Published : 29 Oct 2018 11:32 AM
Last Updated : 29 Oct 2018 11:32 AM

வாகன விற்பனைக்கு உதவும் நட்சத்திரங்கள்

சமீபத்தில் ஒரு கார் விளம்பரம், அந்த புத்தம் புதிய காரிலிருந்து ஒரு சினிமா நட்சத்திரம் இறங்கி வருவார். பல திசைகளிலிருந்து அந்த காட்சி புகைப்படம் எடுக்கப்படும். சினிமா நட்சத்திரம் பெருமையாக நடந்து வர வர, புகைப்படக் காரர்கள் வளைத்து வளைத்து அந்த காரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். சினிமா நட்சத்திரத்தின் ஈர்ப்பைவிட, அந்த காரின் ஈர்ப்பு விசை உங்கள் கவனத்தை திரும்பும் என்பதை சொல்லாமல் சொல்லியது அந்த விளம்பரம்.

இது சும்மா விளம்பரத்துக்குத்தான். ஆனால் நிஜமாகவே கார்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டுமெனில் நிறுவனங்களுக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை தேவைப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். வாடிக்கையாளர்கள் சட்டென ஒரு புதிய பிராண்டை திரும்பிப் பார்க்க வேண்டுமெனில் மக்களிடம் பிரபலமான ஒரு நட்சத்திரம் அதை அறிமுகம் செய்ய வேண்டும்.  

இந்த உளவியலை, உலகியலை கிட்டத்தட்ட அனைத்து பொருட்களுக்கும் நிறுவனங்கள் கடைபிடிக்கவே செய்கின்றன.  மோட்டார் சைக்கிள்களுக்கும், கார்களுக்கும், வர்த்தக வாகனங்களுக்கும் இவை தேவையா? அல்லது தேவையாக உள்ளதா? என்பதும் தீர்க்க முடியாமல்தான் உள்ளது.

சந்தையில் பெருவாரியான பிராண்ட் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லும் வாகனமாக பிரபலங்களை பயன்படுத்துகின்றன என்பதை மறுக்கமுடியாது. அந்த வகையில் மிக சமீபத்தில் முக்கிய மூன்று ஆட்டோமொபைல் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், நிசான் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்யவும், பிராண்ட் தூதர்களாகவும் சில நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துள்ளன.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது ஹீரோ எக்ஸ்ட்ரீம் மாடலுக்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் கை கோர்த்துள்ளது. நிசான் நிறுவனம் புதிய டட்சன் மாடலுக்காக அமீர்கானை ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட டாடா டிகோர் மாடலுக்காக ஹிர்திக் ரோஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது பிராண்டை பிரபலப்படுத்த இந்த நட்சத்திரங்களின் தேவை என்னவாக இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. சந்தையின் தேவை அறிந்து புதிய புதிய பிராண்டுகளை கொண்டுவந்தாலும், நிலவும் போட்டி மிகக் கடுமையாக உள்ளது என்பதால் இந்த வழியை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அதிலும் இரண்டு விதமான நிலைகள் இருக்கவே செய்கின்றன.

இரு சக்கர வாகன சந்தையில் பெரும்பான்மை சந்தையை வைத்திருந்தாலும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு விராட் கோலி தேவையாக இருக்கிறார். சமீபத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 ஆர்மாடலுக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனமோ, நட்சத்திரங்களின் பின்புல உதவிகள் இல்லாமல் இந்திய சந்தையில் வளர்ந்து வருவதை இதன் பின்னணியில் புரிந்து கொள்வதும் நல்லது.

ஸ்கூட்டர்களுக்கான சந்தையில் ஹீரோ பல முயற்சிகளை செய்துள்ளது. சந்தையை முதலில் கைப்பற்றிய சாதகம் இருந்தாலும், புதிய புதிய  பிராண்டுகளின் தாக்கத்தில் நிற்கமுடியாமல் தடுமாறிய காலம் ஹீரோவுக்கு ஏற்பட்டுள்ளது.  அதன்பின்னர்தான் மேஸ்ட்ரோ பிராண்டுக்கு ரண்பீர் கபூரை விளம்பரத் தூதராக கொண்டு வந்தது. இதன் பின்னர் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனை அதிகரித்ததை புள்ளிவிவரங்கள் பதிவு செய்துள்ளன.

ஆனால் அமெரிக்காவில்  ஒரு திரை நட்சத்திரம் ஒரு காரை விளம்பரப்படுத்துகிறார் என்றால், அந்த காரை அவர் ஓட்டிப் பார்க்க வேண்டும். அதன் பின் அந்த கார் எப்படி இருந்தது என்று அவர் கூறுவதன் அடிப்படையிலேயே அந்த காரை விளம்பரம் செய்வார்கள். ஆனால், இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் இல்லை.  ஒரு இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய சச்சின் டெண்டுல்கர்  ஒப்பந்தம் செய்யப்படுகிறார் என்றால்,  அவருக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை.  உண்மையில் அவருக்கு இரு சக்கர வாகனமே ஓட்ட தெரியாது என்றும் சொல்கிறார்கள்.

அதேநேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்டார்சிட்டியை விளம்பரப்படுத்த தோனி களமிறக்கப்பட்டார். அவர் பைக் ரைடர் என்பது அவரது ரசிகர்களுக்கு நன்கு தெரியும். எனவே டிவிஎஸ் ஸ்டார் சிட்டி விற்பனை அதிகரித்திருக்கலாம்.  ஆனால் இந்த விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நாயகர்கள் எந்த அளவுக்கு பொறுப்பேற்கிறார்கள் என்பதும் முக்கியமான கேள்வி.  

பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ரூ.50 லட்சம் முதல் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட விதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நட்சத்திரங்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும். அல்லது இந்த சட்டம் வராமலேயே போகலாம்.

ஆனால் இதன் உண்மைத் தன்மை என்ன என முன் காலத்தை போல, தங்களது ஆஸ்தான நட்சத்திரம் சொன்னால் அந்த வார்த்தையை நம்பும் வாடிக்கையாளர்கள் இப்போது இல்லை. இப்போதைய வாடிக்கையாளர்கள் விளம்பரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்கிறார்கள். தங்களின் தேவை என்ன என்பதில் தெளிவாக உள்ளனர். எனினும் இந்திய வாகன விற்பனை சந்தை நட்சத்திரங்களின் ஜொலி ஜொலிப்பில்லாமல் இல்லை என்பதும் உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x