Published : 07 Jun 2023 04:32 PM
Last Updated : 07 Jun 2023 04:32 PM

சோறு முக்கியம் மக்களே

வ்வோர் ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அசுத்தமான உணவு, தண்ணீரால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இது உருவாக்கப்பட்டது. சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.

உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது எப்படி உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பதுதான் இந்த ஆண்டின் கருப்பொருள். ஐ.நா. சபையும் பிற அமைப்புகளும் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் வகையிலும் ஐந்து ஆண்டுகளாக இது கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் பத்துப் பேரில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 4,20,000 பேர் இதனால் இறக்கின்றனர். கிருமிகள், ரசாயனங்கள் கலந்த மோசமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இவை புற்றுநோயைக்கூட உண்டாக்கும். கிட்டத்தட்ட 40% குழந்தைகள் மோசமான உணவால் நோய்வாய்ப்படுகிறார்கள். அவர்களில் 1,25,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர். ‘EatRite India’ என்பது இந்திய அரசாங்கமும் இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்தியாவில் உள்ள மக்கள் பாதுகாப்பான, ஆரோக்கியமான, நிலையான உணவு உட்கொள்வதை உறுதிசெய்யும் திட்டம். ‘ஆயுஷ்மான் பாரத்’, ‘போஜன் அபியான்’ போன்ற பிற திட்டங்களுடன் இது செயல்படுத்தப்படுகிறது.


உணவு சுகாதாரத்தின் ஐந்து கொள்கைகள்

1. மனிதர்கள், செல்லப்பிராணிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து வரும் கிருமிகள் நம் உணவில் நுழைந்து நம்மை நோய்வாய்ப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. நாம் சமைக்கும் உணவு, சமைக்கப்படாத எந்த உணவோடும் கலக்காமல் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
3. சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமனா சமையல் பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.
4. உணவைச் சரியான வெப்பநிலையில் வைத்திருந்தால் அது சாப்பிடுவதற்கு உகந்த வகையிலும் கெடாமலும் இருக்கும்.
5. உங்களையும், உங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
உணவுப் பாதுகாப்பு முக்கியமானது. அது, உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பதுடன் ஒவ்வாமை, அது தொடர்பான சிக்கல்களிலிருந்தும் பாதுகாத்து நம் உயிரைக் காப்பாற்றும்.

- ஆஷிகா குமார், பயிற்சி இதழாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x