்பர்களை உங்கள் பக்கத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள், எதிரிகளை அதைவிட அதிக நெருக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்றார். இந்த அணுகுமுறைதான் அவரை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.

விநோதப் பழக்கங்கள்

கம்பீரமும் கண்ணியமும் நிறைந்த லிங்கனின் இன்னொரு முகம் குறும்புத்தனங்கள் நிறைந்தது. ‘ஹானஸ்ட் ஆப்’ என்று பிரியமாக அழைக்கப்படும் லிங்கன்தான் அமெரிக்காவின் உயர்ந்த அதிபர். உயரம் ஆறு அடி 4 அங்குலம். அவர் மிகச்சிறந்த கதைசொல்லி. அவருடைய கதை சொல்லும் பாங்குதான் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது. லிங்கன், சிறந்த நகைச்சுவை மன்னனும்கூட. தாடி வைத்த முதல் அமெரிக்க அதிபரும் லிங்கன்தான். முக்கியமான கடிதங்கள், ஆவணங்களைத் தன்னுடைய நீண்ட தொப்பிக்குள் வைத்துக்கொள்ளும் பழக்கமும் இவருக்கு இருந்ததாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x