Last Updated : 02 May, 2017 10:41 AM

 

Published : 02 May 2017 10:41 AM
Last Updated : 02 May 2017 10:41 AM

உலக பாஸ்வேர்ட் தினம் மே 4: உங்களுடைய கடவுச்சொல் பத்திரமா?

இணைய வணிகம், ஃபேஸ்புக், இமெயில் என நமது அன்றாட பயன்பாட்டில் உள்ளவற்றின் கடவுச்சொற்களை (பாஸ்வேர்ட்) கடைசியாக எப்போது மாற்றினோம்?

கடவுச்சொல்லின் பயன்பாட்டைப் பரிசீலித்துத் திடமானதாக அவற்றை மாற்ற ‘உலகப் பாஸ்வேர்டு தினம்’ வாயிலாக அறைகூவல் விடுக்கிறார்கள் இணைய முன்னோடிகள். காரணம் விளையாட்டான அடையாளத் திருட்டில் தொடங்கி விவகாரமான அந்தரங்கப் பதிவுகள் கசிவதுரை அண்மைக்காலமாகக் கேள்விப்படும் செய்திகள் பலவற்றின் பின்னணியில் கடவுச்சொல் பராமரிப்பின் அலட்சியமே உறைந்திருக்கிறது.

நல்ல கடவுச்சொல் என்பது

இன்றைய இணைய உலகத்தின் உச்சபட்ச கறுப்பு வணிகத்தில் ஒன்று பயன்பாட்டாளர்களிடமிருந்து கடவுச்சொல்லைத் திருடுவது. தமது அடையாளங்களை மறைத்துக்கொண்டு பிறரது அடையாளங்களைத் திருடி பணம் பார்க்க முடியும் என்பதால் இணைய உலகில் பிஷ்ஷிங் (Phishing), விஷ்ஷிங் (Vhishing), ஹேக்கிங் (Hacking) என விதவிதமான திருடர்கள் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், நமது தகவல்கள், ஆவணங்கள், பதிவுகள், சமூகத் தொடர்புக்கான சாவியாக இருக்கும் நமது பாஸ்வேர்டுகளை பாதுகாப்பது எப்படி?

முதன்முதலில் கடவுச்சொல்லைப் பதிவிட வேண்டும் என்கிற நிலை வந்தபோது ‘Password’, ‘123456’ என்பவையாகவே பெரும்பாலோர் பதிவிட்டனர். இன்றும்கூடச் செல்லப் பிராணி, பிடித்த பிரபலங்களின் பெயர்களைக் கடவுச்சொல்லாகக் குறிப்பிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர் வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பதே நல்லது. மாறாக, எவராலும் கண்டுபிடிக்க முடியாத கடினமான கடவுச்சொல்லை உருவாக்குகிறேன் பேர்வழி எனப் பிற்பாடு அவற்றை நினைவுகூர்வதில் தடுமாறித் தவித்தவர்கள் அதிகம்.

தனக்குச் சுலபமானதாக, பிறர் ஊகிக்கக் கடினமானதாக இருப்பதே நல்ல கடவுச்சொல்லுக்கு இலக்கணம். இந்தப் பாஸ்வேர்டையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது முக்கியம். குறிப்பாகத் தனிப்பட்ட உபயோகத்திற்கான கணினி அல்லாது பொது இடங்களில் மற்றும் அலுவலகம் மற்றும் நண்பர்களின் கணினிகளில் பாஸ்வேர்டை உள்ளிடுபவர்கள், முடிந்தவரை உடனுக்குடன் அவற்றை மாற்றி விடுவது நல்லது.

மாற்றம் தேவை

முதலாவதாக, இமெயில், ஃபேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும் ஒரே கடவுச்சொல்லை உபயோகிக்கக் கூடாது. அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.

பல அடுக்கு அரண்கள்

பாதுகாப்புக்கு எனப் பாஸ்வேர்டினை மட்டும் நம்பியிருக்காது, உடன் கிடைக்கும் பல அடுக்கு அரண்கள் உபயோகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குச் செட்டிங்க்ஸ் உதவியுடன் நமது உள் நுழைகை, கடைசியாகப் பயன்படுத்தியது, பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட ஒவ்வொரு சிறு நகர்வையும் நமக்குத் தெரிவிக்கச் செய்யுமாறு கட்டமைத்துக் கொள்ளலாம். வங்கிப் பரிவர்த்தனைக்கான ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ உபயோகத்தை இமெயில் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளுக்கும் உதவுமாறு செய்யலாம்.

இணையத் திருட்டைத் தடுக்கப் படிக்கலாம்!

