Last Updated : 22 May, 2018 07:04 PM

 

Published : 22 May 2018 07:04 PM
Last Updated : 22 May 2018 07:04 PM

உடல் எனும் இயந்திரம் 24: தலைமுடி

 

திகாலத்தில் ஆடை இல்லாத மனிதன் கடுமையான குளிர், வெயில், காற்று போன்ற சூழல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், கீழே விழும்போது காயம் படாமல் தப்பித்துக்கொள்ளவும் உருவானதுதான் முடி.

மனிதன் ஆடையை அணியத் தொடங்கிய பிறகு முடியின் தேவை குறைந்துபோனது. ஒரு காலத்தில் உடல் முழுவதும் முடியிருந்த மனிதனுக்கு, தற்போது தலையில் மட்டுமே அடர்த்தியாக உள்ளது. பதின்பருவ உடலில் சுமார் 50 லட்சம் முடிகள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் முடிகள் கழுத்துக்கு மேல் இருக்கின்றன. இமை, புருவம், காது, மூக்கு, அந்தரங்க உறுப்புக்குள் இருக்கும் முடிகள் தூசு, கிருமி, பூச்சி போன்றவை சென்றுவிடாதபடி தடுக்கின்றன.

முடி என்பது ஒரு புரத இழை. சருமத்துக்கு வெளியில் நாம் பார்க்கும் பகுதி ‘முடித்தண்டு’ (Shaft). தோலின் அடிப்பகுதியில் புதைந்திருக்கிறது ‘முடி வேர்’ (Root). இதன் கீழ்ப்பகுதியில் ‘முடிக்குமிழ்’ (Hair bulb) உள்ளது. இதிலுள்ள செல்களிலிருந்து முடிக்கால் (Hair Follicle) முளைத்து, சருமத்தை நோக்கி வளர்கிறது. இதுதான் முடித்தண்டாகச் சருமத்துக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. முடித்தண்டில் ரத்தக்குழாய்களோ நரம்புகளோ இல்லை என்பதால், முடியை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

shutterstock_274358651 [Converted]_col

முடியானது மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. ‘க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்பது வெளிப்பகுதி. இது ‘கெரட்டின்’ எனும் செல்களால் ஆனது. இதில் பல படலங்கள் உண்டு. இது எத்தனை படலங்களால் ஆனது என்பதைப் பொறுத்து ஒருவருடைய முடியின் கனம் மாறுகிறது. ‘கார்டெக்ஸ்’ (Cortex) என்பது நடுப்பகுதி. இதில்தான் ‘மெலனின்’ எனும் நிறமிப் பொருள் உள்ளது. முடி கருகருவென்று இருந்தால், அந்த முடியில் மெலனின் அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருக்கிறது என்று அர்த்தம். முடிக்கு மிருதுத்தன்மையைக் கொடுப்பதும் வளையும் தன்மையைத் தருவதும் இந்தப் பகுதிதான். மெலனின் குறைந்தால், முடி நரைக்கிறது.

‘மெடுல்லா’ (Medulla) என்பது உள்பகுதி. இதன் அடியில்தான் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஹார்மோன் போன்றவற்றை வழங்குகின்ற ரத்தக் குழாய்களும், தொடு உணர்வைத் தருகின்ற நரம்புகளும் இருக்கின்றன. நடுத்தோலில் முடியைச் சுற்றி இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் முடியைப் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கின்றன. முடி நிமிர்ந்திருக்க ‘எரெக்டார் பைலை’ (Arrector pili) தசைகள் பயன்படுகின்றன.

முடி எப்படி வளர்கிறது?

ஒரு செடி வளர்வதைப்போல் முடி தொடர்ச்சியாக வளர்வதில்லை. முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள்வரை நீடிக்கும். அடுத்தது ‘கெட்டாஜன்’ (Catagen). இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரங்கள். வயதானவர்களுக்கு இது 17 வாரங்களுக்குக் குறைந்துவிடும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. பெண்கள் தலை சீவும்போது 20 முடிகள்வரை கழிந்தால் கவலைப்பட வேண்டாம். இதற்கு மேல் முடி உதிர்கிறது என்றால் அதைக் கவனிக்க வேண்டும்.

shutterstock_711069928 [Converted]_colright

பெரும்பாலான விலங்குகளுக்கு முடியானது கரடுமுரடாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது. அவற்றின் முடிகளுக்குத் தொடுவுணர்வு உண்டு. இதன் பலனாக அவை இருட்டான இடங்களுக்கும் செல்ல முடிகிறது. பல விலங்குகளுக்கு அவை வாழும் சூழலுக்கு ஏற்ற வகையில் முடியின் நிறம் அமைந்துள்ளது. இது எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. விலங்குகளில் முள்ளம்பன்றியின் முடி மட்டும் தனித்துவமானது. நீண்ட முட்களாக உள்ளது.

தலைமுடி உதிர்வது ஏன்?

முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிரத் தொடங்கிவிடும். டைபாய்டு, மன அழுத்தம் போன்ற நோய்கள், சில மருந்துகள், ஹார்மோன் குறைபாடுகள் காரணமாகவும் தலைமுடி உதிர்கிறது.

குளித்த பின் ஈரம் காய்வதற்குள் தலை வாருதல், வீரியம் மிகுந்த அல்லது தரம் குறைந்த ஷாம்பூகளைப் பயன்படுத்துதல், அடிக்கடி முடியை பிளீச் செய்தல், தரமற்ற தலைச்சாயங்களைப் பூசுதல், கடினமான சீப்புகளைப் பயன்படுத்துதல், ஹேர் டிரையரை அதிகமாகப் பயன்படுத்துதல், தலைமுடியை இறுக்கமாகக் கட்டுதல் போன்றவை தலைமுடி உதிர்வதற்கு முக்கியக் காரணம்.

அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, பால், பால் பொருள்கள், முழுத் தானியங்கள், சோயாபீன்ஸ், காளான், ஆரஞ்சு, முந்திரி, பாதாம், வாழைப்பழம், மீன், ஈரல் போன்ற உணவு வகைகளைச் சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு வளரும்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x