Last Updated : 02 Jun, 2017 09:57 AM

 

Published : 02 Jun 2017 09:57 AM
Last Updated : 02 Jun 2017 09:57 AM

கிரிக்கெட்டாக சச்சின் மாறிய கதை!

சச்சின் டெண்டுல்கர்....

கிரிக்கெட்டில் அறிமுகமானபோது பதின்ம வயதிலிருந்தவர்களில் தொடங்கி இன்றைய இளைஞர்கள்வரை எல்லோருக்குமே அவர் ஆதர்ச நாயகன். கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர் விளையாடிய காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே மறக்க முடியாத நினைவுகள். அந்தப் பொக்கிஷங்களுக்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்கும்? ‘சச்சின்- எ பில்லியன் ட்ரீம்ஸ்’ அந்த வடிவில்தான் ஓர் ஆவணப் படமாக மலர்ந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்காக சச்சின் எனக் கதை தொடங்கி கிரிக்கெட்டே சச்சினாக ஆனதைச் சொல்கிறது இந்த டைம் லைன் ஆவணப்படம்.

பொதுவாகப் பிரபலமானவர்களின் டைரிக்குள் மறக்க முடியாத பக்கங்கள் நிறைய இருக்கும். அந்தப் பக்கங்களுக்குள் நுழையும்போது பிரபலமானவருடைய சமகாலத்தவர்களுக்கு அது மறக்க முடியாத மலரும் நினைவுகளாக இருக்கும். சச்சினின் கதை அப்படித்தான். 1989-ல் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு சிறுவனாகச் செய்த சேட்டைகளில் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் ஓய்வு பெறும் வரை நடந்த சுவாரஸ்யமான பக்கங்கள் சுயசரிதை

யைப் போல விரிகின்றன. சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையை அனுதினமும் ஆராதித்தவர்களுக்கு அந்தப் பரவசமான பக்கங்களின் பின்னணி சிலிர்ப்பைத் தருகிறது.

எல்லோருக்குமே கனவு நிறைவேறிவிடுவதில்லை. அந்தக் கனவுக்குப் பங்கம் வராமல் பாதுகாத்து, உயிர் கொடுக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். சச்சின் டெண்டுகர் சிறுவனாக இருந்தபோது அண்ணன் மூலம் கிரிக்கெட் அறிமுகமாகி, 1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வசப்படுத்தும்போது, உலகக் கோப்பையைத் தாமும் ஏந்த வேண்டும் என்ற விதை சச்சினுக்குள் விழுகிறது. அந்தக் கனவு 22 ஆண்டுகள் கழித்து நிறைவேறும் தருணம், இடையே சிறுவனாக சச்சின், வினோத் காம்ப்ளியுடன் சேர்ந்த செய்த சாதனை, பொடியனாக சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்த தருணம், காதல், திருமணம், குழந்தைகள், இந்திய கிரிக்கெட்டின் முகமாகவே மாறியது, ஏமாற்றிய உலகக் கோப்பை ஆட்டங்கள், காயங்கள், மன வலிகள், புத்துயிர்ப்பு என எல்லாவற்றையுமே இந்தப் படம் பதிவு செய்திருக்கிறது.

சச்சின் தன் குடும்பத்தின் மீதும் தந்தையின் மீதும் வைத்திருக்கும் பாசமும் நம்பிக்கையும் விரிவாகவே காட்டப்பட்டிருக்கின்றன. ஒரு குடும்பமே இந்தியாவுக்கு சச்சினைத் தர உழைத்திருப்பதையும், அண்ணன் அஜயின் பங்களிப்பையும் படம் நன்கு பதிவு செய்திருக்கிறது. மட்டைக்கும் தனக்குமிடையேயான உறவை சச்சின் விளக்கும் விதம், அவரது பயணத்தில் குடும்பத்தினரின் பங்கு, கோச் ரமாகாந்த் அச்ரேக்கருக்கும் அவருக்கும் இடையே இருந்த உன்னதமான உறவு ஆகிய பதிவுகள் நெகிழ்ச்சிவூட்டுகின்றன.

