Last Updated : 15 Apr, 2018 12:48 PM

 

Published : 15 Apr 2018 12:48 PM
Last Updated : 15 Apr 2018 12:48 PM

புதிய பகுதி: வண்ணங்கள் ஏழு

 

னிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆனால், குடும்பத்தாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்படும் பாலினச் சிறுபான்மையினர் ஒவ்வொருவருமே தங்களைப் போல் தனிமைப்படுத்தப்படுபவர்களை ஒருங்கிணைத்துத் தோப்பாகின்றனர். பிறக்கும்போது ஆண், பெண், இடையிலிங்கம் ஆகியவற்றில் ஏதாவதொரு பிரிவில் பிறப்பவர்கள் வளரும்போது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப திருநங்கையாகவோ திருநம்பியாகவோ இவற்றுக்கு இடைப்பட்ட பாலின அடையாளங்களுள் ஏதாவது ஒன்றாகவோ மாறுகின்றனர். இவர்களையும் உள்ளடக்கியதே நம் சமூகம். இவர்களது உரிமையும் மனித உரிமையே இவர்களின் வாழ்க்கை, அவர்கள் கடந்துவந்த பாதை, போராட்டம், நம்பிக்கை, காதல், எதிர்காலம் குறித்த கனவுகள், அவற்றுக்கான திட்டமிடல்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசும் பகுதி இது.

குடும்பப் புறக்கணிப்புதான் சமூகத்தில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை. உறவுகளுக்கு ஏங்கும் அவர்கள் தங்களுக்குள் தாய், மகள் உறவை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த நடைமுறையையும் தாண்டி, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார் திருநங்கை அர்ச்சனா. கோயம்புத்தூரில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிவருகிறார் திருநங்கை பத்மினி. பரதநாட்டியக் கலைஞரான இவர் தன் கணவர் பிரகாஷுடன் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறார். சக திருநங்கைகளின் போராட்டத்தாலும் ஆதரவாலும் பிரித்திகா யாஷினி போன்றோர் தங்களுக்கான பணி உரிமையைப் போராடிப் பெற்றிருக்கின்றனர். பிசியோதெரபிஸ்ட் செல்விக்கு அரசு மருத்துவமனையில் நிரந்தரப் பணி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, திருநங்கைகள் சமூகம் உயர்ந்துவிட்டது என்று கூற முடியாவிட்டாலும் ஆங்காங்கே தென்படும் சில வெளிச்சப் புள்ளிகள் நம்பிக்கை தருகின்றன.

ஊடகங்களின் பங்கு

பாலினச் சிறுபான்மையினரில் திருநங்கைகள் பற்றிய புரிதல் தற்போது சற்று அதிகரித்திருக்கிறது. குடும்ப அட்டை, நலவாரியம், உதவித்தொகை போன்ற அரசு நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சமூக ஊடகங்களிலும் திரைப்படத் துறையிலும் தங்களது படைப்புகளின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்த மாற்றம் பாலினச் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். வணிகரீதியான திரைப்படங்களை எடுப்பதோடு, திருநங்கைகளுக்கு ஆதரவாக ‘ஸ்டாண்ட் பை மீ’ பிரசாரத்தையும் ‘சதையை மீறி’ இசைப் படத்தையும் இயக்கி வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி, திருநங்கைகளை மதிப்புமிக்க கதாபாத்திரங்களாகத் திரைப்படத்தில் சித்தரித்த இயக்குநர்கள் சீனு ராமசாமி (தர்மதுரை), அருண் பிரபு (அருவி) மம்மூட்டி நடிக்கும் ‘பேரன்பு’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கும் இந்தியாவின் முதல் திருநங்கை அஞ்சலி அமீர் போன்றோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

திருநங்கைகள் மாநாடு

tg banner100 

திருநங்கைகள் தினமான இன்று வேலூரில் திருநங்கைகள் மாநாடு நடக்கிறது. ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்கும் இந்தக் கலை விழாவில் தென்னிந்திய அளவில் அழகிப் போட்டி நடந்தாலும், அதைத் தாண்டி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சில தீர்மானங்களையும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல இருப்பதாகச் சொல்கிறார் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கும் திருநங்கை கங்கா நாயக்.

எதிரொலிக்கவிருக்கும் தீர்மானங்கள்

திருநங்கை சமூகத்தில் நிறைய பேர் படித்திருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசுத் துறைகளில் அதிகரிக்க வேண்டும்.

உயர் கல்வி படிக்க விரும்பும் திருநங்கைகளுக்குக் கல்லூரிகளில் முறையாக இடம் ஒதுக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.

புதுவையில் வழங்கப்படுவதுபோல் ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

மாநகராட்சிப் பணிகளைச் செய்ய விரும்பும் திருநங்கைகளுக்கு அந்தப் பணிகளை வழங்க வேண்டும்.

பள்ளிச் சான்றிதழ்களில் தாங்கள் விரும்பும் பாலினத்தைக் குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

பாலினச் சிறுபான்மையினர் குறித்து வெவ்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும் அவர்களைப் பற்றிய கற்பிதங்கள் இன்னும் முழுமையாக அகலவில்லை. அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வது புரிதலுக்கான முக்கியமான வழிகளில் ஒன்று. அதை நோக்கிப் பயணிப்போம்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x