Published : 27 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:58 pm

 

Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:58 PM

“சிவாஜி வீட்டில் எனக்கு ரசிகர்கள்”

சின்னத்திரை தொகுப்பாளர்கள் வெள்ளித்திரையில் பிரபலமாவது இப்போதைய புது டிரண்ட். சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த், இமான் அண்ணாச்சி வரிசையில் அப்படி திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள புதிய சின்னத்திரை நட்சத்திரம் ஆதவன். ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகும் ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’’ நிகழ்ச்சியை வழங்கும் ஆதவன், சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் நடித்தார் மேலும்், ‘நம்பியார்’, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘சிகரம் தொடு’ என்று பல படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நட்சத்திரங்கள் தாவுவது இப்போது ஒரு ட்ரென்டாகவே ஆகிடுச்சே?


எல்லாருக்குமே சினிமா மீது ஒரு காதல் இருக்கும்தானே. அந்த காதல் எனக்கும் உண்டு. ரேடியோ சேனலில் ஆங்கராக பயணத்தை தொடங்கியவன் நான். பிறகு அங்கிருந்து சின்னத்திரைக்குள்ள வந்தேன். விஜய் டி.வியில ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலமா சின்னத்திரைக்கு நான் அறிமுகம் ஆனேன். ‘ கலக்கப்போவது யாரு மிமிக்ரி நிகழ்ச்சி சீசன் 3’ ல சிவகார்த்திகேயன் ஜெயிச்சாரு. நான் சீசன் - 4ல ஜெயிச்சேன். இந்த வெற்றிக்கு கிடைச்ச பரிசுதான் இப்போ போய்க்கிட்டிருக்குற ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி. இதுக்கெல்லாம் கிடைத்த நற்பெயர், பாராட்டுங்கதான் இப்போ தேடிவரும் சினிமா வாய்ப்புகள். நேரம் இப்போ என்னையும் பரபரப்பான நடிகனாக்கிடுச்சு.

இயக்குநராகணும்னுதான் சென்னைக்கு ஓடி வந்ததா கேள்விப்பட்டோமே?

ஓடி எல்லாம் வரலைங்க. சென்னையில் பொறியியல் துறை படிப்பை முடித்துவிட்டு வாய்ப்புதேடி வந்தேன். ‘குருவி’ படத்தை தரணி சார் இயக்கி முடித்த நேரத்துல அவர்கிட்ட சேர்ந்தேன்.

2 ஆண்டுகள் போச்சு. தனுஷ் நடித்த ‘3’ படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். இப்பவும் இயக்குநர் அவதாரம் உள்ளே ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. என் நடிப்பில் ஒரே டேக்கில் சில காட்சிகள் அழகா வந்துடும். உள்ளுக்குள்ள தூங்கிட்டிருக்குற இயக்குநர் ஆதவன்தான் இந்த வேலையை செய்றான் என்று நினைத்துக்கொள்வேன். கண்டிப்பா அதுவும் நடக்கும். பார்ப்போம் அதுக்கான சூழல் வரட்டும்.

சினிமாவில் காமெடி கேரக்டர்ல மட்டும்தான் நடிப்பீர்களா?

கவுண்டமணி, வடிவேலு என்று பார்த்து வியந்து ரசிக்கும் கலைஞர்கள் செய்த வேலையை செய்ய விருப்பமில்லாமல் இருக்க முடியுமா? ஆனால், முழுக்க அப்படி இருக்கக்கூடாது என்பதில் தெளிவா இருக்கேன். வரப்போகிற படங்களில் எல்லாமும் கலவையாத்தான் இருக்கும். குடிகாரனா நடிச்சிருக்கேன், ரொமாண்டிக் காதல் செய்திருக்கேன், கொஞ்சம் கொஞ்சம் காமெடியும் செய்திருக்கேன். பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும்.

தமிழ் நட்சத்திரங்களில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உங்களுக்கு இருக்காமே?

அதெல்லாத்துக்கும் காரணம் இந்த ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சிதான். அதோட முழு கிரியேட்டிவ் வேலைகளையும் கவனித்துக்கொள்ளும் கிருஷ்ணமூர்த்திதான். அவருக்கு நான் நன்றி சொல்லாம இருக்க முடியாது. இன்னைக்கு எத்தனையோ வெற்றிக்கு திரைக்குப் பின்னால் இருக்குறவங்கதான் காரணம். நானும், என்னை திரைக்குப் பின்னால் இருக்கும் நடிகன் என்று சொல்லிக் கொள்வதிவதில்தான் மகிழ்வேன். அப்படி கிடைத்த நிகழ்ச்சிதான் இது. நீங்க பார்க்குற 1-5 நிமிஷ வசனத்தை கிட்டத்த 1.45 மணி நேரம் ஷூட் செய்வோம். அதை அவ்ளோ அழகா எடிட் செய்து வியூவர்ஸ் முன் காட்டுவதால்தான் அந்த நிகழ்ச்சி ஹிட் ஆச்சு.

ரஜினி, விஜயகாந்த், பிரபு இவங்களோட பாதிப்பு என்னோட மிமிக்ரியில் நிறையவே இருக்கும். விஜயகாந்துக்கு கதை ரெடி பண்ணிட்டுத்தான் சினிமா பக்கமே வரணும்னு கோடம்பாக்கம் வந்த ஆள் நான். அதுக்குள்ள அவர் அரசியலுக்கு போய்ட்டார். இவங்களோட பாதிப்பு இல்லாமல் என் பாவனைகள் இருக்காது. அதை சந்தோஷமா நினைக்கிறேன். சமீபத்தில் வெளிவந்த ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’வில் கார்த்தி நடித்த பிரபு கேரக்டருக்கு நான்தான் டப்பிங் கொடுத்தேன். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்த பிரபு,

“எங்க வீட்டில் எல்லாரும் உன்னோட நிகழ்ச்சிக்கு ரசிகர்கள்!’’ என்றார். சிவாஜி வீட்டில் நாம் செல்லப்பிள்ளை என்ற சந்தோஷத்தில் இருந்து மீண்டு வரவே ரெண்டு, மூணு நாட்கள் ஆச்சு. அதேபோல ராதாரவி, சரத்குமார் எல்லோரும் பாராட்டியிருக்காங்க. இயக்குநர் ஷங்கருக்கு பர்த் டே வாழ்த்து எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். அதுக்கு ரிப்ளைல ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ நிகழ்ச்சி ரொம்ப அருமை என்று அனுப்பி இருந்தார். ஐ ஷூட்டிங் பிஸியிலும் இதையும் கவனிச்சிருக்காரே என்று பூரிப்பா இருக்கு.


ஆதவன்கொஞ்சம் நடிங்க பாஸ்இயக்குநர் ஷங்கர்பிரபுசிவாஜி வீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x