சச்சினின் குழந்தைப் பருவ சேட்டைகளுக்குத் திரை வடிவில் உயிர் கொடுத்திருக்கிறார்கள். பதின்ம வயது கிரிக்கெட் வீரராக ஜொலித்த தருணத்தில் சச்சினின் அந்தக் கால பேட்டிகள், அவரது தனிப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது அழகு. சச்சினின் திருமண வீடியோ, குழந்தைகளுடனான சேட்டைகள் ஆகியவை சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையைத் தாண்டிய பக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஷேன் வார்ன் பவுலிங்கை எதிர்கொள்ளத் தனியாகப் பயிற்சி மேற்கொண்டது, 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 360 ரன்னை எட்ட சச்சின் போட்ட அட்டகாசமான ஐடியா போன்ற கிரிக்கெட் அறை ரகசியங்களும் ரசிக்க வைக்கின்றன.

சச்சினுடனான தங்களது அனுபங்களை விவியன் ரிச்சர்ட்ஸ், நாசர் ஹுசைன், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், க்ரீம் ஸ்வான் போன்ற வெளிநாட்டுப் பிரபலங்களுடன் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், விராட் கோலி போன்ற உள்ளூர் நாயகர்களும் பிரத்யேகமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பகிர்வுகள் பல முக்கியமான செய்திகளைச் சொல்கின்றன.

சச்சின் பற்றிய நினைத்தாலே சில ஆட்டங்கள் கண் முன் வந்துபோகும். ஷார்ஜாவில் 1998-ல் மணல் புயலுக்கு மத்தியில் சச்சின் ஆடிய ருத்ரதாண்டவ ஆட்டம், ஹென்றி ஓலங்காவின் பந்துகளுக்கு எதிரான சதிராட்டம், 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெளுத்துக்கட்டிய ஆட்டங்கள், ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக 200 ரன் அடித்த ஆட்டம் போன்றவை ஆவணப் படத்தில் தவறாமல் இடம் பெற்றுள்ளன.

கேப்டனாக ஜொலிக்க முடியாமல் போன பின்னணியில் இருந்த அணிசேரா விஷயங்கள், பூதாகரமாக வெடித்த கிரிக்கெட் சூதாட்டம், பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் அணுகுமுறை, மிக மோசமான 2007 உலகக் கோப்பை தோல்விகளுக்குரிய காரணங்கள், அது தன்னை பாதித்த விதம், காயங்கள் போட்ட தடைகள் போன்றவற்றையெல்லாம் சச்சின் சொல்கிறார். ஆனால், முதன் முதலாக ஒரு நாள் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கியதன் பின்னணியைச் சொல்லாமல் போனது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம், பாகிஸ்தானுக்கு எதிராக 193 ரன்னில் இருந்தபோது இரட்டைச் சதம் அடிக்க முடியாதபடி செய்யப்பட்ட டிக்ளேர் போன்ற முக்கியமான பதிவுகள் கண்டுகொள்ளப்படாமல் போனது ஏமாற்றம்.

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டதைச் சொல்லும் சச்சின், அதன் பிறகு 4 ஆண்டுகள் எடுத்த புதிய அவதாரங்களைச் சொல்லாமல் விட்டுவிட்டார். 2007-ம் ஆண்டுக்குப் பிறகு சச்சின் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உச்சகட்டமாக 2010-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான ஐசிசி விருதையும் பெற்றார். இந்திய அணி இதே காலகட்டத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கு சென்றது. இதுபோன்ற முக்கியமான தருணங்கள் ஆவணப் படத்தில் இல்லை.

சச்சின் டெண்டுல்கரின் நீண்ட பயணத்தில் எதை எடுப்பது, எதை விடுவது என்பதில் மிகப் பெரிய சிக்கல் இருந்திருக்கும். ஆனாலும் ஓர் ஆவணப்படத்தில் முக்கியமான தருணங்களைச் சொல்லாமல் விடும்போது அது முழுமை பெறாமல் போகும், என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கலாம்.

இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தாலும் சச்சினுடன் சேர்ந்து கால இயந்திரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தை ‘சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்’ கொடுக்கத் தவறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x