பல்வேறு இணையக் கணக்குகளை உடைத்து அவற்றின் கடவுச்சொல்லைக் கைப்பற்றும் ‘கிரிமினல் ஹேக்கர்ஸ்’ எல்லா நாடுகளிலும் உண்டு. அவர்கள் கையாளும் அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இணையப் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள் ‘எத்திக்கல் ஹேக்கர்ஸ்’. பிரபல நிறுவனங்கள் பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் ஓட்டைகளை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை பணிக்கு அமர்த்துகின்றன. பகுதி நேரமாகத் தங்களது திறமையைக் காட்டுபவர்களுக்கு ஆச்சரியமூட்டும் சன்மானங்களை வழங்குகின்றன. இணையப்பெருவெளியின் ஜேம்ஸ்பாண்டுகளாக வலம் வரும் பெருமையும் சேர்ந்துகொள்வதால், இளம்வயதினர் மத்தியில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் தொடர்பாகப் படிக்க ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் `தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்’ என்ற பெயரில் எத்திக்கல் ஹேக்கர்ஸ் பணியமர்த்தப்படுகின்றனர். அரசின் பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் துறை ஆகியவற்றுடன் வங்கி மற்றும் காப்பீட்டு துறைகள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவை இந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகள் பலவற்றிலும் எத்திக்கல் ஹேக்கிங் தனித் தாளாகவே பயிற்றுவிக்கப்படுகிறது.

எங்கே படிக்கலாம்?

பொறியியல் பட்டம் அல்லது எம்.எஸ்சி. கணிதம் அல்லது எம்.சி.ஏ. முடித்தவர்கள், எம்.இ., ஐ.டி. படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி பெற்ற பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இவை பயிற்றுவிக்கப்படுகின்றன. அலகாபாத் ஐ.ஐ.டி., காஜியாபாத் ஐ.எம்.டி., மும்பை மற்றும் சண்டிகரில் இயங்கும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, புது டெல்லியில் செயல்படும் எத்திக்கல் ஹேக்கிங் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்குக்கு எனத் தனியாகப் பல்வேறு வகை படிப்புகளை வழங்குகின்றன.

இவை தவிர்த்து எத்திக்கல் ஹேக்கிங்கில் பட்டயம், சான்றிதழ் படிப்புகளையும் ஏராளமான நிறுவனங்கள் வழங்குகின்றன. கொல்கத்தாவில் செயல்படும் `இந்தியன் ஸ்கூல் ஆஃப் எத்திக்கல் ஹேக்கிங்’ பல்வேறு நடைமுறை பயிற்சி வகுப்புகளுடன் கூடிய படிப்புகளை வழங்குகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் ஆன்லைனிலும் பயிற்சி வகுப்புகளை வழங்குகின்றன. கோடைகால பயிற்சி வகுப்புகளும் உண்டு.

கூடுதல் தகவல்களுக்கு: >https://www.isoeh.com/index.html

சட்ட நுணுக்கம்

இணையப் பயன்பாடுகள் அதிகரித்து வரும் இந்தியாவில், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இதர நாடுகளைவிட மிகவும் குறைவு. இதனால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை இங்கு மிகவும் அதிகம். நம் நாட்டில் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் மீது 3 ஆண்டு சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் எனத் தண்டனை கிடைக்கத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66சி மற்றும் 66டி ஆகியவை வழி செய்கின்றன. ஆனால் அடையாளத் திருட்டில் ஈடுபடுவோர் நவீனத் தொழில்நுட்பம் உதவியுடன் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாலும், நிழலுலகத் தொடர்பின் மூலம் வெளிநாடுகளில் இருந்தபடி குற்றங்களை நிகழ்த்துவதாலும் எளிதில் சிக்குவதில்லை. எனவே நமது பாதுகாப்பை நாமாக உறுதி செய்துகொள்வதே உசிதமானது.

அடையாளத் திருட்டைத் தவிர்க்க

1. உங்களது கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்ட்டி வைரஸ் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை நிறுவுவது.

2. சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது. சாட் மற்றும் நட்பு வட்டாரத்தினரின் உரையாடல்களில் எச்சரிக்கை பேணுவது.

3. வலை வீசும் குப்பை மெயில்களை அவ்வப்போது அடையாளங்கண்டு அழிப்பது.

4. சந்தேகத்துக்கு இடமான இணையத் தளங்கள், மெயில்கள், வங்கி பெயரிலான அழைப்புகளைத் தவிர்ப்பது.

5. பொது இடங்களில் கிடைக்கும் வைஃபை இணைய இணைப்புகள் வைரஸ் மற்றும் மனித ஊடுருவலுக்கு வாய்ப்பளிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.

மாற்றத்துக்கான நாள்

உலகமெங்கும் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன், உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் (நடப்பாண்டு மே-4) அன்று கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அது குறித்த விழிப்புணர்வினைப் பரப்புவதோடு, இணையப் பயனர்கள் நேரம் ஒதுக்கித் தமது பாஸ்வேர்டுகளை புதிதாகச் சீரமைத்துக் கொள்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x