Published : 28 Mar 2017 10:37 am

Updated : 16 Jun 2017 14:07 pm

 

Published : 28 Mar 2017 10:37 AM
Last Updated : 16 Jun 2017 02:07 PM

சேதி தெரியுமா? - தமிழகத்துக்கு விஜய் ஹசாரே கோப்பை

தமிழ்நாடு கிரிக்கெட் அணி 2017-ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பையைக் கைப்பற்றியது. இந்தக் கோப்பையை ஐந்தாவது முறையாகத் தமிழகம் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முன்னர் 2002-03, 2004-05, 2008-09, 2009-10 ஆகிய ஆண்டுகளிலும் தமிழக அணியே விஜய் ஹசாரே கோப்பையைத் தட்டிச் சென்றது. இறுதிப் போட்டி, டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்காள அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தமிழ்நாடு கோப்பையைத் தன்வசமாக்கியிருக்கிறது. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 217 ரன்களை எடுத்திருந்தது. 218 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த வங்காள அணியை தமிழக அணி 180 ரன்களிலேயே சுருட்டிவிட்டது. இந்த ஆட்டத்தின் நாயகனாக தமிழக வீரர் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு 122-ம் இடம்


உலக மகிழ்ச்சி அறிக்கை 2017 என்னும் ஓர் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சபை அமைப்பு, சர்வதேச மகிழ்ச்சி தினமாகக் கொண்டாடப்படும் மார்ச் 20 அன்று வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக 157 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களிடையேயான சமத்துவம், ஆயுள் காலம், தனிநபர் வருமானம், வர்த்தகத்திலும் அரசியலிலும் ஊழலற்ற தன்மை போன்றவற்றின் அடிப்படையில் எந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதைக் கணிப்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 122-ம் இடத்தையே பிடித்திருக்கிறது. முதலிடத்தை நார்வே பிடித்துள்ளது. பெரும்பாலான தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை மோசமாகவே உள்ளது. பாகிஸ்தான் (80), நேபாளம் (99), பூடான் (97), வங்க தேசம் (117), இலங்கை (120) போன்ற நாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு முந்தைய ஆய்வின்போது, 118-ம் இடத்திலிருந்த இந்தியா இப்போது 122-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சைகை மொழிக்கு ஓர் அகராதி

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர் ஆகியோருக்கான அகராதி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுவருகிறது. காது கேட்கும் திறனற்ற, வாய் பேச முடியாதவர்களிடையே தகவல் தொடர்பைப் பேணுவதற்காக இந்தியா முழுவதும் ஒரே விதமான சைகை மொழியை உருவாக்கும் எண்ணத்துடன் இந்த அகராதி தயாரிப்புப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகராதியானது அச்சு வடிவத்திலும், வீடியோ வடிவத்திலும் தயாராகிறது. இந்திய சைகை மொழிக்கான ஆய்வு மற்றும் பயிற்சி மையம் இந்த அகராதியை உருவாக்கிவருகிறது.

செவித் திறன் குறைபாடுள்ள 50 லட்சம் பேருக்கும், பேச்சுக் குறைபாடுள்ள 20 லட்சம் பேருக்கும் இந்த அகராதி பயனளிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். விரைவில் இந்த அகராதி பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. இதுவரை 6,000-த்துக்கும் மேற்பட்ட இந்தி, ஆங்கிலச் சொற்களுக்கான சைகைக் குறிப்புகளை விளக்கும் சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று காலமானார். இதை அடுத்து அந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருக்கான இடம் காலியானது. அதை நிரப்புவதற்காகத் தேர்தல் ஆணையம் ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மார்ச் 9 அன்று அறிவித்தது. இந்தத் தொகுதியில், அதிமுக சசிகலா அணி சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும், தி.மு.க. சார்பாக மருது கணேஷ் என்பவரும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள்.

வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16 அன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் மார்ச் 23. அதிமுகவின் இரு அணியினரும் அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரிய நிலையில் தேர்தல் ஆணையம் தற்போதைக்கு அந்தச் சின்னத்தையும் கட்சியின் பெயரையும் முடக்கிவைத்துள்ளது.சேதி தெரியுமாபொது அறிவு தகவல்கள்சென்ற வார செய்திகள்தமிழக கிரிக்கெட் அணிவிஜய் ஹசாரே கோப்பைஉலக மகிழ்ச்சி அறிக்கைசைகை மொழி அகராதிஆர்.கே. நகர் தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x